
நாடு முன்னேறுது, நாடு முன்னேறுது என திரும்ப திரும்ப விளம்பரப்படுத்தப்படுகிறது. இந்த விளம்பர உத்தியால் நாடு முன்னேறிவிட்டது என மக்களை நம்பும்படியான முயற்சி யில் சிறிது வெற்றியும் பெற்றுள்ளது ஆளும் வர்க்கங்கள். என்னத்தான் வறுமையை மறைக்க முயன்றாலும், உண்மை நிலை அதற்கு மாறாக உள்ளது.
30 கோடி பேர் வறுமையில் இருப்பதாகவும், நாட்டில் 45 கோடி பேர் சராசரியாக மாதம் 447 ரூபாய்க்குள் வாழ்க்கையை ஓட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் என்றும் அரசு ஆய்வு சொல்கிறது. மேலும் விவரங்களுக்கு 11 டிசம்பர் வெளியான தினகரன் தலையங்கத்தை பார்க்கவும்.
தினகரன் தலையங்கம்:இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைகிறது. கடந்த பல ஆண்டுகளாக இது தொடர்கிறது. வெளிநாடுகளும் உலக வங்கியும் அதற்காக இந்திய அரசை பாராட்டுகின்றன. ஆனால், இந்திய மக்களின் பொருளாதாரம் முன்னேறவில்லை. ஏழைகளின் எண்ணிக்கை குறையவில்லை. மாறாக அதிகரித்திருக்கிறது. மூன்றில் ஒரு இந்தியன் வறுமையில் வாடுவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இது அதிர்ச்சியான செய்தி. 2004 ஏப்ரல் தொடங்கி அடுத்த ஆண்டு மார்ச் வரையிலான காலகட்டத்தில் அரசு ஓர் ஆய்வு நடத்தியது. 30 கோடி பேர் வறுமையில் இருப்பதாக அதில் தெரியவந்தது. ஜனத்தொகையில் அது 27+ சதவீதம். அதற்கு பத்தாண்டுகள் முன்பு 36 சதவீதமாக இருந்தது. பொருளாதார வளர்ச்சியால் வறுமை குறைவதாக அந்த ஆய்வு சொன்னது. பலர் கை தட்டினார்கள். சிலர் தட்டவில்லை. வறுமை ஒழிவதாக தெரியவில்லை என்றனர். நாடு முன்னேறும்போது மக்கள் வாழ்க்கைத்தரம் உயராமல் போகுமா?
சந்தேகத்தை தீர்க்க இன்னொரு ஆய்வு நடத்த அரசு தீர்மானித்தது. சுரேஷ் டெண்டுல்கர் என்பவரிடம் பொறுப்பு தரப்பட்டது. சச்சினுக்கு அவர் உறவா என்பது தெரியாது. வறுமையை அளவிட புது வழி காட்டினார் அவர். உடலுக்கு 2250 கலோரி சத்து தரக்கூடிய உணவுகளை சாப்பிடுபவர் ஏழை அல்ல என்பது அதுவரை பின்பற்றப்பட்ட அளவுகோல். சாப்பாடு தவிரவும் மனிதனுக்கு அத்தியாவசிய தேவைகள் உண்டு. உடை, எரிபொருள், மின்சாரம், போக்குவரத்து போன்ற தேவைகளை சமாளிக்கும் வகையில் வருமானம் கிடைக்கிறதா என்று ஆய்வு செய்தார். அதில்தான் வறுமையின் வளர்ச்சி வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
நாட்டில் 45 கோடி பேர் சராசரியாக மாதம் 447 ரூபாய்க்குள் வாழ்க்கையை ஓட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்களாம். இவர்களில் நகர்ப்புற ஏழைகள் கொஞ்சம் அதிர்ஷ்டசாலிகள். நகரவாசிகளில் 25+ சதவீதம் ஏழைகள். மாதம் 579 ரூபாய் செலவிடுகின்றனர். கிராம மக்களில் ஏழைகள் 42 சதவீதம். ஒரிசா, பீகார் படுமோசம். டெல்லி, காஷ்மீர், நாகாலாந்து வறுமை குறைந்த மாநிலங்கள்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியால் செல்வம் உற்பத்தியாகிறது. ஆனால் செல்வந்தர்களிடம் தேங்கிவிடுகிறது. சுற்றியிருப்பவர்களுக்கு எட்டுவதில்லை. வளமையை பரவலாக்காமல் வறுமையை ஒழிக்க முடியாது. அரசுதான் அதற்கு வழி காண வேண்டும்.
Related Links: