Tuesday, January 27, 2009

முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டு அனுபவம் - சில குறிப்புகள்

முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு பற்றி ஒரு நேர்மையான விமர்சனமாக, "முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு: ஒரு பார்வை" என்ற தலைப்பில் தனது மாநாட்டு அனுபவத்தை சூன்யம் வலைப்பதிவிட்டுள்ளார். அவற்றுள் இருந்து சில குறிப்புகளை மறு பதிவிடுகிறேன்.


...........
முதலில் எனது வக்கிர புத்தியை செருப்பால் அடிக்க வேண்டும். ஜனவரி 25ம் தேதி புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி நடத்தும் ‘முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு‘க்கு சென்று வரலாம் என புறப்பட்டதில் எந்தவிதமான பிழையும் இல்லை. நிறைந்த அமாவாசை. அதுவும் தை அமாவாசை. எனவே மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ ஆகியோருக்கு எள்ளுத்தண்ணி ஊற்றி தர்ப்பணம் செய்துவிட்டு மாநாட்டை ஆரம்பிப்பார்கள் போலிருக்கிறது என நக்கலுடன் சென்றேன் பாருங்கள்… அதற்கு சரியான செருப்படியை தோழர்கள் கொடுத்தார்கள்.

...........
தோழர் சந்திப்பு வந்திருந்தால் வயிறு எரிந்திருப்பார். இதுவரை தனது பதிவுகளில் மகஇக குறித்து, தான், எழுதிய விஷயங்கள் எந்தளவுக்கு புரட்டல் நிரம்பியது என்பதை நினைத்து குற்ற உணர்வால் குறுகியிருப்பார்.

...........
இந்தளவுக்கு கூட்டம் வரும் என எதிர்பார்க்காததால் பிரமிப்பு ஏற்பட்டது உண்மை. மாநாட்டு திடலே நிரம்பி வழிந்தது என்றால் அது மிகையில்லை. தமிழகத்தின் மூலை, முடுக்கிலிருந்தெல்லாம் தோழர்கள் கூட்டம் கூட்டமாக வந்திருந்தார்கள்.

...........
பெரும்பாலானவர்கள் குடும்பத்துடன், மனைவி குழந்தைகளுடன் வந்திருந்தார்கள். ஒருவரது முகத்தில் கூட சோர்வோ, கடனே என மாநாட்டுக்கு வந்திருக்கும் பாவனைகளோ தெரியவில்லை. அனைவரது கண்களிலும் உறுதி. முக்கியமாக தோழர்களின் மனைவிமார்களை சொல்ல வேண்டும். கணவருக்காக வந்தது போல் தெரியவில்லை. விருப்பத்துடன், மாநாட்டின் தன்மையை உணர்ந்து, நம் குடும்ப விழா என்ற எண்ணத்துடன் கலந்து கொண்டவர்களை போலவே தெரிந்தார்கள். ஒருவரது கால் விரல்களிலும் மெட்டியில்லை. கழுத்தில் நகையில்லை. வீட்டிலிருந்தே தோழர்கள் தங்கள் அமைப்பை கட்டுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளவும், உணரவும் இந்த மாநாடு உதவியது.

...........
செங்கொடிக்கு வணக்கம் செலுத்தியவர்கள் அமைப்பு சார்ந்த தோழர்கள் மட்டுமல்ல. அவர்கள் குடும்பமும்தான். அதுவும் 4, 5, வயதுக்கு உட்பட்ட குழந்தைகள்கூட கை விரல்களை மடக்கி வணக்கம் செலுத்தியதை குறிப்பிட்டேயாக வேண்டும்.

...........
மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் 80% பேர் 20 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள். இதே வயதுள்ள பெண் தோழர்களும் கலந்து கொண்டார்கள். ஆனால், யாருமே யாரிடத்திலுமே கேலி, கிண்டல், ஈவ் டீசிங் மாதிரியான நடவடிக்கைகளில் இறங்கவில்லை.

...........
குடித்துவிட்டு யாரும் மாநாட்டு பந்தலுக்கு வரவில்லை. (முக்கியமாக பியர்). சிகரெட் பிடிப்பவர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருந்தது. மாநாட்டு திடலில் யாரும் குப்பை போடவில்லை. அதற்கென அமைக்கப்பட்ட தொட்டியிலேயே பயன்படுத்திய பொருட்களை போட்டார்கள்.

...........
இவர்கள் அமைப்பை சாராத, இவர்கள் மீது கடுமையான விமர்சனங்களை வைக்கும் மாற்று இயக்க தோழர்களும் தங்கள் வெளியீடுகளை விற்றுக் கொண்டிருந்தார்கள். எந்த தோழர்களும் அவர்களை தடுக்கவும் இல்லை. வெளியேற்றவும் இல்லை. சொல்லப் போனால் உணவு, தேனீர், குடிநீர் போன்றவற்றை அவர்களுடன் இணைந்தே சாப்பிட்டார்கள்.‘

...........
புதிய ஜனநாயகம்‘ இதழில் இதுவரை ஈழம் தொடர்பாக வெளிவந்த கட்டுரைகள் அனைத்தையும் ஜெராக்ஸ் எடுத்து, ஸ்பைரல் பைண்டிங் செய்து விற்றார்கள். அதேபோல்தான் ‘தேசியம்‘ தொடர்பாக வந்த கட்டுரைகளும். இதில் குறிப்பிட வேண்டிய விஷயம், இதே திடலில்தான் ‘தனித்தமிழ்‘ ஆதரவு தோழர்களும் தங்கள் நூல்களை விற்றார்கள் என்பதுதான். ஜனநாயகம்!

...........
மகஇக பொது செயலாளர் தோழர் மருதையன் சிற்றப்புரை ஆற்றினார். வழக்கம் போல் அவரது உரை அழுத்தமாக இருந்தது. குறிப்பிட்ட நேரத்துக்கு பிறகு யார் பேசினாலும் துண்டு சீட்டைக் கொடுத்து பேச்சை முடிக்க சொன்னார்கள். இந்த விதியிலிருந்து தோழர் மருதையனும் தப்பவில்லை.

...........
சங்கம் அமைக்க தாங்கள் பட்ட சிரமங்களை, அனுபவங்களை பல தோழர்கள் மாநாட்டில் பகிர்ந்து கொண்டார்கள். குறிப்பாக ஒரிஸாவிலிருந்து பிழைப்பைத் தேடி தமிழகத்துக்கு வந்த தொழிலாளர்கள் தாங்கள் அனுபவித்த, அனுபவிக்கும் துயரங்களையும், புஜதொமு அமைத்த பின் தாங்கள் எப்படி தன்மானத்துடன் வாழ்கிறோம் என்பதையும் விளக்கினார்கள்.

...........
மாநாட்டு பந்தலுக்கு வெளியே காவல்துறையினர், ‘எதையோ‘ எதிர்பார்த்து பாதுகாப்புக்காக நின்றார்கள். ஆனால், எதுவும் நடக்கவில்லை. ஒரு பதிவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருகிறீர்களா என்று கேட்டேன். ‘ஐயோ, வந்தா போலீஸ் பிடிச்சுக்குமே‘ என்றார். எப்படியெல்லாம் பயம் விதைக்கப்பட்டிருக்கிறது

...........
பொதுவாக மகஇக அமைப்பினர் மீது ஒரு குற்றச்சாட்டு உண்டு. கேள்வி கேட்பவர்களை இவர்களுக்கு பிடிக்காது. க்ளீன் ஸ்லேட்டாக இருப்பவர்கள்தான், இவர்களுக்கு தேவை… என மாற்று அமைப்பினர் அவ்வப்போது இவர்கள் மீது விமர்சனம் வைப்பார்கள். அது எந்தளவுக்கு புரட்டு என்பது இந்த மாநாட்டில் தெரிந்தது.

...........
பின்குறிப்பு: பதிவை எழுதி முடித்ததும் வழக்கம்போல் படித்துப் பார்த்தேன். மகஇக வுக்கு ஜால்ரா தட்டுவது போல் தெரிந்தது. பதிவை வாசிக்கும் உங்களுக்கும் அப்படியே தோன்றினால். நல்லது. அதுகுறித்து எனக்கு வெட்கமேதும் இல்லை.


முழு கட்டுரைக்கு இதை கிளிக் செய்யவும்.
முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு: ஒரு பார்வை


சூன்யம் தோழரே,
மாநாட்டு அனுபவத்தை நேர்மையாக பதிந்து உள்ளீர்கள். புரட்சிகர வாழ்த்துக்கள்.

No comments: