Wednesday, February 12, 2014

தமிழர் நலன் கெடும் இடத்தில் கிளர்ச்சி செய் - தில்லை மாநாடு!

தில்லைக்கோயில் இனி தீட்சிதன் சொத்து என சென்ற மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். இந்த அநீதியை எதிர்த்து பொதுமக்களிடம் பரப்புரையை செய்ததை அடுத்து இப்போது தில்லைக்கோவில் மீட்பு மாநாடு பிப்ரவரி 16ஆம் தேதி நடக்க இருக்கிறது. மாநாட்டு விவரங்களை பார்க்கும் முன் தில்லை கோவில் மற்றும் தீட்சிதர்கள் பற்றி சுருக்கமாக பார்போம்.

முன்கதை சுருக்கம்:

தன்னை வழிபடுவதற்காகவே கைலாசத்திலிருந்து சிவபெருமானால் அனுப்பி வைக்கப்பட்டவர்கள் தான் இந்த தீட்சிதர்களாம். அதனால் தில்லைக் கோவிலும் அதன் சொத்துகளான சுமார் 2,700 ஏக்கர் நிலம் மற்றும் பல கோடி மதிப்புள்ள நகைகள் அனைத்தும் தீட்சிதர்களுக்கே சொந்தம் என்கிறார்கள். இப்படி பொய்யும் புரட்டுக்களையும் பரப்பி வருகிறார்கள். ஆயிரமாண்டுகளாக தீட்சிதர்கள் தில்லை கோயிலின் சொத்துக்களை திருடி, சுரண்டி, உண்டு கொழுத்து வருகின்றனர்.. நந்தனாரை இழிவுபடுத்தி வேள்வித் தீ முட்டி கொன்றொழித்தார்கள் தீட்சித பார்ப்பனர்கள்.

தமிழர்களின் வெற்றி - 1:

பதிமூன்று ஆண்டுகளுக்கு முன் நடராசர் கோயிலின் சிற்றம்பல மேடையில் நின்று திருவாசகம் பாடிய சிவனடியார் ஆறுமுகசாமியை அடித்து கையை முறித்து வீசினார்கள் தீட்சிதர்கள். தமிழ்பற்றும், சுயமரியாதையும் மிகுந்த சிவனடியார் ஆறுமுகசாமியின் விடாமுயற்சியாலும் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் தொடர் போராட்டத்தாலும் 2008இல் பக்தர்கள் அனைவரும் திருச்சிற்றம்பல மேடையில் நின்று தேவாரம், திருவாசகம் பாடி இறைவனை வழிபடலாம் என்ற ஆணையைப் பெற்றார்கள். அப்போது தீட்சிதர்கள் நடத்திய காலித்தனங்களை தொலைக்காட்சியில் நீங்களும் பார்த்திருக்கலாம்.

தமிழர்களின் வெற்றி - 2:

தாய்மொழி தமிழை திருச்சிற்றம்பல மேடை ஏற்றியதோடல்லாமல் தொடர்ந்து தீட்சிதப் பார்ப்பனர்களின் ஆயிரமாண்டு ஆதிக்கத்தை வீழ்த்த போராடி வந்தனர் மனித உரிமை பாதுகாப்பு மையத்தினர். இதன் காரணமாக 2009இல்  தீட்சிதர்களிடமிருந்து கோயிலின் நிர்வாகத்தை இந்து அறநிலைய ஆட்சித் துறைக்கு மாற்றும் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்ற வழங்கியது. இப்படி தமிழ் மற்றும் தமிழர் விரோதிகளான தீட்சிதர்களையும், மொழி தீண்டாமையையும் எதிர்த்து, போராடி வெற்றி பெற்றனர் நம் தோழர்கள். இந்த இரு தீர்ப்புகளும் தமிழர்களை தலை நிமிர வைத்தது என்றால் மிகையல்ல.

பார்ப்பனர்களின் சதி வென்றது!

ஆனால் நயவஞ்சக தீட்சிதர்ளும் சும்மா இருக்கவில்லை. உச்ச நீதிமன்றத்தில் ஜெயா அரசின் பாராமுகம் மற்றும் கோழி முட்டை புகழ் சுப்ரமணிய சாமியின் துணை கொண்டு தமிழர்களின் வெற்றியை முறியடித்துள்ளனர் தீட்சிதர்கள். தமிழ்மக்கள் சொத்தான தில்லைக்கோயில் இனி தீட்சிதன் சொத்து என சென்ற மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதன் மூலம் 40 ஏக்கர் பரப்பளவுள்ள தில்லை கோயிலும், சுமார் 2,700 ஏக்கர் நிலமும், பல கோடி மதிப்புள்ள நகைகளும் திருட்டு தீட்சிதர்கள் வசம் சென்று விட்டது. இது நமக்கு இடைக்கால பின்னடைவே.


"கெடல் எங்கே தமிழர் நலன், அங்கெல்லாம் தலையிட்டு கிளர்ச்சி செய்க" என்றார் புரட்சிகவிஞர் பாராதிதாசன். சுயமரியாதை உள்ள ஒவ்வொரு தமிழனும் மொழி தீண்டாமைக்கெதிராக கிளர்ந்தெழ வேண்டும். தன்னால் இயன்றளவில் முன்மயற்சியுடன் வினையாற்ற வேண்டும். இறுதி வெற்றி தமிழர்களுக்கே!

தமிழ் மற்றும் தமிழர்களுக்கு ஊறு விளைவிக்கும் இந்த இழிநிலையை எதிர்த்து தில்லைக்கோவில் மீட்பு மாநாடு நடக்கிறது. அதன் விவரங்கள் கீழே.

கெடல் எங்கே தமிழர் நலன், அங்கெல்லாம் தலையிட்டு கிளர்ச்சி செய்வோம்!

நூற்றாண்டு கால தில்லைக் கோவில்
வழக்கில்...பார்ப்பன தீட்சிதர்களின்
சூழ்ச்சியால் கிடைத்த 'உச்சிகுடுமி' தீர்ப்பை
ஏற்க முடியுமா?

முப்பாட்டன் நந்தனாரையும், பெத்தான்
சாம்பானையும், வள்ளலாரையும் தீர்த்துக்
கட்டிய தீட்சிதர்களை - அந்தணர்கள்
என அழைப்பது சரியானதா?

அரசியல் சட்டத்தின் பொந்துகளில் புகுந்து
மத உரிமை என்ற போர்வையில்
இறைப்பணி என்ற பெயரில் சொத்துக்களை
குவிப்பதை அனுமதிக்கலாமா?

வழக்கொழிந்த சமஸ்கிருதமே தேவ பாசை!
செம்மொழியான தமிழ் நீச பாசை என
மொழித் தீண்டாமையை கக்கும், சிற்றம்பலத்தில்
தமிழ் ஏறுவதையும், தில்லை கோவிலை அரசு
ஏற்பதையும், எதிர்ப்பவர்களை கண்டு
வேடிக்கை பார்க்கலாமா?

ஆலயத் தீண்டாமையை கடைபிடிக்க
ஆகமம், சாத்திரம் என ஏய்க்கும்
ஆரியப் பார்ப்பன கும்பலின்
ஆதிக்க வெறியாட்டத்தை
பெரியார் மண்ணில் அனுமதிக்க முடியுமா?

விடை காணவும், வினை ஆற்றவும் வாருங்கள்...!


உங்களை,
தமிழ் பற்றாளர்களை,
பக்தர்களை
அழைக்கிறது,

தில்லைக் கோவில் மீட்பு ஆலயத் தீண்டாமை ஒழிப்பு மாநாடு!
தொடர்புடைய பதிவுகள்:

No comments: