Wednesday, October 22, 2008

மானமில்லா மக்களே தீபாவளி கொண்டாடுகிறார்கள்

இன்றளவும் மானமில்லா மக்களே தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். தீபாவளி என்பது பார்ப்பனர்களின் பண்டிகை, தமிழர், திராவிடர்களின் திருவிழா அல்ல என பல தமிழ் அறிஞர்களும், தலைவர்களும் சொன்னவற்றின் சில குறிப்புகள் பின்வருமாறு:


மறைமலை அடிகள் சொன்னது:
1. 'ஆரியப் பார்ப்பனர்கள் கட்டுவித்த கற்பனைக் கதையே தீபாவளி" - "தமிழர் மதம்" என்ற நூலில்
2. "ஆரியரின் இத்தகைய வெறியாட்டு வேள்விகளை அழித்துவந்த சூரன், இராவணனன் முதலான நிகரற்ற தமிழ் வேந்தர்களே, ஆரியர்களால் அரக்கர் என்று இகழ்ந்து பேசப்படு வராயினர்.' (வேளாளர் நாகரிகம் - பக்கம் 60)


இராமகிருஷ்ண பரமகம்சரின் சீடர் விவேகானந்தர் சொன்னது:
1.தென்னிந்தியாவில் இருந்த மக்களே இராமாயாணத்தில் குரங்குகள் என்றும், அரக்கர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்" (இராமாயணச் சொற்பொழிவுகளும், கட்டுரைகளும் பக்கம் -587-589)


பி.டி.சி சீனிவாசய்யங்கார் சொன்னது:
இராமன் காலத்தில் தென் இந்தியா தஸ்ய+க்கள், இராட்சதர்களுக்குச் சொந்தமாயிருந்தது. இவர்கள் ஆரிய முனிவர்கள் செய்து வந்த யாகத்தை எதிர்த்தார்கள். இருந்தாலும் வட இந்தியாவிலிருந்து வந்த ஆரியர்களைப் போலவே இந்த இராட்சதர்கள் என்பவர்களும் நாகரிகமடைந்திருந்தார்கள்.’ (பி.டி.சி சீனிவாசய்யங்கார் "இந்திய சரித்திரம்’ முதற்பாகம் - பக்கம் - 16,17,19)


முனைவர் தொ.பரமசிவன் "அறியப்படாத தமிழகம்" நூலில்:
1. தீபாவளி, தமிழ் நாட்டின் மரபு வழிப் பொருளாதாரத்தோடும் பருவநிலைகளோடும் தொடர்பில்லாத ஒரு திருவிழாவாகும்.
2. தீபாவளியைக் குறிக்கும் வெடி, அதன் மூலப்பொருளான வெடி மருந்து ஆகியவை தமிழ் நாட்டிற்கு 15ஆம் நூற்றாண்டு வரை அறிமுகமாகவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
3. நரகாசுரன் என்னும் அரக்கன் கிருஷ்ணனால் அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் தீபாவளிக் கதை திராவிடப் பண்பாட்டோடு தொடர்புடையதன்று. மாறாக இன்று பிராமணிய மதத்தின் சார்பாக எழுந்த கதையாகும்
4. இந்த நாள் பிராமணிய மதத்தின் எதிரியான சமண மதத்தின் 24ஆம் தீர்த்தஙரரான வர்த்தமான மகாவீரர் வீடுபேறடைந்த(இறந்த) நாளாகும்.தான் இறந்த நாளை வரிசையாகத் தீபங்களை ஏற்றிக் கொண்டாடுமாறு மகாவீரர் தம் மதத்தவரைக் கேட்டுக் கொண்டார். ஆகவே, பிராமணிய மதத்தின் பழைய எதிரிகளான சமணர்களும் தீபாவளிச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். எனவே நரகாசுரன் அழிந்ததாக பிராமணியத் தீபாவளிக் கதைகள் குறிப்பிடுவது மகாவீரர் இறந்த நாளையே ஆகும்
5. விஜய நகரப் பேரரசான இந்து சாம்ராஜ்யம் தமிழ்நாட்டில் நுழைந்த கி.பி. 15ஆம் நூற்றாண்டு தொடங்கியே தீபாவளி இங்கு ஒரு திருநாளாகக் கொண்டாடப்படுகிறது


பெரியார் சொன்னது:
இக்கொண்டாட்டமானது தமிழ் மக்களுடைய இழிவையும் முட்டாள்தனத்தையும் காட்டுவது மாத்திரமல்ல; தமிழர் (திராவிடர்கள்) ஆரிய இனத்தானுக்கு அடிமை, அவனது தலைமைக்கு அடிமை, மீட்சி பெற விருப்பமில்லாத மானங்கெட்ட ஈனப் பிறவி என்பதைக் காட்டிக் கொள்ள போட்டி போடுகிறார்கள் என்பதையே காட்டுகிறது.

“மானமும் பகுத்தறிவும் உடையவனே மனிதன்; அஃதிலார் மனித உருவமுள்ள மிருகமே ஆவர்’’ என்ற அறிவுரைப்படி மானமில்லா மக்களே இப்போது தீபாவளி கொண்டாடுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

தீபாவளி என்றால் என்ன? (புராணம் கூறுவது)
1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.
2. தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்து கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்.
3. விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.
4. ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.
5. அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது.
6. அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.
7. தேவர்களுக்காக விஷ்ணு நரகாசூரடனுடன் போர் துவங்கினார்.
8. விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விஷ்ணுவின் மனைவி நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றாள்.
9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
10. இந்த மகிழ்ச்சியை (நரகாசுரன் இறந்ததற்காக) நரகாசுரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்.

எவ்வளவு சொன்னாலும் அறிவும் அனுபவமும் இல்லாத சில இளைஞர்கள் (மைனர்கள்) பித்தலாட்டத்தாலும், வஞ்சகம் துரோகம் மோசத்தாலும் வாழ வேண்டிய தீய எண்ணத்தில் தேர்ச்சி பெற்ற பரத்தையரிடம் சிக்கிவிட்டார்களேயானால், எப்படி - யார் - எவ்வளவு அறிவையும் நன்மையையும் போதித்தாலும் அதை காதில் வாங்கக் கூட செவிப்புலனை ஒதுக்காமல் தன் உள்ளம் முழுவதையும் பரத்தையிடமே ஒப்புவித்து, அவளிடம் ஓடவே வழி தேடுவார்களோ அதேபோல் நடந்து கொள்கிறார்கள்!


தீவாளியா? - பாரதிதாசன் பாடல்:

நரகனைக் கொன்றநாள் நல்விழா நாளா?
நரகன் இறந்ததால் நன்மை யாருக்கு?
நரகன் என்பவன் நல்லனா? தீயனா?
அசுரன்என் றவனை அறைகின் றாரே?
இராக்கதன் என்றும் இயம்புகின் றாரே?
இப்பெய ரெல்லாம் யாரைக் குறிப்பது?
இன்றும் தமிழரை இராக்கதர் எனச்சிலர்
பன்னு கின்றனர் என்பது பொய்யா?
இவைக ளைநாம் எண்ண வேண்டும்.
எண்ணா தெதையும் நண்ணுவ தென்பது
படித்தவர் செயலும் பண்பும் ஆகுமா?
வழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல்
கழுத்துப் போயினும் கைக்கொள வேண்டாம்.
ஆயிரம் கோடி ஆண்டு செல்லினும்
தூயது தூயதாம் துரும்பிரும் பாகாது!
"உனக்கெது தெரியும், உள்ளநா ளெல்லாம்
நினத்து நடத்திய நிகழ்ச்சியை விடுவதா?"
என்று கேட்பவனை "ஏனடா குழந்தாய்!
உனக்கெது தெரியும் உரைப்பாய்" என்று
கேட்கும்நாள், மடமை கிழிக்கும்நாள், அறிவை
ஊட்டும்நாள், மானம் உணருநாள் இந்நாள்.
தீவா வளியும் மானத் துக்குத்
தீ-வாளி ஆயின் சீஎன்று விடுவிரே!


நன்றி - கந்தப்பு, பெரியார், பாரதிதாசன், தொ.பரமசிவன், மறைமலை அடிகள், பி.டி.சி சீனிவாசய்யங்கார், விவேகானந்தர்


Related Links:

Thursday, October 9, 2008

ஈழத் தமிழர் கொலைக்கு துணை நிற்கும் இந்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலையில் 8- 10- 2008 அன்று காலை பத்து மணியளவில் மகஇக, புமாஇமு, புஜதொமு, பெவிமு அமைப்பினர், ஈழத் தமிழர் கொலைக்கு துணை நிற்கும் இந்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். சாலையில் அமர்ந்து முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் செய்த 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் முழக்கங்கள்:

  • ஈழத் தமிழர் கொலைக்கு துணை நிற்கும் இந்திய அரசை முறியடிப்போம்!
  • ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு குரல் கொடுப்போம்!
  • தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதைத் தடுக்க கச்சத்தீவை மீட்டெடுப்போம்!
  • பதவி சுகத்திற்காக பச்சோந்தி வேலை செய்யும் திமுக அரசை அம்பலப்படுத்துவோம்!
  • இந்திய ஆளும் வர்க்கங்களின் தெற்காசிய மேலாதிக்கத்திற்காக டாட்டா, அம்பானி போன்ற தரகு முதலாளிகள் இலங்கையில் கொள்ளை லாபம் ஈட்டுவதற்காக, சிங்கள இனவெறி இராணுவத்திற்கு ஆயுதமும், பயிற்சியும் கொடுத்து உதவும் கொலைகார இந்திய அரசை எதிர்த்து போராடுவோம்!


Related Links: