Thursday, May 31, 2007

லெனின் உறங்குவதில்லை நம்மையும் உறங்கவிடுவதில்லை - அவர் எதிர்காலத்திற்கான வரலாறு


லெனின் எதிர்காலத்திற்கான வரலாறு - குறும்படம்
  • இது பறையோசையின் திரைத்தாளம் வெளியீடு.
  • இந்திய மொழிகளிலேயே லெனின் பற்றிய முதல் படம்
  • பாட்டாளி வர்க்கத்தின் மாபெரும் தலைவன் தோழர் லெனினின் வாழ்க்கை வரலாறு
  • இதை வாங்கி பாருங்கள், பிறரையும் பார்க்க செய்யுங்கள். ஏனெனில் அவர் எதிர்காலத்திற்கான வரலாறு.

பிரதி பெற விரும்புபவர்கள்,
கோ.நாகராசன் : 9443175256 என்ற தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.
சென்னை கீழைக்காற்று நூலகத்திலும் பெற முடியும்.


இவர் தான் லெனின் - பிரசுரம்

தோழர் லெனின் பற்றிய "இவர் தான் லெனின்" என்ற "புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி"-யின் பிரசுரம் லெனினது வாழ்க்கையை சுருக்கமாக, தெளிவாக சித்தரிக்கிறது.

1. லெனின் இறக்கவில்லை நம்முடன் வாழ்கிறார்

2. வறுமையை ஒழித்த லெனின்

3. துக்கம் சூழ்ந்தாலும் துவளாத மனிதன்

4. வக்கீல் உருவில் ஒரு போராளி!

5. லெனின் தேர்வு செய்த பாதை

6. போராட்டமே வாழ்க்கையாக...!

7. சைபீரியச் சிறைவாசம்

8. மரணத்தை மண்டியிடச் செய்த லெனின்

9. அடக்குமுறைக்கு அஞ்சாத போல்ஷ்விக்குகள்

10. ஜாரை வீழ்த்திய பிப்ரவரி புரட்சி

11. சதியை முறியடித்த லெனின்

12. சுரண்டலுக்கு முடிவு கட்டிய நவம்பர் புரட்சி

13. ஏகாதிபத்தியங்களை விரட்டியடித்து சோவியத்யூனியன்...

14. எதிரிகளை வீழ்த்திய செம்படை

15. பட்டினி கிடந்து சோசலிசத்தைப் பாதுகாத்த லெனின்

16. மக்களின் மகத்தான தலைவர் லெனின்

17. லெனின் உறங்குவதில்லை நம்மையும் உறங்கவிடுவதில்ல...


நன்றி - புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

Saturday, May 26, 2007

மாவீரன் பகத்சிங் - விடுதலைப் போரின் ஒப்பற்ற தலைவன்

பகத்சிங் - ஓர் அறிமுகம்

இந்தியா ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு அடிமையாக (காலனியாக) இருந்த காலம் அது. ஆங்கிலேயர்கள் நம் நாட்டுவளங்களை சுரண்டிக் கொள்ளையடித்தனர். மக்கள் வறுமையில் வாடினர். இதைப் புரிந்து கொண்ட மக்கள் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை ஒழிக்க போராடத் துணிந்தனர். போராடும் மக்கள் மீது ஒடுக்குமுறை ஏவப்பட்டது.

1919 ஏப்ரல் 13-ஆம் நாள் பஞ்சாபில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் ரவுலத் சட்டத்தை எதிர்க்கும் போராட்ட விளக்க கூட்டம் நடத்தப்பட்டது. திடீரென ஜெனரல் டயரின் தலைமையில் ஒரு படைப்பிரிவு கூட்டத்தைச் சுற்றி வளைத்து ஆயிரக்கணக்கான மக்களை சுட்டுக் கொன்றது. நாடெங்கும் மக்கள் கோபத்தால் பழிவாங்கத் துடித்தனர். ஆனால் எவருக்கும் அதற்கான வழி தெரியவில்லை. ஒரு 11 வயதுடைய சிறுவன் மட்டும் ரத்த சேறான மைதானத்திற்கு சென்று ஒரு கைப்பிடி மண்ணை எடுத்து வீட்டில் வைத்தான். தியாகிகளின் ரத்தம் தோய்ந்த மண்ணின் மீது சபதம் செய்தான். அச்சிறுவனின் பெயர் தான் பகத்சிங்.

நாட்டின் விடுதலையை தன் இலட்சியமாக ஏற்றுக் கொண்டான். அதை எப்படி அடைவது என ஆராயத் தொடங்கினான். பள்ளி படிப்பை முடித்து கல்லூரியில் சேர்ந்த பிறகு ஏராளமான புத்தகங்களை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவற்றில் இருந்து, ரஷ்ய நாட்டில் 1917 சோசலிச புரட்சிக்குப் பின்னர் அனைத்து மக்களும் அனைத்து வளங்களையும் சரிசமமாக பகிர்ந்து கொண்டு வாழ்வதைப் பற்றி அறிகிறார்.


அதற்கு காரணமான தலைவர் லெனினைப் பற்றியும் அறிகிறார். சோசலிசத் தத்துவதை தன் இலட்சியமாக ஏற்கிறார். காந்தியின் அகிம்சையால் இந்தியா விடுதலை அடைய முடியாது என அவருக்கு புரிகிறது. வெள்ளையர்களுக்கு துணையாக இந்தியாவிலுள்ள பண்ணையார்களும், முதலாளிகளும் இருக்கின்றனர். அவர்களைப் பாதுகாக்க போலீசும் இராணுவமும் உள்ளது. இவற்றை ஒழித்துக்கட்டி சுதந்திர இந்தியாவை உருவாக்க மக்கள் ஆயுதம் ஏந்தி புரட்சியில் ஈடுபட வேண்டும் என முடிவெடுக்கிறார்.


1925-ஆம் ஆண்டு தன்னைப் போன்ற கருத்துடைய இளைஞர்களை ஒன்று திரட்டி ஹிந்துஸ்தான் சோசலிச குடியரசு கட்சி என்ற புரட்சிகர அமைப்பைத் தொடங்குகிறார். விவசாயிகள், தொழிலாளிகளிடையே பிரச்சாரம் செய்து, அவர்களை ஒன்று திரட்டுகிறார். ஆயுதப் போராட்டத்தின் மூலம் இந்தியாவை விடுதலையடையச் செய்வதே அக்கட்சியின் திட்டம்.


1928-ஆம் ஆண்டு தேசத் தலைவர் லாலா லஜபதி ராயை போலீசார் அடித்துக் கொன்றனர். நாளுக்கு நாள் வெள்ளையரின் அட்டூழியம் அதிகரித்தது. காந்தியின் அகிம்சையால் ஒன்றும் உறுப்படியாக செய்ய முடியவில்லை. மக்கள் என்ன செய்வது என தெரியாமல் தவித்தனர். பத்திரிக்கையோ, பணபலமோ இல்லாததால் பகத்சிங்கால் மக்களிடையே பரவலாக பிரச்சாரம் செய்ய முடியவில்லை.


இந்திய மக்கள் அனைவருக்கும் தங்கள் கொள்கைகளைத் தெரிவிப்பதற்கு ஏதுவாக கைதாகி நீதிமன்றத்தில் இருந்து பிரச்சாரம் செய்ய முடிவு செய்யப்பட்டது. நாட்டு மக்களின் கவனத்தை ஈர்க்க நாடாளுமன்றத்தில் எவரும் இல்லாத வெற்றிடத்தில் குண்டு வீசி பகத்சிங்கும், பதுகேஷ்வர் தத்-தும் கைதாகினர்.


எதிர்பார்த்தபடியே பத்திரிக்கைகள் இவ்வழக்கு பற்றி ஏராளமாக எழுதின. நீதிமன்றத்தில் பகத்சிங் பேசிய பேச்சுக்களால் மக்கள் விழிப்படைந்தனர். சிறையிலும் தங்கள் உரிமைகளை பாதுகாக்க பகத்சிங்கும் இதர தோழர்களும் போராடினர். நாடு முழுவதும் சுதந்திர தாகம் கொண்ட இளைஞர்கள் பகத்சிங்கின் பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்டனர்.


ஒரு சில நாட்களிலேயே பகத்சிங் காந்தியை விட பெரிய தலைவராக உயர்ந்தார். பகத்சிங்கை விடுதலை செய்யக் கோரி நாடெங்கும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இதை கண்ட ஆங்கிலேய ஏகாதிபத்தியம் பயந்து நடுங்கியது. பகத்சிங்கால் ஈர்க்கப்பட்ட இலட்சக்கணக்கான இளைஞர்கள் புரட்சியில் ஈடுபட்டால் இந்தியா விடுதலையாவதை எவராலும் தடுக்க முடியாது என உண்ர்ந்தது. அதை தடுக்க பகத்சிங்கை கொலை செய்ய முடிவு செய்தது.


1931 மார்ச் 23-ஆம் நாள் பகத்சிங், ராஜகுரு மற்றும் சுகதேவை தூக்கிலிட்டு கொன்றது. ஆனால் அவரால் உருவாக்கப்பட்ட இளைஞர் பட்டாளம் தொடர்ந்து போராடியது. ஆயுதப் போராட்டம் வளர்ந்தது. 1947 ஆகஸ்ட் 15இல் நம்மை ஆண்ட வெள்ளயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறினர். இதற்கு காரணமான தோழர் பகத்சிங்கை நாம் ஒரு போதும் மறக்கலாகாது.


நன்றி - புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி - சென்னை


Tamil People Music Festival 2007

"வறுமை தானாகவே மாறும் என்பது
பழைய பொய்.
ஒரு சமூக மாற்றத்தின் மூலமே நிகழும்
என்பதே மெய்."

- மாவீரன் பகத்சிங்


Shaheed Bhagat Singh - Great martyr

Bhagat Singh Internet Archive

Bhagat Singh and the Revolutionary Movement

பருத்தி வீரன் - பொறுக்கித்தனத்தின் இரசனையா யதார்த்தத்தின் ருசி?


பருத்திவீரனை பற்றி வித்தியாசமான படம், கிராமத்து மணம் வீசும் படம் என இரசிகர்கள் மத்தியில் பேசுப்படுகின்ற படம். ஆனால் இந்த படத்தில் ஒரு இரவுடியின் அற்ப வாழ்க்கையை இரசிக்கும்படி கொடுத்திருந்தாலும் அதில் செயற்கைத்தனங்களயும், கிராமத்து மக்களை எப்படி இழிவுப்படுத்துகிறது என எடுத்துரைக்கிறது, புதிய கலாச்சாரம் பத்திரிக்கையில் வெளியான பருத்தி வீரன் விமர்சனம். அவற்றில் இருந்து சில குறிப்புகள்.

வசூலில் வெற்றியடைந்திருக்கும் பருத்தி வீரனை மண்வாசனை கதை, அசலான பாத்திரங்கள், தெற்கத்தியப் பண்பாட்டைப் படம் பிடித்துக் காட்டும் காட்சிகள் என எல்லா அம்சங்களிலும் போற்றும் இரசிகர்கள் திரைப்படத்தின் இறுதியில் வரும் கற்பழிப்புக் காட்சிகள் குறித்து மட்டும் வருத்தப்படுகிறார்கள்.

சென்டிமென்டால் போட்டுத்தாக்கும் இந்த மலிவான உத்தியில் இரசிகர்களின் பிரச்சனையோ வேறு மாதிரி. முத்தழகு கூறுவது போல் அவர்கள் பருத்திவீரனின் முன்வினை அவளைச் சுட்டது என்று கருதவில்லை. மாறாக, ஒரு காதல் ஜோடி சேர முடியாமல் இரக்கமின்றிப் பிரிக்கப்பட்டதே அவர்களின் கவலை.

சித்தப்பா செவ்வாழையுடன் பருத்தி வீரன் செய்யும் குடி, கூத்து, ஆட்டம், பாட்டத்தை அவர்கள் பாவமாக கருதவில்லை. சொல்லப்போனால் பார்வையாளர்கள், குறிப்பாக ஆண்கள் அந்த கேளிக்கைகளில் மனதளவில் கலந்து கொள்கிறார்கள்.

காட்சிக்கு ஒரு நகைச்சுவை என செதுக்கித் தீட்டப்பட்ட திரைக்கதை பொதுவாக கலகலப்பாக செல்கிறது. பருத்திவீரனது வக்கிரங்கள் எவையும் பொது புத்திக்கு அதிர்ச்சி தராததோடு அவற்றை இரசிக்கும் வண்ணம் தரப்பட்டுள்ளது....

ஒவ்வொரு முறையும் புதிது புதிதாகப் பிழைக்க முயலும் டக்ளசை இருவரும் ஏமாற்றுகிறார்கள், பணம் பறிக்கிறார்கள். இதிலும் ஒரு கிராமத்து அப்பாவியை ஏமாற்றுவதாக இரசிகர்கள் உணர்வதில்லை. கவுண்டமமணி பாணியிலான இந்த காமெடி பார்வையாளர்களை சிரிக்க வைப்பதற்கான அரதப் பழசான உத்தி. நிஜ வாழ்வில் இப்படி அரட்டி மிரட்டி ஏமாற்றிப் பிழைக்கும் பேர்வழிகளை மக்கள் வெறுக்கிறார்கள். யதார்த்ததிற்காக போற்றப்படும் இந்தப் படத்தின் இலட்சணம் இது தான்....

இப்படி எல்லா சினிமாத்தனங்களும் செயற்கையான பாத்திரப் படைப்பும் கொண்டு நகைச்சுவையின் உதவியுடன் நேர்த்தியாகப் பின்னப்பட்ட சராசரி மசாலாதான் பருத்திவீரன்…….

இந்த யதார்த்தம் போலியானது. படத்தில் வழக்கு மொழி,உடலசைவு காட்சிகளன்கள், நாட்டுப்புறக் கலைகளில் மண்வாசனை அடித்தாலும், கதையில், உண்மையான கிராமம் இல்லை. உண்மயான கிராமம் இங்கே கேலி செய்யப்படுகிறது. தேவர் சாதியினர் ஆதிக்கம் செய்யும் கிராமத்தில் குறத்து பெண்ணொருத்தி சாராயம் காய்ச்சி ராச்சியம் செய்கிறாள். தொழில் போட்டிக்கு வரும் ஆதிக்கசாதி நபர்களை தன்னந்தனியாய் நின்று கொலை செய்கிறாள். இத்தகைய கிராமத்தை எங்காவது கேள்விப்பட்ட்ருக்கிறீர்களா?......

பருத்திவிரனைப் போன்ற இரவுடிகள், பணக்காரர்கள், பண்ணையார்களுக்கு எடுபிடி சேவகம் செய்து பிழைப்பார்கள். அடிமைகளுக்கு சுயேச்சையான, கலகலப்பான வாழ்வு இருக்க முடியுமா என்ன? பருத்திவீரன் உள்ளூரில் மட்டும் சண்டித்தனம் செய்வதால் ஊர் சுற்றி வம்பலப்பதற்கு நேரம் இருக்கிறது. அவன் விரும்பியபடி சென்னை ஜெயிலுக்கு போகுமளவுக்கு பெரிய ரவுடியாக இருந்தால்....போலீசு போடுமா, எதிரி போடுவானா என அச்சத்தில் வாழ வேண்டியிருக்கும்....

வேலை வெட்டிக்கு போகாமல் பெண்களின் காசில் குடித்து விட்டு ஊர் சுற்றும் கிராமப்புறத்தின் எச்சங்கள் தான் பருத்திவீரன் போன்ற அழுக்குகள். இந்த அழுக்கையே அலங்காரமாய், அழகாய், கலகலப்பாக காட்டுகிறார் இயக்குநர். இதை எவ்விதச் சுரணையுமின்றி இரசிக்கும் இரசணை தான் நமக்கு நெருடலைத் தருகிறது.

இந்த பொறுக்கிவீரன் பொற்க்கிவீரன் தங்களை கேலி செய்வதாக சாதாரண உழைப்பாளி மக்கள் முதல் படிப்பாளி இரசிகர்கள் வரை யாருமே உணர்வது இல்லை.

ஒரு திரைப்படத்தின் நாயகன் விவசாயியாகவோ, தொழிளாலியாகவோ தான் இருக்க வேண்டும் என்பதில்லை. அவன் நிலப்பிரபுவாகவோ, காமவெறி பிடித்த மிருகமாகவோ கூட இருக்கலாம். அவன் வாழ்க்கையை எப்படி பார்க்க பழக்குகிறார் என்பது தான் பிரச்சனை. ஒரு சொறி நாயின் அழகை இரசிக்க கற்று கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

நன்றி - புதிய கலாச்சாரம் மே 2007

Monday, May 21, 2007

அழகி திரைப்படம்- அற்ப மனிதனின் அவலம்
ஆபாச சீரழிவுகளையே செய்திகளாக, படைப்புகளாக, வெளியிட்டு வரும் பத்திரிக்கைகளின் மத்தியில், அனைத்து வகை மக்கள் விரோத கருத்துக்களை அம்பலமாக்கி புரட்சிகர கலாச்சாரத்தை வலியுறுத்துகிறது "புதிய கலாச்சாரம்".

புதிய கலாச்சாரம் பத்திரிக்கையில் இருந்து வெளியிடப்பட்ட "அழகி" படத்தின் விமர்சனம்.