"ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் உண்மை ஆகிவிடும்" என்பது மார்க்கட்டிங் விதிகளில் ஒன்று. அதே போன்று தான் அரசும், ஊடகத் துறையை பயன்படுத்தி பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாணவர்களுக்கு எதிராக தொலைக்காட்சி, பத்திரிகை மூலமாக விசம பிரச்சாரம் செய்து வருகிறது. பொது மக்களும் அதையே உண்மை என நம்ப வைக்கப்பட்டுள்ளனர்.
பச்சையப்பன் கல்லூரி தாக்கப்பட்ட 23ஆம் தேதியில் இருந்து இரண்டு வாரங்கள் பின்னோக்கி சென்று பார்த்தால் உண்மை விளங்கும். பச்சைப்பன் கல்லூரியை கையகப்படுத்தி மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க அரசு முடிவு செய்தது. இதை எதிர்த்து பச்சையப்பன் கல்லூரி ஆசிரியர்கள் உண்ணாவிரதமிருந்தனர். பச்சையப்பன் கல்லூரியை கையகப்படுத்தும் திட்டத்தை கைவிடும் வரை போராட்டம் தொடரும் என பேராசிரியர்கள் அறிவித்தனர். பேராசிரியர்கள் போராட்டத்திற்கு மாணவர்களும், துணை நிற்பதை பார்த்து, அதனை ஒடுக்குவதற்கு சதி திட்டம் தீட்டியது. அதன் ஒரு அங்கமாக பஸ்டே பிரச்சனையை தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் ஊதி பெருக்கியது. பஸ்டே நடந்ததை சாக்காக வைத்து, மாணவர்களையும், பேராசிரியர்களையும் கல்லூரி வளாகத்துக்குள் நுழைந்து அடித்து நொறுக்கியது போலிசு.
ஒரு கல்லூரிக்குள் முதல்வரின் அனுமதி இன்றி நுழைந்து வெறியாட்டம் போட்ட போலீசின் நடவடிக்கை பலரின் பார்வையின் படி சரியென்றாகிறது. ஊடகங்கள் மற்றும் போலீசு என்றைக்காவது உண்மையைச் சொல்லி இருக்கிறதா? லஞ்சம் வாங்குவதையும் மக்களை கொடுமைப்படுத்துவதையும் மட்டுமே வேலையாகக் கொண்ட காவல்துறை மக்கட் நலனுக்காகத்தான் பச்சையப்பன் கல்லூரிக்குள் புகுந்து மாணவர்களை தாக்கியது என்பதில் இம்மியளவாவது உண்மையிருக்குமா? சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
மெட்ரோ ரயில் திட்டத்திற்காக பச்சையப்பன் கல்லூரியை கையகப்படுத்துவதை எதிர்த்து பேராசிரியர்கள் உண்ணாவிரதம் இருந்ததைப் பற்றி அறிய பிப்-9 தேதி தினகரன் செய்தியை பாருங்கள். உண்மை நிலவரம் இப்படி இருக்கும் போது பச்சையப்பன் கல்லூரியை காக்கும் போராட்டத்திற்கு ஆதரவு கரமும், கருத்தும் தருவதே சரியானது.
பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் !
போராடும் மாணவர்களுக்கு தோள் கொடுப்போம்!
கருணாநிதி போலீசின் அராஜகத்தை முறியடிப்போம்!!