Monday, February 18, 2013

ஆரன் ஸ்வார்ட்ஸ் அறிக்கை: அறிவுசார் களஞ்சியங்களை மீட்டெடுப்போம்!

ஆரன் ஸ்வார்ட்ஸ் சிறு வயது முதலே கணினி மற்றும் இணையத்தில் ஆர்வமிக்கவராக இருந்தார். பதின் வயதுகளிலேயே ஆர்.எஸ்.எஸ் தொழில்நுட்பம் உட்பட பல சாதனைகளை செய்து காட்டினார். ரெட்டிட் என்ற வலைதளத்திற்கு பெரும்பங்காற்றினார். இளம்வயதிலேயே கணினி மற்றும் இணைய நிபுணராக திகழ்ந்தார். அவர் இணைய போராளியாகவும் இருந்தார். குறிப்பாக அமெரிக்காவின் "சோப்பா" எனப்படும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பயன்படும், இணைய கட்டுப்பாட்டு சட்டத்தை எதிர்த்து போராடி வெற்றி பெற்றதில் சிறப்பான பங்காற்றினார்.

அரசின் கொடூர சட்டங்களை எதிர்த்து போராடிய ஆரன் ஸ்வார்ட்ஸ், 2013 ஜனவரி 11ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். மசாசூசட்ஸ் பல்கலைகழகம் மற்றும் கார்ப்பரேட் கம்பெனிகளின் நிர்பந்தங்களும், அமெரிக்காவின் கருப்பு சட்டங்களின் அச்சுறுத்தல்களுமே அவரது தற்கொலைக்கு காரணம்.

அறிவுசார் பொக்கிசங்களை கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து மீட்டெடுக்க 2008ஆம் ஆண்டு கொரில்லா அறிக்கை என்ற தலைப்பில் ஒரு அறிக்கை எழுதினார். அவ்வறிக்கையுன் மொழியாக்கம்:

மனித அறிவு செல்வத்தின் ஆற்றல் மகத்தானது. அனைத்து செல்வங்களையும் போன்று மனித குலத்தின் அறிவு செல்வங்களையும், கார்ப்பரேட் நிறுவனங்கள் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். பன்னெடுங்காலங்களாக பல நாட்டு விஞ்ஞானிகள், அறிஞர்களின் உழைப்பால் கிடைத்த கலாச்சார மற்றும் அறிவியல் தகவல்களை இந்நிறுவனங்கள் ஆவணப்படுத்துகிறார்கள். ஆனால் அவற்றை பிறருக்கு கிடைக்காத வண்ணம் தடுத்து வருகிறார்கள். நீங்கள் அறிவியல் ஆய்வு கட்டுரைகளையும், சிறப்பான ஆவணங்களையும் படிக்க விரும்புகிறீர்களா? அப்படியானால், ரீட் எல்சேவியர் போன்ற நிறுவனங்களுக்கு பெருமளவிலான பணம் கட்ட வேண்டும்.

இந்த இழிநிலையை மாற்ற சிலர் போராடி வருகின்றனர். காப்புரிமை என்ற பெயரில் இதுவரை திரட்டிய அறிவு செல்வத்தை ஏற்கனவே நாம் இழந்து விட்டோம். இனிமேலாவது, விஞ்ஞானிகள் தனது ஆராய்ச்சி முடிவுகளை காப்புரிமை என்ற பெயரில் அடகு வைக்காமல், இணையத்தில் பிரசுரிக்க வேண்டும். யார் வேண்டுமானாலும் படிக்கலாம் என்ற வகையில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இப்படி செய்தால் வருங்காலத்திலாவது நமது அறிவுசார் தகவல்களை அனைவருக்கும் கிடைக்கும்படி செய்யலாம்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பல்கலைகழகங்கள் நூலகங்களில் உள்ள அனைத்து புத்தகங்களையும் ஸ்கேன் செய்து ஆவணப்படுத்தி உள்ளார்கள். ஆனால் அவற்றை அனைவருக்கும் கிடைக்கும்படி செய்வதில்லை. ஆராய்ச்சியாளர்கள் தங்களது சக ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுகளை வாசிக்கவே பெரும்பணம் செலுத்த நிர்பந்திக்கப்படுகிறார்கள். வல்லரசு நாடுகளில் உள்ள அதிசிறந்த பல்கலைகழகங்களில் உள்ள அறிவுஜீவிகளுக்கு மட்டும் இந்த அறிவுசார் தகவல்களை பெற அனுமதி கிடைக்கிறது. மற்றவர்களுக்கு குறிப்பாக, மூன்றாம் உலக நாடுகளில் உள்ளோர்க்கு இவற்றை பெற அனுமதிக்காதது ஏன்? இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்த அறிவுசார் களஞ்சியங்களுக்கு காப்புரிமை பெற்றிருக்கிறார்கள். அதனால் அந்த அறிவுசார் தகவல்களை பெறுவதற்கு அதிக விலை நிர்ணயிக்கிறார்கள். “இது சட்டபூர்வமானது. இதை தடுக்க நாம் என்ன செய்ய முடியும்?” என பலர் சொல்கிறார்கள். நம்மால் இயன்றதை செய்யமுடியும். இந்த அநீதியை எதிர்த்து போராட முடியும்.

மாணவர்கள், நூலகர்கள் மற்றும் விஞ்ஞானிகள் போன்றோர்க்கு இந்த அறிவுசார் பொக்கிசங்களை அணுகுவதற்கு சலுகை இருக்கிறது. ஆனால் உலகில் உள்ள ஏனையோர்க்கு இந்த வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த அறிவுசார் பொக்கிசங்களை உலகுக்கு பகிர்வது உங்களது கடமை. அது தான் சரியானதாக இருக்க முடியும்.

சில சமயங்களில் நண்பர்களுக்காக அல்லது சில நல்ல நோக்கங்களுக்காக அறிவுசார் தகவல்களை பதிவிறக்கி உலகுக்கு பகிர்ந்து கொள்கிறீர்கள்.  ஆனால் இந்த நடவடிக்கைகளை “பைரசி”, அதாவது காப்புரிமை பெற்றவற்றை திருடுதல் என்கிறார்கள். தான் பெறமுடிந்த அறிவு செல்வத்தை மற்றவர்களுடன் பகிர்வதை கொலை குற்றத்திற்கும் மேலானதாக சொல்கிறார்கள். ஒரு சுயநலக்காரன் வேண்டுமானால், தனக்கு கிடைத்த அறிவுசார் தகவல்களை தன் நண்பர்களுக்கு கொடுக்காமல் இருக்கலாம். ஆனால் தான் பெற்ற இன்பத்தை பிறர்க்கு அளிப்பதே சிறந்த அறமாகும். அறிவு செல்வத்தை பகிர்வது தார்மீக ரீதியில் ஒருபோதும் குற்றமாகாது.

பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் பேராசைக்காரர்கள். அவர்களுக்கு தேவையான சட்டங்களை இயற்ற அரசியல்வாதிகளை வாங்குகிறார்கள். அறிவுசார் தகவல்களை யார் எப்படி கையாளலாம் என, பெரும் நிறுவனங்களுக்கு பயனளிக்க கூடிய வகையில் சட்டங்களை இயற்றுகிறார்கள். அநீதியான சட்டங்களை பின்பற்றுவது சரியானது அல்ல. இந்த அநீதியான சட்டங்களை எதிர்க்க வேண்டும். அதுவே நமது போராட்ட பாரம்பரியம் ஆகும்.

எங்கெங்கெல்லாம் அறிவுசார் தகவல்கள் சேமிக்கப்பட்டுள்ளனவோ அவற்றை நாம் நகல் எடுத்து உலகுக்கு பகிர வேண்டும். அந்த ஆவணங்களை பாதுகாக்க வேண்டும். இவற்றை சேமிக்க நாம் இரகசிய தரவுத்தளங்களை வாங்க வேண்டும். பின் அவற்றை இணையத்தில் வலையேற்றம் செய்ய வேண்டும். விஞ்ஞான பத்திரிக்கைகளை தரவிறக்கம் செய்து பகிர்வு நெட்வொர்க்குகளில் ஏற்ற வேண்டும். நாம் கொரில்லா முறையில் அறிவுசெல்வத்தை மீட்டெடுக்க போராட வேண்டும்.

உலகெங்கும் வியாபித்திருக்கும் நாம் ஒன்று சேர்ந்து, அறிவு செல்வத்தை தனியார்மயப்படுத்துவதை எதிர்ப்போம். இந்த இழிசெயலை ஒழித்து கட்டுவோம். அறிவுசார் செல்வத்தில் தனியுடைமை என்பதை பழங்கதை ஆக்குவோம். மனித குலத்தின் அறிவுசெல்வத்தை பொதுவுடைமை ஆக்குவோம். நீங்களும் எங்களுடன் சேர்ந்து போராட தயாரா?

-    ஆரன் ஸ்வார்ட்ஸ்
      ஜூலை 2008, எரேமொ, இத்தாலி


தொடர்புடைய பதிவுகள்: