ஜெயந்திரனுக்கு சங்கரராமன் 2004 ஆகஸ்ட் 30ம் தேதி 'இறுதி அறிவிப்பு' என்ற தலைப்பில் கடிதம் அனுப்பினார். கடிதம் அனுப்பிய நான்காம் நாள் செம்டம்பர் 3ம் தேதி சங்கராச்சாரி அனுப்பிய கூலிப்படையால் சங்கரராமன் கொலை செய்யப்பட்டார். சங்கரராமனின் கடிதம் பின்வருமாறு;
சங்கரராமனின் 'இறுதி அறிவிப்பு' கடிதம்:
சன்யாஸ தர்மத்திற்கு இலக்கணமாக வாழ்ந்த மகான் காஞ்சி மடத்து 68வது பீடாதிபதி மகா பெரியவாள் ஈடு இணையற்றவர். அவரளவு இல்லாவிட்டாலும் தசாம்சம்மாவது பின்னவர்கள் இருக்க வேண்டாமா?
தங்களுடையவும் தங்கள் அந்தேவாஸியினுடையவும் (விஜயேந்திரர்) செயல்பாடுகள் சன்யாஸ தர்மத்திற்கு விரோதமாகஉள்ளது. ஆசார ப்ரபவோ தர்மோ பாரம்பரியமிக்க மடத்தின் ஆசார அனுஷ்டானங்களை தாங்கள் ககன மார்க்கத்தில்செல்லும்போதே காற்றில் பறக்க விட்டீர்கள்.
தங்கள் அந்தேவாசியோ சூர்யோதயத்தை பார்த்தது கிடையாது. அர்த்த ராத்திரி வரை ஸ்திரீகளுடன் அந்தரங்க சம்பாஷணை. தாங்கள் இருவருக்கும் ஆசார அனுஷ்டானம் நாஸ்தி, அனாசாரம்- படாடோபம் ஜாஸ்தி. மூலாம்னாய பீடாதிபதிகள் தவறுசெய்யும்போது அதனால் தேசத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது.
- தாங்கள் தலைக்காவிரிக்கு தலைதெறிக்க ஓடினீர்கள். காவிரி தமிழ்நாட்டில் மட்டுமல்ல கர்நாடகத்திலும் வறண்டது.
- ஒரே இந்து சாம்ராஜ்யம் நேபாளத்திற்கு சென்றீர்கள். இராஜ வம்சமே பூண்டற்றுப் போனது.
- எல்லா நதிகளும் மகாமகத்து கும்பகோணம் வருவதாக ஐதீகம். தங்கள் இருவரின் திருப்பாதம் பட்ட விசேஷம் கும்பகோணத்தில் கோர தீ விபத்தில் ஒரு பாவமும் செய்யாத குழந்தைகள் மரணம்.
- கொலைப்பாதகம், குரு துரோகம் புரிந்த சைவ மட இளவரசுகளுக்கு ஆதரவு தந்து அடைக்கலம் கொடுத்தீர்கள். இன்றைக்கு ஒருவர் சிறையில் ஒருவர் நடுத்தெருவில்.
- தங்களுடன் கைலாச யாத்திரை செய்த ராஜகோபால் காரக்ஹத்தில்,
- தற்போது துந்த கிணற்றில் தூர்வாரும் வேலையாக நஷ்டத்தில் இயங்கும் தமிழ்நாடு ஆஸ்பத்திரி ஸ்வீகாரம் செய்துள்ளீர்கள். ஏற்கனவே குழந்தைகள் ஆஸ்பத்திரியில் நல்ல (அவ) பெயர். நிர்வாகிகளுக்குள் கருத்து வேறுபாடு.
- வைஷ்ணவத் தல திருப்பதியில் தலையிட்டு குளறுபடி செய்து அவப் பெயர்.
- சைவத்திலோ யாரும் தங்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை.
- கெளமாரத்தில் பழனியில் நூதன பிரதிஷ்டை செய்த விக்ரஹம் தற்போது கேட்பாரற்று கிடக்கிறது.
- தங்கள் முயற்சியால் கொண்டு வரப்பட்ட மதமாற்றத் தடைச் சட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இதற்கெல்லாம் என்ன காரணம் தங்களிடம் ஆன்ம பலம் அறவே இல்லை. ராவணன், அர்ச்சுனன் போல் தங்களுக்கு காஷாயம் ஓர்வேடம். தங்களின் தவறான செயல்பாடுகள் ஸ்தாபனத்தை பாதிக்கிறது. ஸ்தாபனத்தில் நன்மைக்காக தனி மனிதர்களைப்பலியிடுவதில் தவறில்லை.
சோமசேகர கனபாடிகள் கூறிய குற்றச்சாட்டுகள் உண்மையே. எனவே, இந்த ஸ்தாபனத்தைக் காக்க நான்முடிவெடுத்து விட்டேன்.
இளையாற்றாங்குடி, விஜயவாடா, பம்பாய், திருப்பதி மற்றும் காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் தாங்கள் நடத்திய ஆஸ்ரம தர்மவிரோத செயல்பாடுகள் மற்றும் தங்கள் அந்தேவாஸியின் (இளையவர்) அக்ரம தர்மத்திற்கு விரோதமான செயல்பாடுகள், அவர்நடத்திவரும் மகளிர் விடுதியில் நடைபெற்ற துர்மரணம் போன்ற அசம்பாவிதங்கள், அவர் தம்பி ரகுவும் ஸ்தானீகரின் குடும்பத்தினரும் இணைந்து செய்து வரும் அட்டூழியங்கள் ஆகியவற்றை வெளிக் கொண்டுவந்து தேவைப்பட்டால், நீதிமன்றம் மூலம் தங்களையும் தங்கள் வாரிசுகளையும் தகுதியை இழக்கச் செய்யத் தேவையானநடவடிக்கையை விரைவில் மேற்கொள்வேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
அ.சங்கரராமன்
பின்குறிப்பு:
விஷ வித்தான வாரிசை தாங்கள் தேர்ந்தெடுத்துள்ளீர். அந்த விஷச் செடியை தாங்களே வெட்டினால் எனக்கு தங்கள் மீதுள்ள கோபம் சற்று குறையும்.
தொடர்புடைய பதிவுகள்:
No comments:
Post a Comment