Monday, February 18, 2013

ஆரன் ஸ்வார்ட்ஸ் அறிக்கை: அறிவுசார் களஞ்சியங்களை மீட்டெடுப்போம்!

ஆரன் ஸ்வார்ட்ஸ் சிறு வயது முதலே கணினி மற்றும் இணையத்தில் ஆர்வமிக்கவராக இருந்தார். பதின் வயதுகளிலேயே ஆர்.எஸ்.எஸ் தொழில்நுட்பம் உட்பட பல சாதனைகளை செய்து காட்டினார். ரெட்டிட் என்ற வலைதளத்திற்கு பெரும்பங்காற்றினார். இளம்வயதிலேயே கணினி மற்றும் இணைய நிபுணராக திகழ்ந்தார். அவர் இணைய போராளியாகவும் இருந்தார். குறிப்பாக அமெரிக்காவின் "சோப்பா" எனப்படும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பயன்படும், இணைய கட்டுப்பாட்டு சட்டத்தை எதிர்த்து போராடி வெற்றி பெற்றதில் சிறப்பான பங்காற்றினார்.


அரசின் கொடூர சட்டங்களை எதிர்த்து போராடிய ஆரன் ஸ்வார்ட்ஸ், 2013 ஜனவரி 11ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். மசாசூசட்ஸ் பல்கலைகழகம் மற்றும் கார்ப்பரேட் கம்பெனிகளின் நிர்பந்தங்களும், அமெரிக்காவின் கருப்பு சட்டங்களின் அச்சுறுத்தல்களுமே அவரது தற்கொலைக்கு காரணம்.

அறிவுசார் பொக்கிசங்களை கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து மீட்டெடுக்க 2008ஆம் ஆண்டு கொரில்லா அறிக்கை என்ற தலைப்பில் ஒரு அறிக்கை எழுதினார். அவ்வறிக்கையுன் மொழியாக்கம்:

மனித அறிவு செல்வத்தின் ஆற்றல் மகத்தானது. அனைத்து செல்வங்களையும் போன்று மனித குலத்தின் அறிவு செல்வங்களையும், கார்ப்பரேட் நிறுவனங்கள் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். பன்னெடுங்காலங்களாக பல நாட்டு விஞ்ஞானிகள், அறிஞர்களின் உழைப்பால் கிடைத்த கலாச்சார மற்றும் அறிவியல் தகவல்களை இந்நிறுவனங்கள் ஆவணப்படுத்துகிறார்கள். ஆனால் அவற்றை பிறருக்கு கிடைக்காத வண்ணம் தடுத்து வருகிறார்கள். நீங்கள் அறிவியல் ஆய்வு கட்டுரைகளையும், சிறப்பான ஆவணங்களையும் படிக்க விரும்புகிறீர்களா? அப்படியானால், ரீட் எல்சேவியர் போன்ற நிறுவனங்களுக்கு பெருமளவிலான பணம் கட்ட வேண்டும்.

இந்த இழிநிலையை மாற்ற சிலர் போராடி வருகின்றனர். காப்புரிமை என்ற பெயரில் இதுவரை திரட்டிய அறிவு செல்வத்தை ஏற்கனவே நாம் இழந்து விட்டோம். இனிமேலாவது, விஞ்ஞானிகள் தனது ஆராய்ச்சி முடிவுகளை காப்புரிமை என்ற பெயரில் அடகு வைக்காமல், இணையத்தில் பிரசுரிக்க வேண்டும். யார் வேண்டுமானாலும் படிக்கலாம் என்ற வகையில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இப்படி செய்தால் வருங்காலத்திலாவது நமது அறிவுசார் தகவல்களை அனைவருக்கும் கிடைக்கும்படி செய்யலாம்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பல்கலைகழகங்கள் நூலகங்களில் உள்ள அனைத்து புத்தகங்களையும் ஸ்கேன் செய்து ஆவணப்படுத்தி உள்ளார்கள். ஆனால் அவற்றை அனைவருக்கும் கிடைக்கும்படி செய்வதில்லை. ஆராய்ச்சியாளர்கள் தங்களது சக ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுகளை வாசிக்கவே பெரும்பணம் செலுத்த நிர்பந்திக்கப்படுகிறார்கள். வல்லரசு நாடுகளில் உள்ள அதிசிறந்த பல்கலைகழகங்களில் உள்ள அறிவுஜீவிகளுக்கு மட்டும் இந்த அறிவுசார் தகவல்களை பெற அனுமதி கிடைக்கிறது. மற்றவர்களுக்கு குறிப்பாக, மூன்றாம் உலக நாடுகளில் உள்ளோர்க்கு இவற்றை பெற அனுமதிக்காதது ஏன்? இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்த அறிவுசார் களஞ்சியங்களுக்கு காப்புரிமை பெற்றிருக்கிறார்கள். அதனால் அந்த அறிவுசார் தகவல்களை பெறுவதற்கு அதிக விலை நிர்ணயிக்கிறார்கள். “இது சட்டபூர்வமானது. இதை தடுக்க நாம் என்ன செய்ய முடியும்?” என பலர் சொல்கிறார்கள். நம்மால் இயன்றதை செய்யமுடியும். இந்த அநீதியை எதிர்த்து போராட முடியும்.

மாணவர்கள், நூலகர்கள் மற்றும் விஞ்ஞானிகள் போன்றோர்க்கு இந்த அறிவுசார் பொக்கிசங்களை அணுகுவதற்கு சலுகை இருக்கிறது. ஆனால் உலகில் உள்ள ஏனையோர்க்கு இந்த வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த அறிவுசார் பொக்கிசங்களை உலகுக்கு பகிர்வது உங்களது கடமை. அது தான் சரியானதாக இருக்க முடியும்.

சில சமயங்களில் நண்பர்களுக்காக அல்லது சில நல்ல நோக்கங்களுக்காக அறிவுசார் தகவல்களை பதிவிறக்கி உலகுக்கு பகிர்ந்து கொள்கிறீர்கள்.  ஆனால் இந்த நடவடிக்கைகளை “பைரசி”, அதாவது காப்புரிமை பெற்றவற்றை திருடுதல் என்கிறார்கள். தான் பெறமுடிந்த அறிவு செல்வத்தை மற்றவர்களுடன் பகிர்வதை கொலை குற்றத்திற்கும் மேலானதாக சொல்கிறார்கள். ஒரு சுயநலக்காரன் வேண்டுமானால், தனக்கு கிடைத்த அறிவுசார் தகவல்களை தன் நண்பர்களுக்கு கொடுக்காமல் இருக்கலாம். ஆனால் தான் பெற்ற இன்பத்தை பிறர்க்கு அளிப்பதே சிறந்த அறமாகும். அறிவு செல்வத்தை பகிர்வது தார்மீக ரீதியில் ஒருபோதும் குற்றமாகாது.

பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் பேராசைக்காரர்கள். அவர்களுக்கு தேவையான சட்டங்களை இயற்ற அரசியல்வாதிகளை வாங்குகிறார்கள். அறிவுசார் தகவல்களை யார் எப்படி கையாளலாம் என, பெரும் நிறுவனங்களுக்கு பயனளிக்க கூடிய வகையில் சட்டங்களை இயற்றுகிறார்கள். அநீதியான சட்டங்களை பின்பற்றுவது சரியானது அல்ல. இந்த அநீதியான சட்டங்களை எதிர்க்க வேண்டும். அதுவே நமது போராட்ட பாரம்பரியம் ஆகும்.

எங்கெங்கெல்லாம் அறிவுசார் தகவல்கள் சேமிக்கப்பட்டுள்ளனவோ அவற்றை நாம் நகல் எடுத்து உலகுக்கு பகிர வேண்டும். அந்த ஆவணங்களை பாதுகாக்க வேண்டும். இவற்றை சேமிக்க நாம் இரகசிய தரவுத்தளங்களை வாங்க வேண்டும். பின் அவற்றை இணையத்தில் வலையேற்றம் செய்ய வேண்டும். விஞ்ஞான பத்திரிக்கைகளை தரவிறக்கம் செய்து பகிர்வு நெட்வொர்க்குகளில் ஏற்ற வேண்டும். நாம் கொரில்லா முறையில் அறிவுசெல்வத்தை மீட்டெடுக்க போராட வேண்டும்.

உலகெங்கும் வியாபித்திருக்கும் நாம் ஒன்று சேர்ந்து, அறிவு செல்வத்தை தனியார்மயப்படுத்துவதை எதிர்ப்போம். இந்த இழிசெயலை ஒழித்து கட்டுவோம். அறிவுசார் செல்வத்தில் தனியுடைமை என்பதை பழங்கதை ஆக்குவோம். மனித குலத்தின் அறிவுசெல்வத்தை பொதுவுடைமை ஆக்குவோம். நீங்களும் எங்களுடன் சேர்ந்து போராட தயாரா?

-    ஆரன் ஸ்வார்ட்ஸ்
      ஜூலை 2008, எரேமொ, இத்தாலி


தொடர்புடைய பதிவுகள்:

Monday, January 14, 2013

சென்னை புத்தகக் கண்காட்சி 2013 - சில கடைகள், சில புத்தகங்கள்

சென்ற ஆண்டு 8 இலட்சம் பேர் புத்தகக் காட்சியினை பார்வையிட்டனர். இந்த ஆண்டு 12 இலட்சம் பேர் வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இலட்சக்கணக்கில் பார்வையாளார்களை கொண்ட சென்னை புத்தகக் கண்காட்சி வருடாவருடம் திருவிழா போல களை கட்டுகிறது. இந்த வருடம் சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ உடற்பயிற்சி கல்லூரி மைதானத்தில்,  ஜனவரி11 முதல் ஜனவரி23 வரை நடைபெறுகிறது.


பொதுவாக‌ புத்தகக் கண்காட்சியில் சிறுவர்களுக்கான புத்தகங்கள், சுயமுன்னேற்ற புத்தகங்கள், துறை சார்ந்த புத்தகங்கள் மட்டுமே வாங்குகிறோம். சமூகத்தைப் பற்றியும் அதன் இயக்கத்தை பற்றியுமான புத்தகங்களை பெருமளவில் வாங்குவதில்லை. இதன் காரணமாக நமக்கு தினசரி நடக்கும் நமது பிரச்சனைகளுக்கான காரணம் தெரிவதில்லை. பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்தும் ஊடகங்களின் கருத்தையே சரியென நம்புகிறோம்.

சிறுவயது முதல் மதிப்பெண்களுக்காக, வேலை பெறுவதற்காக பெரும்பாலும் படிக்கிறோம். அதற்கப்பால் படிக்கும் பழக்கம் நின்று போய்விடுகிறது. அப்படியே படித்தாலும் தினசரி பத்திரிக்கை மற்றும் ஜனரஞ்சக பத்திரிக்கைகள், சில நாவல்கள் மட்டும் தான். இந்த புத்தகக் கண்காட்சியில் இருந்து, சமூக அக்கறையுள்ள புத்தகங்களை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்வோம். சமூக முன்னேற்றத்திற்கு துணை நிற்போம்.


சில புத்தக கடைகள்:

ஐநூறுக்கும் மேற்பட்ட கடைகள் சென்னை புத்தகக் கண்காட்சியில் இடம் பெற உள்ளன. அவற்றுள் சமூக அக்கறையுள்ள நூல்கள் கிடைக்கும் கடைகளின் எண்கள்;

தமிழ்மண் - 10, 11
தோழமை வெளியீடு - 87
பொன்னி – 149
பெரியார் சுயமரியாதை வெளியீடு – 227
காலச்சுவடு - 242
தமிழ்ப் புத்தகாலயம் – 336
அடையாளம் - 355, 356
நியூ செஞ்சுரி புத்தக நிலையம் - 367
பாரதி புத்தகாலயம் – 460, 461
விடியல் – 516, 517
அலைகள் - 550
கீழைக்காற்று – 551, 552
அம்பேத்கர் ஃபவுண்டேஷன்ஸ் - 571
கருப்புப் பிரதிகள் - 572

 சில புத்தகங்களின் பட்டியல்;
சினிமா: திரை விலகும்போது… – சினிமா விமர்சனங்கள்
“பாரதி”ய ஜனதா பார்ட்டி – வே.மதிமாறன்
பாரதி பக்தர்களின் கள்ள மெளனம் – தோழர். மருதையன்

வால்காவிலிருந்து கங்கை வரை – ராகுல் சாங்கிருத்தியாயன்
பொதுவுடமை என்றால் என்ன? – ராகுல் சாங்கிருத்தியாயன்
ஆப்பிரிக்கர்கள் கண்டு பிடித்த இருண்ட ஐரோப்பா – கலையரசன்

விடுதலைப் போரின் வீரமரபு  - புதிய கலாச்சாரம்
பண்பாட்டு அசைவுகள் – தொ.பரமசிவன்
நான் ஏன் இந்து அல்ல – காஞ்சா அய்லய்யா
இந்து இந்தியா – எஸ்.வி.ராஜதுரை

நான் நாத்திகன் ஏன்? – பகத்சிங்
கம்யூனிசக் கொடியின் கீழ் – ஜூலியஸ் ஃபூசிக்
தூக்கு மேடைக் குறிப்பு – ஜூலிஸ் பூசிக்
போராடும் தருணங்கள் – தோழர் மருதையன்
உலகை குலுக்கிய பத்து நாட்கள் – ஜான் ரீடு
மாவோவின் நெடும்பயணம்  (THE LONG MARCH) – DICK WILSON

புதினங்கள்:
வீரம் விளைந்தது - நிக்கலாய் ஒஸ்திரோஸ்கி
கன்னி நிலம் - மிக்கேல் ஷோலகவ்
ஏழு தலைமுறை - அலெக்ஸ் ஹேலி
ஸ்பார்ட்டகஸ்
சூறாவளி (சீன நாவல்)

வினவு நூல்கள்:
ஜீன்ஸ் பேண்டும் பாலியல் வன்முறையும் – வினவு
ஐ.டி.துறை நண்பா… – வினவு
கடவுள் கைது பக்தன் விடுதலை – வினவு
மும்பை 26/11 விளக்கமும் விவாதமும் – வினவு
சாதியம் ஒழிப்போம் ! தமிழகம் காப்போம் ! – வினவு
இலக்கிய மொக்கைகள் – வினவு



தொடர்புடைய பதிவுகள்:

Monday, January 7, 2013

வல்லுறவு தேசம் இந்தியா!

டெல்லி பாலியல் வல்லுறவு, நடுத்தர வர்க்கத்தின் மனதை உலுக்கியுள்ளது. இப்போது ஊடகங்களும் கணிசமான நேரத்தை வல்லுறவு செய்திகளுக்கும், பாலியல் வன்முறைக்கு எதிரான போராட்டங்களுக்கும் ஒதுக்குகின்றன.

பாலியல் வல்லுறவு - சில காரணங்கள்:

பாலியல் வல்லுறவு பற்றி மனோதத்துவ ரீதியாக எட்வர்ட் ஹேகன் சொல்வதாவது,

1. மேட்டுக்குடி ஆண்கள் (“மைனர்”) திருப்பி அடிக்க முடியாத அல்லது பழிவாங்க முடியாத பெண்களை நிர்ப்பந்திக்கின்றனர்.
2. சமூகத்தில் கேட்பாரற்ற பெண்கள் (எ.கா., அனாதைகள்) அதிகம் பாதிப்படைகிறார்கள். தட்டி கேட்க பெண்ணின் குடும்பத்தினர் இல்லாதிருப்பது வசதியாக போய்விடுகிறது.
3. யுத்தத்தின் போது, எதிரி பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள்.
4. பாலியல் வல்லுறவில் பேரின்பம் காணும் பேர்வழிகள் மற்றும் சைக்கோ செய்யும் வல்லுறவுகள்.

திடுக்கிடும் சில புள்ளி விவரங்கள்:

தேசிய குற்ற ஆவண ஆணையம் 2011 அறிக்கையின்படி இந்தியாவில் ஒவ்வொரு 21 நிமிடங்களுக்கும் பாலியல் வல்லுறவு நடக்கிறது. பதிவாகாத பாலியல் குற்றங்களையும் சேர்த்தால், உண்மை நிலவரம் பேரதிர்ச்சியாகவே இருக்கும்.

2011ஆம் ஆண்டு புள்ளி விவர கணக்குபடி பாதிக்கப்பட்ட பெண்கள் பெரும்பாலானாருக்கு (93%) தெரிந்தவர்களே வன்புணர்ச்சி செய்துள்ளார்கள். (நெருங்கிய உறவினர்கள் 7.5%, அண்டை வீட்டார்கள் 32.4%, தெரிந்தவர்கள் 53.2%, பாலியல் வன்முறையில் ஈடுபடுவோர்களில் தெரியாதவர்கள் 7%).

பாலியல் வல்லுறவு தில்லி, மும்பை போன்ற பெரு நகரங்களில் தான் அதிகம் நடக்கிறது. பாலியல் தொல்லை, ஆள்கடத்தல், வரதட்சணை, சித்திரவதை, ஈவ் டீசிங் என பெண்களுக்கு எதிரான குற்றங்களையும் கணக்கில் எடுத்து கொண்டால், படிப்பறிவில் முன் நிற்கும் கேரளம், ஊடகங்களால் போற்றப்படும் குஜராத், அமைதி பூங்கா என வருணிக்கப்படும் தமிழகம் கூட இதில் விதிவிலக்கில்லை.


கடந்த 40 ஆண்டுகளில் பாலியல் வல்லுறவு கொடுமைகள் பத்து மடங்காக பெருகியுள்ளது. அதாவது 1971 கணக்கின்படி, பாலியல் வல்லுறவின் எண்ணிக்கை 2487இல் இருந்து 24206ஆக உயர்ந்துள்ளது. இவை தான் பதிவான குற்றங்களின் அடிப்படையிலான புள்ளி விவரங்கள் நமக்கு அளிக்கும் செய்தி.

நுகர்வு கலாச்சார வெறி அதிகரிக்க அதிகரிக்க, பெண்களை பண்டமாக சித்தரிக்கும் போக்கும் அதிகரித்தே வருகிறது. பெண்களை பண்டமாக சித்தரிப்பதில் ஜனரஞ்சகம் என்ற பெயரில் மஞ்சள் பத்திரிக்கைகள், டி.வி மற்றும் சினிமாக்கள் பெரும்பங்காற்றுகின்றன. பெண்களை கேவலமாக இழிவுபடுத்தும் ஊடகங்களே இன்று பாலியல் வன்முறைக்கு எதிராக குரல் கொடுப்பது நகைமுரணாக உள்ளது.

ஊடகங்கள் சொல்லாத சோகங்கள் மற்றும் புள்ளி விவரங்களில் பதிவாகாத துயரங்கள்:

1. வடகிழக்கு மாநிலங்களின் துயரநிலை:
மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த மனோரமா என்ற இளம் பெண்ணை ஜூலை 2004, 11 ஆம் தேதி, துணை இராணுவ படை அதிகாரிகள் வல்லுறவுபடுத்தி கொடூரமாக சித்திரவதை செய்து கொன்றனர். இராணுவத்திற்கு வரைமுறையற்ற அதிகாரத்தை கொடுத்தது ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் (1958). பல பத்தாண்டுகளாக காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இராணுவம் அட்டூழியம் செய்து வருகிறது. இந்த கொடூர சட்டத்தை திரும்பப் பெறக் கோரி அம் மாநிலங்களில் மக்கள் போராடி வருகின்றனர். மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ஐரோம் ஷர்மிளா என்ற பெண் 12 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார்.

2. காசுமீரில் இராணுவத்தின் காட்டாட்சி:
மே 2009இல் காசுமீர் சோபியான் நகரத்து இளம் பெண்கள் இருவரை இராணுவத்தினர் பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்தனர். இதனை எதிர்த்து காசுமீர் மக்கள் பல மாதங்களாக போராடினர். இன்னும் நீதி கிடைக்கவில்லை. நாட்டை காப்பாற்றுவார்கள் என நம்பப்படும் இராணுவத்தினர் இந்திய காசுமீர் பெண்களை மானபங்கப்படுத்தி வருகின்றனர். காசுமீரில் 5,00,000 சிப்பாய்கள் குவிக்கப்பட்டுள்ளனர். 30 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு இராணுவ அட்சியே நடக்கிறது. இத்தனை ஆண்டுகாலம் இராணுவத்திற்கு அங்கு என்ன வேலை?

3. பச்சைவேட்டை என்ற பெயரில் பாலியல் வன்முறைகள்:
சட்டீஸ்கரில், சோனிசோரி என்ற பள்ளி ஆசிரியரை, போலீசு எஸ்.பி அன்கித் கார்க் தலைமையில் போலீசார்கள் பாலியல் வல்லுறவு செய்தனர். பின்பு போலீசார் சொல்லொண்ணாத கொடுமைகளை செய்தனர். அந்த போலீசு எஸ்.பி அன்கித் கார்குக்கு துணிகர போலீசு பதக்கம் வழங்கி கௌரவப்படுத்தியது அரசு. அதிரடிபடையினரும், போலீசாரும் தீவிரவாதிகளை பிடிக்கிறோம் என்ற பெயரில் பழங்குடி மக்களை அச்சுறுத்தி வருகின்றனர். அப்படி அச்சுறுத்தும் போது பாலியல் வன்முறைகளில் ஈடுபடுகின்றனர்.

4. வாச்சாத்தி பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை:
1992 சூன் 20 ஆம் தேதி, வாச்சாத்தியில் சோதனை என்ற பெயரில் 155 வனத்துறையினர், 108 காவல் துறையினர், 6 வருவாய்த்துறையினர் கொண்ட பெரும் படை ஊருக்குள் புகுந்து, வீடு வீடாக சோதனை செய்தனர். வீட்டில் இருந்த பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என அனைவரையும் இழுத்து வந்து ஊரின் மையத்தில் இருந்த பெரிய ஆலமரத்தின் கீழே நிறுத்தி சரமாரியாக அடித்தனர். பின்னர் 18 பெண்கள் மீது பாலியல் வன்முறையில் ஈடுபட்டனர். 19 ஆண்டுகளுக்கு பிறகு தான் 269 பேரின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 54 பேர் இயற்கையாகவே இறந்து விட்டனர். 17 பேர் மட்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மீதிப்பேர் பிணையில் தப்பித்து வெளியே வந்துவிட்டார்கள். கிடைத்ததும் பாரபட்சமான நீதி தான். தாமதமான நீதி அநீதி தானே.

5. விழுப்புரம் இருளர் பெண்கள்:
2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், விழுப்புரம் மாவட்ட த்தில், திருக்கோவிலூர் காவல் நிலைய போலீசார் 4 இருளர் பெண்களை பாலியல் வல்லுறவு செய்தனர். அப்போது முதல்வர் ஜெயலலிதா 5 போலீசாரை பணி இடை நீக்கம் செய்து தலா 5 லட்சம் கொடுக்க உத்தரவிட்டார். சமீபத்தில் முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பெண்களுக்கு தொல்லை கொடுப்பவர்கள் நடமாட்டத்தை மப்டி போலீசார் கண்காணிக்கும்படி உத்தரவிட்டுள்ளார். உண்மையில், பெண்களுக்கு தொல்லை கொடுக்கும் நிலையம் தான் காவல் நிலையம் என்பது அவருக்கு தெரியாதா என்ன? போலீசாரை யார் கண்காணிப்பது?

மக்களை அடக்கி ஆட்சி செய்ய போலீசு மற்றும் இராணுவத்திற்கு சிறப்பு சலுகைகள் கொடுத்து, வரம்பற்ற அதிகாரங்களை வழங்கி வருகிறது அரசு. போலீசு, இராணுவம் செய்யும் பாலியல் வன்முறைகளை விசாரிப்பதுமில்லை, குற்றவாளிகளை தண்டிப்பதுமில்லை. அருந்ததி ராய் கூறுகையில், "சட்டீஸ்கர், காஷ்மீர் மற்றும் மணிப்பூர் போன்ற இடங்களில், இராணுவம் மற்றும் போலீசு பாலியல் வன்முறையை மக்களுக்கு எதிரான ஆயுதமாக  பயன்படுத்துகிறது. பாலியல் வன்முறை செய்யும் இராணுவத்தினர் மற்றும் போலீசாரை பாதுகாக்க சட்டங்கள் அமலில் உள்ளன." என தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

6. இந்துத்வத்தின் சோதனைசாலை குஜராத்:
குஜராத் 2002 முசுலீம் மக்களை இனப்படுகொலை செய்தபோது, ஆயிரக்கணக்கான பெண்களை இந்து மதவெறியர்கள் பாலியல் வல்லுறவு செய்தனர். குஜராத் இனப்படுகொலை உண்மைகளை, முசுலீம் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தெகல்கா பத்திரிக்கை ஆதாரங்களுடன் ஆவணப்படுத்தியுள்ளது. இந்து மதவெறியர்களை அம்பலப்படுத்தி, பல சமூக ஆர்வலர்கள் நீதி கேட்டு போராடி வருகின்றனர். இருப்பினும் பெருமளவிலான குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை, வெகுசிலரே தண்டிக்கப்பட்டுள்ளனர்.

7. ஒரிசாவில் விசுவ இந்து பரிசத்தின் வெறியாட்டம்:
2008ஆம் ஆண்டு ஒரிசாவின் காந்தமால் மாவட்டத்தில் விசுவ இந்து பரிசத் (வி.ஹெச்.பி) தலைமையில் கிறித்துவ பழங்குடியினரின் ஊர்களை எரித்தனர். இந்த கொலைவெறியாட்டம் மாதக்கணக்கில் தொடர்ந்தன. அவர்களின் தாக்குதலுக்கு, பாலியல் வன்முறைகளுக்கு கிறித்துவ கன்னியாஸ்த்திரிகளும், பழங்குடி பெண்களும் தப்பவில்லை.

செத்துப்போன இந்து மனசாட்சி:

சட்டீஸ்கர் மாநில மகளிர் ஆணைய தலைவர் மற்றும் பாரதீய ஜனதா தலைவர் விபா ராவ் கூறுகையில் "பெண்களுக்கெதிரான குற்றங்களுக்கு அவர்கள் அணியும் ஆபாச ஆடையே காரணம்" என்கிறார். சமூகத்தின் இந்த ஆணாதிக்க சிந்தனையை தான் மெத்த "படித்த" இளைஞர்களும் பிரதிபலிக்கிறார்கள். பதிவான புள்ளிவிவரங்களின்படி பாலியல் வன்முறைக்கு பலியானவர்களில் 10% சிறுகுழந்தைகளும் அடக்கம். ஆடை தான் காரணமென்றால் சிறுகுழந்தைகளை வல்லுறவு செய்ய காரணமென்ன? மேலும் குஜராத்தில் காவிப்படைகளுக்கு பர்தாக்கள், சிறுகுழந்தைகள், தாய்மார்கள் கண்ணுக்கு தெரியவில்லை. அவர்களை மிருகமாக்கியது இந்து மதவெறி தான்.

ஆர்.எஸ்.எஸ் சர்சங்சலாக்  மோகன் பகவத் "பாலியல் வல்லுறவு இந்தியாவில் தான் நடக்கிறது, பாரதத்தில் இல்லை" என்று பெருமையுடன் கூறியுள்ளார். குஜராத்தில் வெறியாட்டம் போட்ட காவிப்படைகளை அவ்வளவு சீக்கிரத்தில்  மறக்க முடியுமா என்ன? குஜராத் கொடூரத்தையே தாங்க முடியவில்லை, அகண்ட பாரதத்தில் பெண்களின் நிலையை பற்றி கேட்கவா வேண்டும்! சுஸ்மா சுவராஜ், ஜெயலலிதா கோருவது போல் குஜராத்தில் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட காவிப்படைகளுக்கும், அதற்கு பின் நின்ற மோடிகளுக்கும், கேடிகளுக்கும் மரண தண்டனை நிறைவேற்ற வேண்டாமா? சுஸ்மா மற்றும் ஜெயலலிதா குஜராத் முசுலீம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை பற்றி வாய் திறக்கவில்லை என்பது தான் உண்மை.

தமிழகத்தின் மௌனம்:

ஈழத்தில் குழந்தைகள், இளம்பெண்கள், தாய்மார்கள் என வயது வித்தியாசமின்றி ஆயிரக்கணக்கான பெண்களை வல்லுறவு செய்து கொன்றனர். தமிழ் இனப்படுகொலையை கண்டு தமிழகம் மௌனமாகவே இருந்தது. இந்த அவல நிலையை உடைக்கவே முத்துக்குமார் தன்னுயிரை ஈகம் செய்தார். தமிழ் ஊடகங்களும் மௌனமாக இருந்தன. தமிழக ஊடகங்கள் ஈழத்தமிழ் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை கண்டிக்கவுமில்லை, கண்ணீர் சிந்தவுமில்லை.

டெல்லி பாலியல் வன்முறைக்காக நடுத்தரவர்க்கம் இப்போது போராடுகிறது. நீதி கேட்கிறது. நல்ல விசயம். ஆனால் ஊடகங்கள் சொல்லாத சோகங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன என்பதை நாம் உணரவேண்டும். வர்க்கபேதமின்றி அனைத்து பாலியல் வன்முறை கொடுமைகளுக்கும் எதிராக கிளர்ந்தெழுந்தால் அந்த கோபத்திற்கு உண்மையான அர்த்தம் இருக்கும். அதுவரைக்கும் இந்தியா வல்லுறவு தேசமே!

தொடர்புடைய பதிவுகள்:

Tuesday, March 1, 2011

பச்சையப்பன் கல்லூரி ஏன் அடித்து நொறுக்கப்பட்டது? உண்மை என்ன?


"ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் உண்மை ஆகிவிடும்" என்பது மார்க்கட்டிங் விதிகளில் ஒன்று. அதே போன்று தான் அரசும், ஊடகத் துறையை பயன்படுத்தி பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாணவர்களுக்கு எதிராக தொலைக்காட்சி, பத்திரிகை மூலமாக விசம பிரச்சாரம் செய்து வருகிறது. பொது மக்களும் அதையே உண்மை என நம்ப வைக்கப்பட்டுள்ளனர்.

பச்சையப்பன் கல்லூரி தாக்கப்பட்ட 23ஆம் தேதியில் இருந்து இரண்டு வாரங்கள் பின்னோக்கி சென்று பார்த்தால் உண்மை விளங்கும். பச்சைப்பன் கல்லூரியை கையகப்படுத்தி மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க அரசு முடிவு செய்தது. இதை எதிர்த்து பச்சையப்பன் கல்லூரி ஆசிரியர்கள் உண்ணாவிரதமிருந்தனர். பச்சையப்பன் கல்லூரியை கையகப்படுத்தும் திட்டத்தை கைவிடும் வரை போராட்டம் தொடரும் என பேராசிரியர்கள் அறிவித்தனர். பேராசிரியர்கள் போராட்டத்திற்கு மாணவர்களும், துணை நிற்பதை பார்த்து, அதனை ஒடுக்குவதற்கு சதி திட்டம் தீட்டியது. அதன் ஒரு அங்கமாக பஸ்டே பிரச்சனையை தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் ஊதி பெருக்கியது. பஸ்டே நடந்ததை சாக்காக வைத்து, மாணவர்களையும், பேராசிரியர்களையும் கல்லூரி வளாகத்துக்குள் நுழைந்து அடித்து நொறுக்கியது போலிசு.



ஒரு கல்லூரிக்குள் முதல்வரின் அனுமதி இன்றி நுழைந்து வெறியாட்டம் போட்ட போலீசின் நடவடிக்கை பலரின் பார்வையின் படி சரியென்றாகிறது. ஊடகங்கள் மற்றும் போலீசு என்றைக்காவது உண்மையைச் சொல்லி இருக்கிறதா? லஞ்சம் வாங்குவதையும் மக்களை கொடுமைப்படுத்துவதையும் மட்டுமே வேலையாகக் கொண்ட காவல்துறை மக்கட் நலனுக்காகத்தான் பச்சையப்பன் கல்லூரிக்குள் புகுந்து மாணவர்களை தாக்கியது என்பதில் இம்மியளவாவது உண்மையிருக்குமா? சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

மெட்ரோ ரயில் திட்டத்திற்காக பச்சையப்பன் கல்லூரியை கையகப்படுத்துவதை எதிர்த்து பேராசிரியர்கள் உண்ணாவிரதம் இருந்ததைப் பற்றி அறிய பிப்-9 தேதி தினகரன் செய்தியை பாருங்கள். உண்மை நிலவரம் இப்படி இருக்கும் போது பச்சையப்பன் கல்லூரியை காக்கும் போராட்டத்திற்கு ஆதரவு கரமும், கருத்தும் தருவதே சரியானது.

பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் !
போராடும் மாணவர்களுக்கு தோள் கொடுப்போம்!
கருணாநிதி போலீசின் அராஜகத்தை முறியடிப்போம்!!

Saturday, January 1, 2011

சென்னை புத்தக கண்காட்சி 2011 - கீழைக்காற்று நூல்கள்

Chennai Book Fair 2011 சென்னைப் புத்தகக் கண்காட்சி 2011 ஜனவரி 4 முதல் 17 வரை சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித ஜார்ஜ் ஆங்கில இந்திய மேல்நிலை பள்ளியில் நடை பெற உள்ளது. பணிக்கு மட்டுமே படிப்பது படிப்பன்று. வாழ்க்கைக்காக படிப்பதே படிப்பு. நம்முள் பெரும்பாலோனோர் பள்ளி, கல்லூரிகளை தாண்டிய உடன் படிப்பதில்லை. தொடர்ச்சியான வாசிப்பு மட்டுமே வாழ்க்கைக்கு தேவையான சிந்தனைகளை வழி காட்டும். அப்படிப்பட்ட புத்தகங்களை தேடிப் படிக்க நல்வாய்ப்பாக புத்தகக் கண்காட்சிகள் திகழ்கின்றன. சென்னைப் புத்தகக் கண்காட்சியில் நூற்றுக்கணக்கான பதிப்பகங்கள் கடை விரித்தாலும் அவற்றுள் நமது அறிவுச் சாளரங்களை திறக்கும் நூல்கள் கீழைகாற்று வெளியீட்டகத்தில் கிடைக்கும். கீழைக்காற்று அரங்கத்தின் எண் 39-40 இல் கிடைக்கும் நூல்களுள் சில;

புதிய கலாச்சாரம் / வினவு நூல்கள்:

  • விடுதலைப் போரின் வீர மரபு
  • பெண் எப்போது பெண்ணாக இருந்தாள்
  • நினைவின் குட்டை கனவு நதி
  • மீண்டும் தொழிலாளி வர்க்கம்
  • நிஜத்தின் உரைகல்லில் நிழல் சினிமா

மார்க்சியம்-லெனினியம் கற்க, மாவோ சிந்தனை வழி நிற்க;
  • கார்ல் மார்க்ஸ், பிரடெரிக் எங்கல்ஸ் முக்கிய நாட்குறிப்புகள்
  • லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள்
  • அராஜகவாதமா? சோசலிசமா?
  • கம்யூனிசக் கொடியின் கீழ்...
  • முரண்பாடு பற்றி

ஏகாதிபத்திய மேலாதிக்க பயங்கரவாதத்தை இனங்காட்டும் நூல்கள்:
  • அருந்ததி ராய் / கரன் தபார் விவாதம்
  • ஈராக்: வரலாறும் அரசியலும்
  • இலங்கை: தேசிய இனப் பிரச்சினையும் தீர்வுக்கான தேடல்களும்
  • ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா
  • மறுகாலனியாதிக்கக் கொலைக்களங்கள் (கவிதை)

மதம் / பார்ப்பன மதவெறிப் பயங்கரத்தை அறியத் தரும் நூல்கள்:
  • மதம் : ஒரு மார்சியப் பார்வை
  • நான் நாத்திகன் ஏன்?
  • தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் வளர்ந்தது எப்படி?
  • இந்து என்று சொல்லாதே! ராமன் பின்னே செல்லாதே! (கவிதை)
  • ஆர்.எஸ்.எஸ் பரிவாரத்தின் ஆரிய-பார்ப்பன சாம்ராஜ்யக் கனவை தகர்த்தெறிவோம்!

Keezhaikattru Books - Chennai Book Fair 2011
தொடர்புடைய பதிவுகள்:

Tuesday, December 22, 2009

உழைக்கும் வர்க்கத்தின் தோழர் பிறந்தநாள்

தோழர் ஸ்டாலின் அவர்களுடைய 130வது பிறந்த நாள் டிசம்பர் 21 அன்று தமிழகம் முழுவதும் பேரணிகள், தெருமுனை கூட்டங்கள் நடந்தது. பாட்டாளிகளின் தோழனாக இருந்து கடைசி மூச்சு வரை பாட்டாளிகளுக்காக உழைத்த ஒரே காரணத்திற்காக எண்ணிலடங்கா வதந்திகளையும், பொய் செய்திகளை மேற்குலகம் உற்பத்தி செய்தது. அந்த பொய் பிரச்சாரங்களையே அறிவுஜீவிகளும் நம்பி வருகின்றனர். அதை முறியடிப்பது மாபெரும் பணியாகும். தமிழகத்தில் தோழர் பிறந்த நாளையொட்டி பேரணிகள், தெருமுனை கூட்டங்கள் மூலம் தோழர் ஸ்டாலினை உழைக்கும் மக்களிடையே பிரச்சாரம் செய்தது மகஇக-வும் அதன் தோழமை அமைப்புகளும்.
Comrade Stalin Birthday Remembrance

  • தோழர் ஸ்டாலின் புகழ் ஓங்குக!
  • தோழர் லெனின் ஸ்டாலின் வழி நடப்போம்!
  • முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!
  • முதலாளித்துவம் கொல்லும்! கம்யூனிசமே வெல்லும்!

Related Links:

Monday, December 14, 2009

இந்தியாவில் வறுமை வளர்கிறது

Poverty
நாடு முன்னேறுது, நாடு முன்னேறுது என திரும்ப திரும்ப விளம்பரப்படுத்தப்படுகிறது. இந்த விளம்பர உத்தியால் நாடு முன்னேறிவிட்டது என மக்களை நம்பும்படியான முயற்சி யில் சிறிது வெற்றியும் பெற்றுள்ளது ஆளும் வர்க்கங்கள். என்னத்தான் வறுமையை மறைக்க முயன்றாலும், உண்மை நிலை அதற்கு மாறாக உள்ளது.

30 கோடி பேர் வறுமையில் இருப்பதாகவும், நாட்டில் 45 கோடி பேர் சராசரியாக மாதம் 447 ரூபாய்க்குள் வாழ்க்கையை ஓட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் என்றும் அரசு ஆய்வு சொல்கிறது. மேலும் விவரங்களுக்கு 11 டிசம்பர் வெளியான தினகரன் தலையங்கத்தை பார்க்கவும்.



தினகரன் தலையங்கம்:
இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைகிறது. கடந்த பல ஆண்டுகளாக இது தொடர்கிறது. வெளிநாடுகளும் உலக வங்கியும் அதற்காக இந்திய அரசை பாராட்டுகின்றன. ஆனால், இந்திய மக்களின் பொருளாதாரம் முன்னேறவில்லை. ஏழைகளின் எண்ணிக்கை குறையவில்லை. மாறாக அதிகரித்திருக்கிறது. மூன்றில் ஒரு இந்தியன் வறுமையில் வாடுவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. இது அதிர்ச்சியான செய்தி. 2004 ஏப்ரல் தொடங்கி அடுத்த ஆண்டு மார்ச் வரையிலான காலகட்டத்தில் அரசு ஓர் ஆய்வு நடத்தியது. 30 கோடி பேர் வறுமையில் இருப்பதாக அதில் தெரியவந்தது. ஜனத்தொகையில் அது 27+ சதவீதம். அதற்கு பத்தாண்டுகள் முன்பு 36 சதவீதமாக இருந்தது. பொருளாதார வளர்ச்சியால் வறுமை குறைவதாக அந்த ஆய்வு சொன்னது. பலர் கை தட்டினார்கள். சிலர் தட்டவில்லை. வறுமை ஒழிவதாக தெரியவில்லை என்றனர். நாடு முன்னேறும்போது மக்கள் வாழ்க்கைத்தரம் உயராமல் போகுமா?

சந்தேகத்தை தீர்க்க இன்னொரு ஆய்வு நடத்த அரசு தீர்மானித்தது. சுரேஷ் டெண்டுல்கர் என்பவரிடம் பொறுப்பு தரப்பட்டது. சச்சினுக்கு அவர் உறவா என்பது தெரியாது. வறுமையை அளவிட புது வழி காட்டினார் அவர். உடலுக்கு 2250 கலோரி சத்து தரக்கூடிய உணவுகளை சாப்பிடுபவர் ஏழை அல்ல என்பது அதுவரை பின்பற்றப்பட்ட அளவுகோல். சாப்பாடு தவிரவும் மனிதனுக்கு அத்தியாவசிய தேவைகள் உண்டு. உடை, எரிபொருள், மின்சாரம், போக்குவரத்து போன்ற தேவைகளை சமாளிக்கும் வகையில் வருமானம் கிடைக்கிறதா என்று ஆய்வு செய்தார். அதில்தான் வறுமையின் வளர்ச்சி வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

நாட்டில் 45 கோடி பேர் சராசரியாக மாதம் 447 ரூபாய்க்குள் வாழ்க்கையை ஓட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்களாம். இவர்களில் நகர்ப்புற ஏழைகள் கொஞ்சம் அதிர்ஷ்டசாலிகள். நகரவாசிகளில் 25+ சதவீதம் ஏழைகள். மாதம் 579 ரூபாய் செலவிடுகின்றனர். கிராம மக்களில் ஏழைகள் 42 சதவீதம். ஒரிசா, பீகார் படுமோசம். டெல்லி, காஷ்மீர், நாகாலாந்து வறுமை குறைந்த மாநிலங்கள்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியால் செல்வம் உற்பத்தியாகிறது. ஆனால் செல்வந்தர்களிடம் தேங்கிவிடுகிறது. சுற்றியிருப்பவர்களுக்கு எட்டுவதில்லை. வளமையை பரவலாக்காமல் வறுமையை ஒழிக்க முடியாது. அரசுதான் அதற்கு வழி காண வேண்டும்.

Related Links: