Sunday, January 26, 2014

நடுத்தர வர்க்கம் என்ற மாயையும் – விடிவிற்கான பாதையும்!

அமெரிக்காவில் வால்மார்ட் மற்றும் துரித உணவக தொழிலாளர்கள் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த கோரி போராடி வருவதை அறிவீர்கள். பெரிய நிறுவனங்களில் மாத ஊதியம் கிடைக்கும் ஊழியர்களால் தங்களது அன்றாட செலவீனங்களுக்கு செய்வதறியாது தவிக்கிறார்கள். மாதம் 2500 முதல் 3000 டாலர் வீட்டு வாடகை செலுத்த வேண்டிய நகரங்களில், மாதம் $1200 பெறும்  (மணி நேரத்திற்கு $7.25) ஊழியர்களால் என்ன செய்ய முடியும்? யோசிக்கவே மலைப்பாக இருக்கிறதல்லவா? இதன் வலியை மாத சம்பளம் பெறும் பட்ஜெட் பத்மனாபன்களால் நிச்சயம் உணர முடியும். ஆனால் அறிவு ஜீவிகள் அதை ஒத்துக் கொள்வதில்லை.

அமெரிக்காவின் சந்தை பொருளாதாரம் ஏன் தோல்வியடைகிறது? ஒழுங்கான ஊதியம் பெறுவதற்கு தேவையானவை எவை? என்பதை உண்மையான ஆதாரங்கள் மூலம் எட்வர்ட் மெக்கிளெலேண்டு சலோன் பத்திரிக்கையில் எழுதியுள்ளார். அவரது கட்டுரையை தமிழில் பார்ப்போம்.

அமெரிக்காவில் இன்றைய கல்லூரி பட்டதாரிகளை விட கல்லூரி கல்வி பெறாத அன்றைய தொழிலாளர்கள் எவ்வாறு நன்றாக வாழ்ந்தனர் என்பதை பற்றி பார்ப்போம். 1965இல் இராப் ஸ்டான்லி சிகாகோ ‘வகேசனல்’ (தொழில் சார்ந்த)  உயர்நிலை பள்ளியில் தேர்ச்சி பெற்றார். பள்ளி படிப்பை முடித்தவுடன்  அவரது தந்தை ஸ்டான்லியை வீட்டு வாடகை செலுத்த சொன்னார். இல்லாவிட்டால் வீட்டை விட்டு வெளியேற சொன்னார் . வீட்டை விட்டு வெளியேறிய ஸ்டான்லி "இன்டர்லேக் ஸ்டீல்" என்ற உருக்காலைக்கு சென்றார். அவருக்கு இரும்பு உலோக கற்களை (taconite) உலைகளத்தில் அள்ளிப் போடும் வேலை உடனடியாக கிடைத்தது.  இந்த கடினமான உடலுழைப்பு மிகுந்த வேலைக்கு  ஒரு மணி நேரத்திற்கு $2.32 கூலியாக கொடுத்தார்கள். இந்த பணம்  ஒரு அபார்ட்மெண்ட் மற்றும் ஒரு கார்  செலவுக்கு போதுமானது. அமெரிக்க கால்பந்து விளையாடும் உள்ளூர் போனிவிர்ஸ் அணியில் விளையாடுவதே ஸ்டான்லியின் கனவாக இருந்தது. ஸ்டான்லியின் கனவை நிறைவேற்ற அவரது ஊதியம் போதுமானதாக இருந்தது.

இன்றைய அமெரிக்காவில் துரித உணவு தொழிலாளர்கள் கோரி வரும் "$15க்கான போராட்டம்" வலுப்பெற்று வருகிறது. ஆனால் ஸ்டான்லி பெற்ற ஊதியம் இப்போது $ 17.17க்கு சமமானதாக இருக்கும். ஸ்டான்லியின் வேலை கேஎஃப்சிஇல் இறைச்சியை வறுக்கும் வேலையை விட மிகவும் கடினமானது. உருக்காலையின் உலைகள வெப்பம் 2,000 டிகிரி வரை இருக்கும். அது உயிருக்கு ஆபத்தானது. எனினும் சந்தை பொருளாதார விதிகளின்படி இவையெல்லாம் ஒரு பொருட்டேயில்லை. உலோக கற்களை உலைகளத்தில் அள்ளிப் போடுவதற்கு திறனுள்ள இரண்டு கைகள் இருந்தாலே போதும். ஸ்டான்லியின் வேலைக்கு துரித உணவக வேலைக்கு தேவைப்படும் திறமைகள் தேவையில்லை. டஜன் கணக்கான உணவுகளை சமைப்பது அல்லது கடையில் காத்து கொண்டிருக்கும் பல வாடிக்கையாளர்களின் ஆர்டர்களை சமாளிப்பது போன்ற திறமைகள் தேவையில்லை. சரளமான ஆங்கிலம் பேச தேவை இல்லை. எஃகு உருக்காலை தொழிலின் ஆரம்ப நாட்களில், பெரும்பாலும் போலந்து அல்லது பொகீமியாவிலும் இருந்து படகு மூலம் குடியேறியவர்களுக்கு வேலை ஒதுக்கப்பட்டது.


"இரவு முழுவதும் உருக்காலையில் இரும்பு தாதுகற்களை அள்ளிப் போட்டுக் கொண்டே இருக்க வேண்டும்." என ஸ்டான்லி தன் கடினமான வேலையை பற்றி நினைவு கூர்கிறார். "இன்டர்லேக் ஸ்டீல்" ஆலையில் வேலை பார்த்த பின்னர் ஒரு வருடம் வியட்நாம் போருக்கு சென்று திரும்பினார். அடுத்தபடியாக  விஸ்கான்சின் உருக்காலையில் பைப்-பிட்டர் அப்ரன்டிஸாக சேர்ந்தார்.

இராப் ஸ்டான்லி வாழ்ந்த வாழ்க்கையை அவரை போன்ற இன்றைய கடைநிலை தொழிலாளிகளால் நினைத்து கூட பார்க்க முடியாது. ஏனென்றால் "இன்டர்லேக் ஸ்டீல்" தொழிலாளர்கள் "ஐக்கிய அமெரிக்க எஃகு தொழிலாளர்கள்" என்ற தொழிற்சங்கத்தில் இருந்தார்கள். தொழிற்சங்கம் அவர்களுக்கு நல்ல சம்பளம் கிடைக்குமாறு பார்த்து கொண்டது. ஆனால் இன்றோ கேஎஃப்சி தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்த யாரும் இல்லை. அதனால் ஆட்சிமன்றமான காங்கிரஸில் குறைந்தபட்சமாக என்ன முடிவு செய்கிறதோ அதையே ஊதியமாக ஏற்க வேண்டிய நிலை உள்ளது.

துரித உணவு கடைகளில் கொடுக்கும் குறைந்த ஊதியத்திற்கு ஆதரவாக பிற்போக்கான வாதங்கள் கூறப்படுகிறது. அதாவது தொழிலாளர்கள் தங்கள் திறமைக்கேற்ப தான் சம்பளம் பெறுகிறார்கள். அதிக பணம் வேண்டும் என்றால் அதிக கல்வி பெற வேண்டும் என வாதிடுகிறார்கள். அது தர்க்கப்பூர்வமாக அர்த்தமுள்ளதாக இல்லை. தொழிலாளிகளுக்கு வெறுமனே திறமைகளுக்கு  ஏற்ப சம்பளம் கிடைப்பது இல்லை. அவர்கள் தங்கள் முதலாளிகளுடன் எவ்வளவுக்கு எவ்வளவு பேச்சுவார்த்தை நடத்த முடியுமோ அவ்வளவு தான் பெற முடியும். இப்போது தனியார் துறை தொழிலாளர்கள் வெறும் 6 சதவீதம் பேர் மட்டுமே தொழிற்சங்கத்தில் இருக்கிறார்கள். இவர்கள் வேலைநிறுத்தம் செய்தால் வேலையை இழப்பது உறுதி. தொழிற்சங்கம் வலுவாக இல்லாததால் தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை திறனற்று இருக்கிறார்கள்.

இதுவரை அன்றைய எஃகு துறை தொழிலாளர்களையும், இன்றைய துரித உணவக தொழிலாளர்களையும் ஒப்பிட்டு பார்த்தோம். இனி ஒரே துறை தொழிலாளர்களின் நிலைமையில் அன்றும் இன்றும் என்ன வேறுபாடு என்று பார்ப்போம். உதாரணத்திற்கு கறி வெட்டுதல் மற்றும் பதப்படுத்துதல் துறையை எடுத்து கொள்வோம்.

கறி வெட்டும் வேலை அருவெருப்பாக இருப்பதால், அமெரிக்கர்களுக்கு  இது பிடிக்காது என கசாப்பு நிறுவனங்கள் கூறுகின்றன. அதனால் தான் வெளிநாட்டில் இருந்து குடியேறியவர்களை வேலைக்கு எடுப்பதாக  வலியுறுத்துகின்றனர். (இந்த துறையின் அவலங்களையும், குடியேறியவர்களின் அல்லல்களையும் பற்றி அப்டன் சின்கிளேர் என்ற எழுத்தாளர் "தி ஜங்கிள் "   என்ற புதினத்தை எழுதினார்.) அப்டன் சின்கிளேர் இப்புத்தகத்தை எழுதிய காலகட்டத்தில் ஐரோப்பிய குடியேற்றக்காரர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தனர். இன்று இலத்தீன் அமெரிக்க குடியேற்றக்காரர்களை அதே வேலைக்கு நியமிக்கிறார்கள். அமெரிக்கர்கள் பன்றிகள் , ஆடு, மாடுகளை இறைச்சிக்காக வெட்ட மாட்டார்கள் என்பது மாபெரும் அண்டபுளுகு. இது நமக்கு எப்படி தெரியும்? அமெரிக்காவில் 1925 முதல் 1965 வரை குடியேற்றம் வெகுவாக குறைக்கப்பட்டு ஏறக்குறைய குடியேற்றத்திற்கு தடை செய்யப்பட்டிருந்தது. அந்த காலக்கட்டத்தில் பன்றிகள், ஆடு, மாடுகளை மில்லியன் கணக்கில் வெட்டியவர்கள் யார்? அமெரிக்காவில் பிறந்த நடுத்தரவர்க்கத்தினர் தான் இறைச்சி கூடத்தில் வெட்டினார்கள்.   அவர்கள் அமெரிக்கர்களே.

"மதர் ஜோன்ஸ்" என்ற இதழ் இந்த இறைச்சி துறையில் நடந்த மாற்றங்களை தெளிவாக விளக்குகிறது : "1960களின் முற்பகுதியில் அயோவா மாட்டிறைச்சி ( IBP) நிறுவனம், தொழிற்சங்கங்கள் இல்லாத கிராம பகுதிகளில் தனது தொழிலை ஆரம்பித்தது. மெக்ஸிக்கோவில் இருந்து குடியேறிய தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டனர். 1970களின் பிற்பகுதியில் மாமிசம் பதனிடும் நிறுவனங்கள் அயோவா மாட்டிறைச்சி நிறுவனத்தின் வணிக முறைகளை பின்பற்ற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர்.  அல்லது இறைச்சி துறையில் இருந்து வெளியேற வேண்டும் என்ற நிலை இருந்தது. மாமிச பதனிடும் தொழிலில் ஊதிய விகிதங்கள் வெகு விரைவில் சரசரவென  50 சதவீதம் சரிந்தது."

நிக் ரேடிங் என்ற எழுத்தாளர் தனது "மேத்லேன்டு" என்ற புத்தகத்தில் அயோவா  மற்றும் அதனை சுற்றியுள்ள சிறு நகரங்கள் நலிவடைந்த வரலாறை பதிவு செய்துள்ளார். அந்த புத்தகத்தில் ரோலண்ட் ஜார்விஸ் என்ற தொழிலாளியை பேட்டி எடுத்துள்ளார். ரோலண்ட் ஜார்விஸ் அயோவா ஹாம் என்ற இறைச்சி நிறுவனத்தில் மணிநேரத்திற்கு $18 என்ற சம்பளத்துடன் 1992 வரை பணிபுரிந்து வந்தார். பின்னர் ஒரு மெகா நிறுவனம் அயோவா ஹாம் நிறுவனத்தை வாங்கிய பின் அங்குள்ள தொழிற்சங்கத்தை உடைத்தது. அதன் பின்னர் சம்பளம் $6.20 என குறைத்தது அந்த மெகா நிறுவனம். ரோலண்ட் ஜார்விஸ் தனது வருமான இழப்பை ஈடு செய்ய கூடுதல் நேரம் வேலை செய்தார்.

அமெரிக்கர்கள் மணி நேரத்திற்கு $18 சம்பாதிக்க பன்றிகளை கொல்வார்களா? என்ற கேள்விக்கே இடமில்லை. கண்டிப்பாக கொல்வார்கள். இந்த வேலைகளுக்காக நீண்ட வரிசையில் காத்து கிடந்தார்கள். இறைச்சி கூடத்தின் தொழிற்சங்கங்கள் வலுவிழந்ததால் எவ்வளவுக்கெவ்வளவு குறைவான ஊதியம் கொடுக்க முடியுமோ அவ்வளவு குறைவாக கொடுத்தார்கள். ஆபத்தான பணிச்சூழல் இருந்தாலும் மெக்சிகோவிலிருந்து புலம்பெயர்ந்தவர்களுக்கு இங்கு கிடைக்கும் சொற்ப பணமும் அவர்களது நாட்டில் பெரிய குவியலாக கருதப்பட்டது. குறைவான ஊதியத்திற்கு ஒத்துக்கொள்வதால் இறைச்சி நிறுவனங்களும் குடியேறியவர்களையே வேலைக்கு அமர்த்தியது.

அமெரிக்க ஜனாதிபதி கிளவ்லேண்ட் 1894 இல், புல்மேன் இரயில் தொழிற்சாலையில் வேலைநிறுத்தத்தை முறியடிக்க 2,500 படைகளை அனுப்பி 30 பேரை கொன்றார். சிகாகோ போலீசார்  1937 இல், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த எஃகு ஆலை தொழிலாளர்கள் 10 பேரை கொன்றனர். இறந்த தொழிலாளர்களின் பெயர்கள் அவர்களின் நினைவாக எஃகு தொழிற்சாலையின் வாசலில் இருக்கும் கொடிக்கம்பத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. அவர்களில் பலர் பல மொழிகள் தெரிந்து வைத்திருந்தார்கள். இந்த நினைவு சின்னம் ராப் ஸ்டான்லியின் சொந்த ஊருக்கு அருகே தான் உள்ளது.

நான் ஸட்லொவ்ஸ்கியுடன் சுற்றுப்பயணம் செய்த நாட்களில் மேலே சொன்ன இடங்களை பார்த்தேன்.(ஸட்லொவ்ஸ்கி எஃகு உருக்காலை தொழிற்சங்கத்தில் இருந்தவர்.) அவர் தொழிலாளர்களுக்கு தொழிற்சங்க வரலாறை விளக்குவதற்காக சுற்றுப்பயணம் செல்லும்போது என்னையும் அழைத்து சென்றிருந்தார். ஸட்லொவ்ஸ்கி தொழிலாளர் இயக்கத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். கவிஞர்கள் தங்களை  தொழிலாளர்கள் போன்றும்,  தொழிலாளர்கள் தங்களை  கவிஞர்கள் போன்றும் நினைத்து கொள்ள வேண்டும் என்பார்.

புதிதாக சேரும் அப்ரண்டீசுகள் புதிய பிராண்டு கார்களை ஓட்டுவதை பார்த்திருக்கிறேன். அதுவும் தொழிற்சங்கத்தால் போராடி கிடைக்கப் பெற்ற முதல் மாத சம்பளத்தில் "டாட்ஜ் ராம்ஸ்" எனப்படும் பெரிய வகை கார்களை வாங்குவதையும் பார்த்திருக்கிறேன். அதே சமயம் பட்டதாரிகள் பத்திரிக்கை உதவியாளராகவோ அல்லது புத்தக கடையில் பணியாற்றி வெறும் $9.50 சம்பாதிப்பவர்களையும் பார்த்திருக்கிறேன். இவர்கள் தொழிற்சங்கம் ஆரம்பிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை.

ஸட்லொவ்ஸ்கியிடம் இதை பற்றி கேட்டுள்ளேன். அதற்கு அவர் கூறியதாவது - வெள்ளை காலர் தொழிலாளர்கள் சார்லஸ் டிக்கன்சின் கதாபாத்திரம் "பாப் கிராட்சிட்" போல இருப்பார்கள் (மாடசாமியின் "மெய்கண்டன்’ போல சின்சியராக இருப்பார்கள்). முதலாளிக்கு அடுத்த படியில் இருப்பதாக எண்ணம் அவர்களுக்கு உண்டு. முதலாளி தன்னை பெயரை சொல்லி அழைக்க சொல்வதால் பெருமிதம் கொள்கிறார்கள். சாதாரண ஷூ கடைக்கு சென்று பாருங்கள். அங்கு 6 மேலாளர்கள் இருப்பார்கள். ஆனால் ஒருவருக்கும் உருப்படியான சம்பளம் இருக்காது.

முதலாளிகளின் மிகப்பெரிய வெற்றி தொழிற்சங்கங்களை உடைப்பதில் இல்லை. அது தேவையற்றது தான். அமெரிக்க  எஃகு தொழிலாளர்கள் 1974இல் 521,000 இருந்து இன்று 150,000ஆக குறைந்துள்ளனர். இலட்சக்கணக்கான வேலைகள் ஆட்டோமேஷன் மற்றம் வெளிநாடுகளுக்கு அவுட்சோர்சிங் செய்வதன் விளைவாக காணாமல் போயுள்ளது .

"நான் இந்த நிறுவனத்தில் சேர்ந்த போது 28,000 தொழிலாளர்கள் இருந்தனர் " என்கிறார் ஜார்ஜ் ரான்னே என்று ஒரு முன்னாள் நிர்வாகி கூறினார். இன்டியானாவில் இருக்கும் "இன்லாண்டு ஸ்டீல்" என்ற ஆலை 1998இல் ஆர்சலர்  மிட்டலால் வாங்கப்பட்டது. "நான் வேலையை விட்ட போது  தொழிலாளர்கள் எண்ணிக்கை 6000 தான் இருந்தது. அன்று உற்பத்தி செய்த 5 மில்லியன்  டன் ஸ்டீல் இன்றும் உற்பத்தி செய்யப்படுகிறது.  அதே தரத்தில் ஆனால் குறைந்த விலைக்கு இன்று உற்பத்தி செய்யப்படுகிறது." என்கிறார் ஜார்ஜ் ரான்னே.

முதலாளிகளின் மிக பெரிய வெற்றி தொழிற்சங்கத்தை வலுவிலக்க செய்வது தான். அதனால் அதிக சம்பளம் கொடுக்கப்பட்ட வேலைகள் நீக்கப்பட்டன. ஸ்டான்லிக்கு அதிர்ஷ்டம் இருந்தது. விஸ்கான்சின் ஸ்டீல் 1980 ல் மூடப்பட்ட பின்னர், அவர் சில காலம் சில உதிரி வேலைகள் செய்தார்.  இறுதியாக மத்திய அரசில் பிளம்பர் வேலையில் சேர்ந்தார். அரசு துறையில் தான் அதிகபட்சமாக தொழிற்சங்கங்க பங்கேற்பு 35.9 விகிதத்துடன் இருக்கிறது . வேலையில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் தொழிலாளர்கள் இன்று சோடா பானங்கள் விற்பவர்களாக அல்லது பாதுகாப்பு காவலர்களாக (செக்யூரிட்டியாக) பணியாற்றுகிறார்கள்.


உயர் பள்ளி படிப்பை முடித்த இன்றைய மாணவனை "வீட்டு வாடகை கொடு அல்லது வீட்டை விட்டு வெளியே போ" என கூறினால் என்ன செய்வார்கள்? எங்கு செல்வார்கள்? இன்று அவர்கள் கேஎஃப்சி-க்கு செல்லலாம். அங்கு ஸ்டான்லி பெற்றதை விட 57 சதவீதம் குறைவான சம்பளம் அதாவது  மணி நேரத்திற்கு $7.62 தான் கிடைக்கும். கேஎஃப்சி குறைந்த ஊதியம் கொடுத்து கொள்ளை லாபம் சம்பாதிக்கிறது. ஸ்டான்லி சம்பாதித்தது போல் இன்று எந்த கேஎஃப்சி தொழிலாளியும் சம்பாதிக்கவில்லை. ஏனெனில் அங்கு தொழிற்சங்கம் அமைக்கும் சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவு. சிதறி கிடக்கும் டஜன் கணக்கான கடைகளிலுள்ள தொழிலாளர்களை திரட்ட முடிவதில்லை. ஒரு எஃகு ஆலை தொழிலாளர்களை அமைப்பாக்க முடிவதை விட கேஎஃப்சி தொழிலாளர்களை அமைப்பாக்குவது கடினமாக உள்ளது.

அடுத்து அலுவலக தொழிலாளர்களை பார்ப்போம். ஸட்லொவ்ஸ்கி சரியாகவே சுட்டிக்காட்டினார். தொழிலாளி வர்க்க உணர்வு இல்லாததே அலுவலக தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தில் இணையாமல் இருப்பதன் காரணம். சிகாகோ குரூப்பான் என்ற புகழ் பெற்ற நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்து  பட்டதாரிகளும் வருடத்திற்கு $ 37,800 தான் சம்பாதிக்கின்றனர். இதே சம்பளம் தான் அன்று கல்லூரி படிப்பில்லாத ஸ்டான்லியின் ஆரம்ப சம்பளமாக இருந்தது. இன்றைய பட்டதாரிகள் படித்திருப்பதாலும் மேசைகளில் உட்கார்ந்து வேலை செய்வதாலும் நீல காலர் தொழிலாளர்களை போல வேலை நிறுத்தம் செய்து அதிக ஊதியம், நல்ல பணி நிலைமைகள் பெற வேண்டும் என்று நினைப்பதில்லை .

இன்றைய கல்லூரி பட்டதாரிகளின் வாழ்க்கை தரமும் 1960 களின் குறைந்த திறமையுள்ள தொழிலாளர்களின் வாழ்க்கை தரமும் ஒரே மாதிரி தான் இருக்கிறது. இந்த உண்மை நமக்கு உணர்த்துவது என்னவெனில் அடிப்படையில் இவர்களின் அணுகுமுறை  தவறு என்று ஆணித்தரமாக நிரூபிக்கிறது . நாம் நடுத்தர வர்க்கம் என நினைப்பது தவறு. எவ்வளவு சம்பாதித்தாலும் எந்த வேலை செய்தாலும் நாம் தொழிலாளி வர்க்கம் என்பதை உணர வேண்டும். உடல் உழைப்பு செய்கிறோமா என்பது முக்கியமில்லை. முதலாளிக்கும் நமக்கும் உள்ள உறவு தான் நாம் யார் என தீர்மானிக்கிறது. நிறுவனம் உங்களுக்கு சொந்தமில்லை என்றால் நீங்கள் தொழிலாளி வர்க்கம் தான்.

"நான் பார்த்ததிலேயே புத்திசாலியான மக்கள் ஆலையை இயக்கிய தொழிலாளர்கள் தான்" என ஸட்லொவ்ஸ்கி கூறுவார் .

ஆமாம் அவர்கள் தான் திறமையானவர்கள். ஏனெனில் அந்த தொழிலாளர்கள் தான் நிறுவனத்தின் இலாபத்தில் இருந்து நியாயமான பங்கையும், அவர்களின் உரிமைகளையும் போராடி பெற்றனர்.




குறிப்பு:

எட்வர்ட் மெக்கிளெலேண்டு எழுதிய புத்தகங்கள்,
1. இளம் ஒபாமா : சிகாகோ மற்றும் ஒரு கறுப்பு ஜனாதிபதி உருவாகிய கதை
(Young Mr. Obama: Chicago and the Making of a Black President)
2. வானம் தவிர வேறொன்றுமில்லை:  அமெரிக்காவின் தொழில்துறையின் செல்வாக்கும், துயரங்களும், நம்பிக்கைகளும்
(Nothing But Blue Skies: The Heyday, Hard Times and Hopes of America's Industrial Heartland.)

தொடர்புடைய பதிவுகள்: