Saturday, May 26, 2007

பருத்தி வீரன் - பொறுக்கித்தனத்தின் இரசனையா யதார்த்தத்தின் ருசி?


பருத்திவீரனை பற்றி வித்தியாசமான படம், கிராமத்து மணம் வீசும் படம் என இரசிகர்கள் மத்தியில் பேசுப்படுகின்ற படம். ஆனால் இந்த படத்தில் ஒரு இரவுடியின் அற்ப வாழ்க்கையை இரசிக்கும்படி கொடுத்திருந்தாலும் அதில் செயற்கைத்தனங்களயும், கிராமத்து மக்களை எப்படி இழிவுப்படுத்துகிறது என எடுத்துரைக்கிறது, புதிய கலாச்சாரம் பத்திரிக்கையில் வெளியான பருத்தி வீரன் விமர்சனம். அவற்றில் இருந்து சில குறிப்புகள்.

வசூலில் வெற்றியடைந்திருக்கும் பருத்தி வீரனை மண்வாசனை கதை, அசலான பாத்திரங்கள், தெற்கத்தியப் பண்பாட்டைப் படம் பிடித்துக் காட்டும் காட்சிகள் என எல்லா அம்சங்களிலும் போற்றும் இரசிகர்கள் திரைப்படத்தின் இறுதியில் வரும் கற்பழிப்புக் காட்சிகள் குறித்து மட்டும் வருத்தப்படுகிறார்கள்.

சென்டிமென்டால் போட்டுத்தாக்கும் இந்த மலிவான உத்தியில் இரசிகர்களின் பிரச்சனையோ வேறு மாதிரி. முத்தழகு கூறுவது போல் அவர்கள் பருத்திவீரனின் முன்வினை அவளைச் சுட்டது என்று கருதவில்லை. மாறாக, ஒரு காதல் ஜோடி சேர முடியாமல் இரக்கமின்றிப் பிரிக்கப்பட்டதே அவர்களின் கவலை.

சித்தப்பா செவ்வாழையுடன் பருத்தி வீரன் செய்யும் குடி, கூத்து, ஆட்டம், பாட்டத்தை அவர்கள் பாவமாக கருதவில்லை. சொல்லப்போனால் பார்வையாளர்கள், குறிப்பாக ஆண்கள் அந்த கேளிக்கைகளில் மனதளவில் கலந்து கொள்கிறார்கள்.

காட்சிக்கு ஒரு நகைச்சுவை என செதுக்கித் தீட்டப்பட்ட திரைக்கதை பொதுவாக கலகலப்பாக செல்கிறது. பருத்திவீரனது வக்கிரங்கள் எவையும் பொது புத்திக்கு அதிர்ச்சி தராததோடு அவற்றை இரசிக்கும் வண்ணம் தரப்பட்டுள்ளது....

ஒவ்வொரு முறையும் புதிது புதிதாகப் பிழைக்க முயலும் டக்ளசை இருவரும் ஏமாற்றுகிறார்கள், பணம் பறிக்கிறார்கள். இதிலும் ஒரு கிராமத்து அப்பாவியை ஏமாற்றுவதாக இரசிகர்கள் உணர்வதில்லை. கவுண்டமமணி பாணியிலான இந்த காமெடி பார்வையாளர்களை சிரிக்க வைப்பதற்கான அரதப் பழசான உத்தி. நிஜ வாழ்வில் இப்படி அரட்டி மிரட்டி ஏமாற்றிப் பிழைக்கும் பேர்வழிகளை மக்கள் வெறுக்கிறார்கள். யதார்த்ததிற்காக போற்றப்படும் இந்தப் படத்தின் இலட்சணம் இது தான்....

இப்படி எல்லா சினிமாத்தனங்களும் செயற்கையான பாத்திரப் படைப்பும் கொண்டு நகைச்சுவையின் உதவியுடன் நேர்த்தியாகப் பின்னப்பட்ட சராசரி மசாலாதான் பருத்திவீரன்…….

இந்த யதார்த்தம் போலியானது. படத்தில் வழக்கு மொழி,உடலசைவு காட்சிகளன்கள், நாட்டுப்புறக் கலைகளில் மண்வாசனை அடித்தாலும், கதையில், உண்மையான கிராமம் இல்லை. உண்மயான கிராமம் இங்கே கேலி செய்யப்படுகிறது. தேவர் சாதியினர் ஆதிக்கம் செய்யும் கிராமத்தில் குறத்து பெண்ணொருத்தி சாராயம் காய்ச்சி ராச்சியம் செய்கிறாள். தொழில் போட்டிக்கு வரும் ஆதிக்கசாதி நபர்களை தன்னந்தனியாய் நின்று கொலை செய்கிறாள். இத்தகைய கிராமத்தை எங்காவது கேள்விப்பட்ட்ருக்கிறீர்களா?......

பருத்திவிரனைப் போன்ற இரவுடிகள், பணக்காரர்கள், பண்ணையார்களுக்கு எடுபிடி சேவகம் செய்து பிழைப்பார்கள். அடிமைகளுக்கு சுயேச்சையான, கலகலப்பான வாழ்வு இருக்க முடியுமா என்ன? பருத்திவீரன் உள்ளூரில் மட்டும் சண்டித்தனம் செய்வதால் ஊர் சுற்றி வம்பலப்பதற்கு நேரம் இருக்கிறது. அவன் விரும்பியபடி சென்னை ஜெயிலுக்கு போகுமளவுக்கு பெரிய ரவுடியாக இருந்தால்....போலீசு போடுமா, எதிரி போடுவானா என அச்சத்தில் வாழ வேண்டியிருக்கும்....

வேலை வெட்டிக்கு போகாமல் பெண்களின் காசில் குடித்து விட்டு ஊர் சுற்றும் கிராமப்புறத்தின் எச்சங்கள் தான் பருத்திவீரன் போன்ற அழுக்குகள். இந்த அழுக்கையே அலங்காரமாய், அழகாய், கலகலப்பாக காட்டுகிறார் இயக்குநர். இதை எவ்விதச் சுரணையுமின்றி இரசிக்கும் இரசணை தான் நமக்கு நெருடலைத் தருகிறது.

இந்த பொறுக்கிவீரன் பொற்க்கிவீரன் தங்களை கேலி செய்வதாக சாதாரண உழைப்பாளி மக்கள் முதல் படிப்பாளி இரசிகர்கள் வரை யாருமே உணர்வது இல்லை.

ஒரு திரைப்படத்தின் நாயகன் விவசாயியாகவோ, தொழிளாலியாகவோ தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அவன் நிலப்பிரபுவாகவோ, காமவெறி பிடித்த மிருகமாகவோ கூட இருக்கலாம். அவன் வாழ்க்கையை எப்படி பார்க்க பழக்குகிறார் என்பது தான் பிரச்சனை. ஒரு சொறி நாயின் அழகை இரசிக்க கற்று கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

நன்றி - புதிய கலாச்சாரம் மே 2007

4 comments:

selventhiran said...

இதுவரை வந்த ஜெயித்தவர்களை, ஒழுக்க சீலர்களை கதைமாந்தர்களாய் கொண்ட படங்களைத் தாண்டி, அறியப்படாத, எளிய, சாதாரண மனிதர்களின் சரித்திரத்தையும் தமிழ் சினிமா படைப்பாளிகள் இப்போதுதான் எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். எல்லாமே ஒரு சரித்திரம்தான். எல்லார் வாழ்க்கையும் வரலாறுதான். அதை எப்படி ரசிக்கும்படி, புரொடியூசரும், தியேட்டர் அதிபர்களும் பிழைக்கும்படி கொடுப்பது என்பதில் அடங்கியிருக்கிறது இயக்குநரின் சாமர்த்தியம். அந்த வகையில் சொறிநாயின் கதை கூட படமாக்கப்பட்ட விதத்தினால் ரசிக்கப்படலாம், படவேண்டும். தப்பில்லை.

சுனா பானா said...

எளிய, சாதாரண மனிதர்களின் சரித்திரத்தை எடுப்பது தப்பே இல்லை. அது வரவேற்கத்தக்கது தான். ஆனால் இந்த படத்தில் பருத்திவீரன் பாத்திரமும், அந்த கிராமும் முற்றிலும் செயற்கையாக உள்ளது. ஒரு நல்ல கலைப்படைப்பு இரசிக்க மட்டும் வைக்காமல் சிந்திக்கவும் வைக்க வேண்டும். இந்த படம் சிந்திக்க வைக்கவிட்டாலும் பரவாயில்லை, பல போலித்தனங்களை சித்தரித்து, கிராமத்தையும், கிராம மக்களையும் கேலி செய்கிறது.

பாவெல் said...
This comment has been removed by the author.
பாவெல் said...
This comment has been removed by the author.