Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Friday, October 30, 2015

தோழர் கோவன் பாடல்கள் வைரலாக பரவுகிறது - தி இந்து

தோழர் கோவன் பாடல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்து பத்திரிக்கையும் இதையே பதிவு செய்துள்ளது. பல ஆங்கிலம் மற்றும் தமிழ் ஊடகங்களும் தோழர் கோவன் கைது செய்தியை வெளியிட்டுள்ளன. பல்வேறு பத்திரிக்கைகளின் வாசகர்களும் தோழர் கோவன் கைதை கண்டித்துள்ளனர். "மூடு டாஸ்மாக்கை மூடு" மற்றும் "ஊத்திக் கொடுத்த உத்தமி" பாடல்கள்  காட்டுத்தீயைப் போல சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.


தோழர் கோவனின் பாடல் காணொளியை யூ-டுயூப் (Vinavu Thalam) தளத்தில் காணுங்கள், அந்த பாடல்களின் கருத்தை சமூகத்தில் பரப்புங்கள்.

ஊத்திக் கொடுத்த உத்தமி

மூடு டாஸ்மாக்கை மூடு



பாடு அஞ்சாதே பாடு 

கோவன் செய்த குற்றத்தை நீங்களும் செய்யுங்கள் !

மூடு டாஸ்மாக்கை! மக்கள் அதிகாரம் டீஸர்

தொடர்புடைய பதிவுகள்:

Sunday, June 8, 2014

மாட்டுக்கறி 'புனிதம்'

மாட்டுக்கறி 'புனிதமானது'. ஆம் மாட்டுக்கறி 'புனிதமானது' தான். உலகில் ஏகப்பட்ட கறிகள் இருக்க அதெப்படி மாட்டுக்கறி மட்டும் புனிதமானது? என கேள்வி எழலாம். மாடு புனிதம் என்பதை பார்ப்பனர்கள் சொல்ல கேட்டு இருப்பீர்கள். ஆனால் மாட்டுக்கறி மட்டும் எப்படி புனிதமாகும்?

மாட்டுக்கறி புனிதம் பற்றி பார்க்கும் முன் சில புள்ளிவிவரங்களை பார்ப்போம். 2012 ஆம் ஆண்டில் இந்தியாவில் 36.4 இலட்சம் டன் மாட்டிறைச்சி உற்பத்தி ஆனது. அவற்றுள் 19.6 இலட்சம் டன் மாட்டிறைச்சி உள் நாட்டில் சாப்பிட்டுள்ளோம். மீதமுள்ள 16.8 இலட்சம் டன் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்பட்டது. உலகிலே மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முதலிடத்தில் இந்தியா உள்ளது. மாட்டிறைச்சி உற்பத்தியில் ஐந்தாம் இடத்திலும் மாட்டிறைச்சி சாப்பிடுவதில் ஏழாம் இடத்திலும் இருக்கிறோம். இந்த புள்ளிவிவரங்கள் சொல்லும் சேதி என்ன? மாட்டிறைச்சி நம் நாட்டில் பரவலாக சாப்பிடப்படுகிறது. மாட்டிறைச்சியினால் நாட்டிற்கு அன்னிய செலாவணி கிடைக்கிறது.

மாடு என்றால் செல்வம் என பள்ளி குழந்தைகளுக்கும் தெரியும். யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள். அந்த சொலவடை மாட்டிற்கும் பொருந்தும். ரஜினி நடித்த அண்ணாமலை படத்தில், 'பசு இருந்தாலும் பாலாகும் செத்தாலும் தோலாகும்' என்ற பாட்டு இருக்கும். பால், தோல் தவிர மாட்டினால் பல நன்மைகள் உள்ளன. பாலில் இருந்து தயிர், வெண்ணை, நெய் மற்றும் இனிப்புகள் என பல உணவு பொருட்கள் கிடைக்கிறது. மாட்டு கொழுப்பு, எழும்புகளில் இருந்து மருந்து மற்றும் தொழிற்சாலைகளுக்கு தேவைப்படும் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. இதைத் தவிர மாட்டின் தோலினால் செருப்பு, ஷூ, பெல்ட், பை, கையுறை, குளிர் தாங்கும் கோட்டுகள் என பலவகை பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. இவை போக மனிதனுக்கு உணவாகவும் பயன்படுகிறது.

மாட்டு இறைச்சி தொன்று தொட்டு நம் நாட்டில் பாரம்பரியமாக சாப்பிட்டு வந்திருக்கிறோம். பார்ப்பனர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. அவர்களும் மாட்டு இறைச்சி சாப்பிடுவார்கள். வேதகாலத்தில் மாடுகளை மந்தை மந்தையாக யாகத்தில் பலி கொடுத்து பின்னர் சாப்பிடுவர். விருந்தினருக்கு சிறப்பு உணவாக மாட்டிறைச்சி அளிப்பார்கள். இப்படி கால காலமாக மாட்டு இறைச்சி சாப்பிட்டு வந்துள்ளோம். ஆனால் புத்த மதம் மற்றும் சமண மதம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்க முடியாமல் சைவமாக மாறினார்கள் பார்ப்பனர்கள். இவர்கள் பசுத் தோல் போர்த்திய புலிகளல்ல அல்ல நரிகள்.

மாடு புனிதம் என சொல்லும் அன்பர்கள் யாரும் மேல் சொன்ன பொருட்கள் எதையும் பயன்படுத்தாதவர்கள் கிடையாது. புராண புரட்டுக்களை தவிர வேறு எந்த உருப்படியான காரணத்தையும் சொல்வதில்லை மாட்டுக்கறி எதிர்ப்பாளர்கள். மாடு புனிதம் என்பது பார்ப்பனர்கள் கூற்று. வரலாற்று நிபுணர் மற்றும் எழுத்தாளர் டி.என்.ஜா தனது 'புனிதப்பசு எனும் கட்டுக்கதை' (The myth of the holy cow) புத்தகத்தில் மாடு புனிதம் என்பதை விரிவான வரலாற்று ஆதாரங்களுடன் மறுத்துள்ளார். பிரண்ட்லைன் இதழில் அவரது பேட்டியை படித்து பாருங்கள்.

மாட்டுக்கறி திண்ணும் பிரித்தாணியர்களுக்கு முதன் முதலில் சேவகம் செய்தவர்கள் பார்ப்பனர்கள் தான். தொண்ணூறுகளில்  முதன் முதலில் மாட்டுக்கறி திண்ணும் அமெரிக்கர்களுக்கு பெருமளவில் சேவகம் செய்ய கிளம்பியவர்களும் பார்ப்பனர்கள் தான். ஆனால் உள்ளூரில் மட்டும் மாடு புனிதம், மாட்டுக்கறி சாப்பிடக் கூடாது என பிரச்சாரம் செய்கிறார்கள். உள்ளூரில் மாட்டுக்கறி சாப்பிடுபவர்களை வெறுக்கும் பார்ப்பனர்களால் மாட்டுக்கறி டாலர்களை புறந்தள்ள முடியவில்லை. அவர்களது கூற்றை ஏற்கும் முன் யோசித்து பாருங்கள்.

மாட்டுக்கறி உணவு எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை என் சொந்த அனுபவம் மூலம் உணந்திருக்கிறேன். உடல் உழைப்பில்லாத காரணத்தால் தசைகள் உறுதியாக இருக்காது. எப்பொழுதாவது சில மாதங்கள் உடற்பயிற்சி செய்தால் தான் வலு பெறும். ஆனால் உடற்பயிற்சி செய்யாத போதும் சில வாரங்கள் மாட்டுக்கறி சாப்பிட்டாலே தசைகள் உறுதியாக இருப்பதை உணரந்திருக்கிறேன். இந்த இரகசியம் ஜிம் பாய்ஸ்களுக்கு நன்றாகவே தெரியும். புதிதாக உடற்பயிற்சி செய்யும் இளைஞர்களும் இதனை குறித்து கொள்ள வேண்டும். பொன்னாங்கன்னி கீரையை பதினெட்டு தினங்கள் சாப்பிட்டால் உடம்பு இரும்பாகும் என்பார்கள். கீரையில் இரும்பு சத்தின் சிறப்பினை எடுத்து கூற அப்படி சொல்வார்கள். மாட்டுக்கறி பதினெட்டு தினங்கள் சாப்பிட்டால் உடம்பு இரும்பாகும் என்பது புதுமொழி.

இனி மாட்டிறைச்சியின் மேன்மையை பற்றி பார்க்கலாம்.

மாட்டிறைச்சி அதிகம் விரும்பி சாப்பிடுவது ஐடி துறையினருக்கு வேலை வழங்கும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் தான். அவர்கள் அனைத்து இறைச்சிகளையும் விட மாட்டிறைச்சியை விரும்புவது ஏன்? ருசி மட்டும் தான் காரணமா அல்லது வேறு காரணங்கள் இருக்குமா?

இறைச்சி உணவின் சிறப்பு அனைவரும் அறிந்ததே. அதாவது புரத சத்து மிகுந்திருக்கும். ஆனால் எந்தெந்த இறைச்சி உணவில் எந்தெந்த சத்துக்கள் உள்ளன என்பது நமக்கு தெரியாது. மாட்டுக்கறியில் என்னென்ன சத்துக்கள் உள்ளன அவை உடம்புக்கும், மனதுக்கும் எப்படி பயனளிக்கின்றன என்பதை காண்போம்.

மாட்டுக்கறியின் மகத்துவங்கள்;
  1. மாட்டுக்கறியில் உள்ள சில வகை கொழுப்புகளுக்கு கேன்சர் எதிர்ப்பு சக்தி இருக்கிறது. மாடு மற்றும் ஆட்டுக் கொழுப்பில் லினோலிக், பால்மிடோலிக் ஆசிடுகள் உள்ளன. கேன்சர் எதிர்ப்பு மிகுந்த இந்த ஆசிடுகள் வைரஸ் உள்ளிட்ட கிருமி எதிர்ப்பு சக்திகளையும் உள்ளடக்கியுள்ளது.
  2. மாட்டுக்கறியில் அனைத்து விதமான சத்துக்களும் அடர்த்தியாக நிறைந்துள்ளன. அதிக அளவு சத்துக்களை கொடுத்தாலும் குறைந்த அளவு கேலரிகள் தான் அளிக்கிறது. 85 கிராம் மாட்டுக்கறியில் 179 கேலரிகள் தான் உள்ளன. ஆனால் 85 கிராம் மாட்டுக்கறியில் உடலுக்கு தேவையான பத்து சதவித்திற்கு மேலான உயிர்சத்துகள் நிரம்பியுள்ளன. உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு தேவையானது மாட்டுக்கறி தான்.
  3. புரதம், ஸின்க், மெக்னீசியம், பாஸ்ப்பரஸ், காப்பர், கோபால்ட், க்ரோமியம், நிக்கல், செலனியம், இரும்பு, வைட்டமின் டி, வைட்டமின் இ, மற்றும் பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் மாட்டிறைச்சியில் மிகுந்துள்ளது. நமது தசைகள், பற்கள், எலும்புகள் வலுவாகின்றன. உடலின் செல்களுக்கு பிராண வாயுவையும், சக்தியையும் அளிக்கின்றன. பி வைட்டமின்களான தையமின், ரைபோப்ஃலேவின், பேன்டோனிக் ஆசிடு, ஃபோலேட், நியாசின் மற்றும் வைட்டமின் பி6 ஆகிய சத்துக்களும் சிவப்பு இறைச்சிகளில் மிகுந்துள்ளது. வளரும் சிறுவர், சிறுமியர்களுக்கு ஏற்ற உணவு மாட்டிறைச்சி.
  4. கொழுப்பற்ற மாட்டுக்கறியை சாப்பிட்டு வந்தால் இதய கோளாறுகள் நீங்கும், இதயம் வலிமை பெறும். ஆங்கிலத்தில் இதனை லீன் பீப் (Lean Beef) என்பார்கள். இதனை 2012இல் அமெரிக்க ஜர்னல் சத்துணவு ஆய்வு மையத்தின் (American Journal Clinical Nutrition) ஆய்வறிக்கையில் ஆதாரங்களுடன் நிறுவியுள்ளனர். கொழுப்பற்ற மாட்டுக்கறியை தினமும் சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தும். மாட்டுக்கறியில் உள்ள ஸ்டீரிக் ஆசிடு நல்ல கொலஸ்ட்ராலை (HDL) அதிகரிக்கிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. பாதிக்கும் மேற்பட்ட மாட்டுக்கொழுப்புகளில் இதயத்திற்கு தேவையான ஓலிக் ஆசிடுகள் நிரம்பியுள்ளன. இதயத்திற்கு வலு சேர்க்கும் சத்துக்கள் மாட்டுக்கறியில் கிடைப்பது போல வேறெந்த உணவிலும் இல்லை. உங்களால் முட்டை அல்லது மீன்களில் இருக்கும் கொழுப்பை அகற்ற முடியாது. ஆனால் மாட்டிறைச்சியில் எளிதாக கொழுப்பை அறுத்து நீக்கலாம். இதை தான் லீன் பீப் (Lean Beef) என்பார்கள். (LDL என்பது கெட்ட கொலஸ்ட்ரால். இரத்த ஓட்டத்தை நாளடைவில் தடைபடச் செய்கிறது. HDL என்பது நல்ல கொலஸ்ட்ரால் இரத்தத்தில் படிகங்கள் உருவாவதைத் தடுக்கிறது. இதனுடைய அளவு ரத்தத்தில் கூடுவது மிகவும் நன்மையானதாக கருதப்படுகிறது.)
  5. சிவப்பு இறைச்சிகளில் மட்டும் கிடைக்கும் கார்டினைன் என்ற சத்து இதயத்தினை சீராக இயங்க வைக்கிறது. இதய நோய் பீடித்த இந்தியர்களுக்கு ஏற்ற உணவு பீஃப்.
  6. மனித இனம் மாட்டுக்கறியையும் உள்ளடக்கிய சிவப்பு இறைச்சிகளை உண்ணாமல் இருந்திருந்தால் மனிதனின் மூளை இப்போதிருக்கும் அளவில் கால் பங்கு தான் இருந்திருக்கும் என அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. பரிணாம வளர்ச்சியில் மனித இனத்தின் மூளைக்கு கிடைத்த புத்தி கூர்மைக்கு சிவப்பு இறைச்சிகளே பெரும் பங்காற்றியுள்ளன.
  7. உலகில் நீண்ட ஆயுள் வாழும் பகுதிகளை பார்த்தால் இறைச்சி உணவே முதன்மையாக இருப்பது தெரியும்.
  8. மாடு மற்றும் ஆட்டில் கிடைக்கும் புரத சத்தினால் தசைகள் வலுவாவது மட்டுமல்ல நமக்கு ஹார்மோன்களும் ஆரோக்கியமாக சுரக்கிறது.
  9. தானியங்களில் கிடைக்கும் ஸின்க், மெக்னீசியம், இரும்பு சத்துக்களை விட சிவப்பு இறைச்சிகளில் கிடைக்கும் சத்துக்களை நமது உடல் எளிதாக முழுமையாக உறிஞ்சி கொள்கிறது. வசதியற்றவர்களுக்கு ஏற்ற உணவு மாட்டிறைச்சி. குறைந்த அளவு சாப்பிட்டு வந்தாலும் சத்து குறைவினை குறைக்கலாம். குழந்தை சத்து குறைவில் முன்னிலையில் இருக்கும் நம் நாட்டிற்கு அவசியமானது மாட்டிறைச்சி.
  10. ஆரோக்கியமான நரம்பு மண்டலத்திற்கும், இரத்தத்திற்கும் வைட்டமின் பி12 அவசியம். வைட்டமின் பி12 அசைவ உணவில் மட்டுமே உள்ளது. அதிலும் மாட்டுக்கறியில் வைட்டமின் பி12 37% நிரம்பியுள்ளது. மேலும் மனநோய்களை தவிர்க்கவும், கிழட்டுத் தன்மை மற்றும் மலட்டுத் தன்மையை குறைப்பதிற்கும் வைட்டமின் பி12 அவசியம். வைட்டமின் பி12 சிவப்பு இறைச்சிகளில் நிரம்பியுள்ளது. நவீன உழைப்பு சுரண்டலில் அழுத்தம் நிறைந்த பணி சூழலில் வேலை செய்யும் கார்ப்பரேட் தொழிலாளர்களுக்கு அவசியமானது பீஃப்.
  11. சிவப்பு இறைச்சிகளில் வைட்டமின் டி மிகுந்துள்ளது. சூரிய ஒளி கிடைக்காத பகுதி மக்களுக்கும் மீன் சாப்பிடாதவர்களுக்கும் மாட்டிறைச்சி வரப்பிரசாதம். பாலில் கிடைக்கும் வைட்டமின் டியை விட மாட்டிறைச்சியில் அதிகம் உள்ளது. மேலும் நமது உடல் உறிஞ்சும் தன்மையுடன் இருக்கிறது. சூரிய ஒளி மிகுந்த நமது நாட்டில் இது பொருந்தாது என்றாலும், சூரிய ஒளியே படாமல் வாழும் மேட்டு குடியினருக்கும், குளீரூட்டப்பட்ட அலுவலகங்களிலே பெரிதும் அடைந்து கிடைக்கும் ஐடி துறையினருக்கும், இரவு பணி புரியும் கால்சென்டர் ஊழியர்களுக்கும் கட்டாயம் பொருந்தும். மேலும் வேலை நிமித்தம் மேலை நாடுகளில் வாழும் பன்னாட்டு ஐடி தொழிலாளிகளுக்கும் பொருந்தும். அவர்கள் உண்ண வேண்டியது மாட்டிறைச்சி.
  12. அமெரிக்க விவசாயத் துறையின் 2002 ஆய்வறிக்கையின்படி, 1.1 கிலோ டுயுனா மீனில் கிடைக்கும் ஸின்க் சத்து 100 கிராம் மாட்டிறைச்சியில் கிடைக்கிறது. 750 கிராம் கோழியின் தோலற்ற நெஞ்சுக் கறியில் கிடைக்கும் வைட்டமின் பி12 100 கிராம் மாட்டிறைச்சியில் கிடைக்கிறது. 300 கிராம் கோழியின் தோலற்ற நெஞ்சுக் கறியில் கிடைக்கும் பி விட்டமினான ரைபோப்ஃலேவின் 100 கிராம் மாட்டிறைச்சியில் கிடைக்கிறது. மூன்று கட்டு ஸ்பினாச் கீரையில் கிடைக்கும் இரும்புச் சத்து 100 கிராம் மாட்டிறைச்சியில் கிடைக்கிறது. மாட்டிறைச்சியில் சத்துக்கள் அடர்த்தியாக உள்ளது. 450 கிராம் டுயுனா மீனில் கிடைக்கும் பி விட்டமினான ரைபோப்ஃலேவின் 100 கிராம் மாட்டிறைச்சியில் கிடைக்கிறது. ஆறரை கட்டு ஸ்பினாச் கீரையில் கிடைக்கும் இரும்புச் சத்து 100 கிராம் மாட்டிறைச்சியில் கிடைக்கிறது. உங்களுக்கு எல்லா சத்துக்களும் கிடைக்க வேண்டுமா? மாட்டுக்கறி சாப்பிடுங்கள்.
  13. தாவரங்களில் கிடைக்கும் இரும்புச் சத்தை விட சிவப்பு இறைச்சிகளில் கிடைக்கும் ஹெம் இரும்புச் சத்தை மனிதனின் உடல் சுளுவாக உறிஞ்சி கொள்கிறது. குறைந்த அளவு சாப்பிட்டாலும் போதும். இரும்பு சத்து குறைவானவர்கள் மாட்டிறைச்சி சாப்பிட வேண்டும். குறிப்பாக குழந்தை பெற்று கொள்ள இருப்பவர்களும், கர்ப்பிணிகளும் எடுத்து கொள்ள வேண்டியது மாட்டிறைச்சி. கர்ப்ப காலத்தில் தான் குழந்தையின் மூளை வளர்ச்சி அடையும் பருவம். குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு இரும்பு சத்து மிகவும் அவசியானது. தாய்மார்களும், இளம் கணவன்மார்களும் இதனை குறித்து கொள்ள வேண்டும்.

யாராவது மாட்டிறைச்சியின் தீங்குகளை சுட்டி காட்டும் கட்டுரைகளையோ அல்லது பழைய ஆய்வறிக்கைகளையோ காட்டினால் நம்ப தேவையில்லை. ஏனெனில், அவை பதப்படுத்தப்பட்ட மாட்டுக்கறி உணவான சாசேஜ், ஹாட் டாக், பர்கர்களை வைத்து செய்த ஆய்வுகள். 'பேக்டு புட்ஸ்' எனப்படும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் அனைத்திலும் உள்ள தீங்குகள் தான் பதப்படுத்தப்பட்ட மாட்டிறைச்சியிலும் உள்ளன. ஏனெனில் பதப்படுத்தும் போது கெடாமல் இருப்பதற்காகவும், சுவைக்காகவும் அதீத உப்பு, சர்க்கரை, காரம், கொழுப்பு மற்றும் வேறு சில வேதி பொருட்களையும் சேர்ப்பார்கள்.  எனவே மாட்டிறைச்சி உடலுக்கு தீங்கானது என்பது தவறான வாதம். வீட்டில் சமைத்து சாப்பிட்டு வந்தால் கோடி நன்மைகள் கிடைக்கும்.

இத்துணை பயன் தரும் மாட்டுக்கறி உணவை சாப்பிடுவது நன்றா? அல்லது மாடு புனிதம் என மாட்டுக்கறி உணவை நிராகரிக்க சொல்லுவதை காரணமில்லாமல் ஏற்பது முறையா? எல்லாம் வல்ல 'இறைவன்' அனைத்து சத்துக்களையும் மாட்டினுள் வைத்து, நமது உடலையும் மாட்டுக்கறியில் உள்ள சத்துக்களை ஏற்குமளவு 'படைத்தாரோ' என்னவோ? காரணம் இல்லாமலா இருக்கும். தொன்று தொட்டு நாம் மாட்டுக்கறியை சாப்பிட்டு வருவதால் மனிதனின் பரிணாம வளர்ச்சிக்கு உதவியது என அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. அதனால் தான் நமது உடலும் மாட்டுக்கறியின் சத்துக்களை சுளுவாக ஏற்று கொள்கிறது.

'அசைவ உணவு உடம்பிற்கு நல்லது மேலும் வலிமையான இந்தியாவிற்கு அசைவ உணவு அவசியம்' என்றார் விவேகானந்தர். அமெரிக்கா சென்ற போது மாட்டுக்கறியை கேட்டு வாங்கி சாப்பிட்டுள்ளார் அசைவப் பிரியரான விவேகானந்தர். அசைவ உணவிலே சிறந்த உணவான மாட்டுக்கறியை சாப்பிடாமல் இருக்கலாமா? என்னை கேட்டால் வலிமையான இந்தியாவிற்கு மாட்டுக்கறி உணவு அவசியம் என்பேன்.

ஆக,
உடல் எடையை குறைக்க,
உடலை வலிமையாக்க,
இதய கோளாறுகள் நீங்க,
இதயம் வலிமை பெற,
நீண்ட ஆயுள் வாழ,
குழந்தை சத்து குறைவினை தவிர்க்க,
மனநோய்களை தவிர்க்க,
கிழட்டுத் தன்மையை குறைக்க,
மலட்டுத் தன்மையை நீக்க,
இளைஞர்கள்,
விளையாட்டு வீரர்கள்,
சிறுவர், சிறுமியர்கள்,
கர்ப்பிணிகள்,
தாய்மார்கள்,
கணவன்மார்கள்,
ஏழைகள்,
நடுத்தர வர்க்கத்தினர்,
உடல் உழைப்பாளிகள்,
கார்ப்பரேட் தொழிலாளர்கள்,
ஐடி துறையினர்,
என அனைவரும்
சாப்பிட வேண்டியது மாட்டிறைச்சி!

மாட்டுக்கறி 'புனிதம்' என இங்கு சொன்னது அதனை பூசிக்க அல்ல புசிப்பதற்காகவே. மாட்டுக்கறி உண்போம், அதன் மகத்துவத்தை பிறருக்கு எடுத்துரைப்போம். பார்ப்பனர்கள் சொல்வதை கண்மூடித்தனமாக நம்பாமல் சிந்திப்போம். மாட்டுக்கறி சாப்பிட்டு நமது கரங்களை வலுப்படுத்துவோம்! பார்ப்பன புரட்டுக்களை எதிர்க்க நமது அறிவை கூர் தீட்டுவோம்!

தொடர்புடைய பதிவுகள்:

Related Links:

Sunday, February 16, 2014

தமிழை வழிபாட்டு மொழியாக்க வேண்டும் - தில்லை மாநாடு (பத்திரிக்கை செய்தி)

தில்லை கோவில் மீட்பு மற்றும் ஆலயத் தீண்டாமை ஒழிப்பு மாநாடு 2014, பிப்ரவரி 16இல் சிதம்பரத்தில் நடந்தது. அதைப் பற்றிய தினமணி பத்திரிக்கை செய்தி.

அனைத்து கோயில்களிலும் தமிழை வழிபாட்டு மொழியாக்க வேண்டும்: தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் தீர்மானம்:

தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் சமஸ்கிருதம் முற்றிலும் தடை செய்யப்பட்டு தமிழ் மட்டுமே வழிபாட்டு மொழியாக்கப்பட வேண்டும் என தமிழகஅரசை வலியுறுத்தி சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆலயத் தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

சிதம்பரம் ஜி.எம்.வாண்டையார் மண்டபத்தில் மனித உரிமை பாதுகாப்பு மையம், விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகள் சார்பில் தில்லைக் கோவில் மீட்பு மற்றும் ஆலயத் தீண்டாமை ஒழிப்பு மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மனித உரிமை பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சி.ராஜூ தலைமை வகித்தார். மாநாட்டில் முன்னாள் அமைச்சர் வி.வி.சுவாமிநாதன் பங்கேற்று வாழ்த்துரையாற்றினார். அவர் பேசியது: தமிழ்நாட்டில் ஆதிகாலத்தில் இருந்தே தமிழில்தான் வழிபாடு இருந்து உள்ளது. பானபட்டருக்கு இறைவன் தமிழில்தான் கடிதம் எழுதியுள்ளார். மாணிக்கவாசகர் காலத்தில் இலங்கை மன்னன் மக்களை அடிமைத்தனமாக வைத்திருந்தான். தில்லைக்கு வந்து அந்த இலங்கை மன்னன் மகளின் ஊமையை திருவாசகம் பாடலை பாடி பேச செய்துள்ளார்.

குமரகுருபரர், அருணகிரி, மாணிக்கவாசகர், அப்பர், சுந்தரர் ஆகியோர் தமிழில்தான் பாடியுள்ளனர்.  கிபி 400-ம் ஆண்டுக்கு முன்பு சிங்கவர்மன் மன்னனால் கோயிலில் பூஜைகள் செய்யவே வரவழைக்கப்பட்டவர்கள் தீட்சிதர்கள் என கல்வெட்டு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னன் கட்டிய கோயில் எப்படி தீட்சிதர்களுக்கு சொந்தமாகும். பல ஆயிரம் கோடிக்கான நகைகள் மற்றும் நிலங்களை யார் பாதுகாப்பது. எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பு மாற்றப்பட வேண்டியதாகும் என வி.வி.சுவாமிநாதன் தெரிவித்தார்.

மாநாட்டில் குமுடிமூலை சிவனடியார் இ.ஆறுமுகசாமி, அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவர் சி.மதியழகன், சைவ சமய அர்ச்சகர் பயிற்சி நிலைய தலைமை ஆசிரியர் மு.சொக்கப்பன், மார்க்சிய பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி மாவட்டச் செயலாளர் வாலாசா வல்லவன், உயர்நீதிமன்ற வழக்குரைஞர் ரா.சகாதேவன், வழக்குரைஞர் வாஞ்சிநாதன், மக்கள் கலை இலக்கியக்கழக மாநில பொதுச்செயலாளர் மருதையன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். வழக்குரைஞர் சி.செந்தில் நன்றி கூறினார்.

தீர்மானங்கள்: 
தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில் வருமானங்களையும், கோயில் பராமரிப்பு பணிக்கு போக மீதிஉள்ள தொகையை, அந்தந்த ஊர்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தும் வகையில் சட்டதிருத்தம் கொண்டு வர வேண்டும், நடராஜர் கோயில் நிர்வாகத்தை அறநிலையத்துறை மேற்கொள்ள தமிழக சட்டப்பேரவையில் தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என தமிழகஅரசை கோருவது, நடராஜர் கோயிலில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நந்தன் நுழைந்த தீண்டாமை சுவரை அகற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்புடைய பதிவுகள்:

Wednesday, February 12, 2014

தமிழர் நலன் கெடும் இடத்தில் கிளர்ச்சி செய் - தில்லை மாநாடு!

தில்லைக்கோயில் இனி தீட்சிதன் சொத்து என சென்ற மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். இந்த அநீதியை எதிர்த்து பொதுமக்களிடம் பரப்புரையை செய்ததை அடுத்து இப்போது தில்லைக்கோவில் மீட்பு மாநாடு பிப்ரவரி 16ஆம் தேதி நடக்க இருக்கிறது. மாநாட்டு விவரங்களை பார்க்கும் முன் தில்லை கோவில் மற்றும் தீட்சிதர்கள் பற்றி சுருக்கமாக பார்போம்.

முன்கதை சுருக்கம்:

தன்னை வழிபடுவதற்காகவே கைலாசத்திலிருந்து சிவபெருமானால் அனுப்பி வைக்கப்பட்டவர்கள் தான் இந்த தீட்சிதர்களாம். அதனால் தில்லைக் கோவிலும் அதன் சொத்துகளான சுமார் 2,700 ஏக்கர் நிலம் மற்றும் பல கோடி மதிப்புள்ள நகைகள் அனைத்தும் தீட்சிதர்களுக்கே சொந்தம் என்கிறார்கள். இப்படி பொய்யும் புரட்டுக்களையும் பரப்பி வருகிறார்கள். ஆயிரமாண்டுகளாக தீட்சிதர்கள் தில்லை கோயிலின் சொத்துக்களை திருடி, சுரண்டி, உண்டு கொழுத்து வருகின்றனர்.. நந்தனாரை இழிவுபடுத்தி வேள்வித் தீ முட்டி கொன்றொழித்தார்கள் தீட்சித பார்ப்பனர்கள்.

தமிழர்களின் வெற்றி - 1:

பதிமூன்று ஆண்டுகளுக்கு முன் நடராசர் கோயிலின் சிற்றம்பல மேடையில் நின்று திருவாசகம் பாடிய சிவனடியார் ஆறுமுகசாமியை அடித்து கையை முறித்து வீசினார்கள் தீட்சிதர்கள். தமிழ்பற்றும், சுயமரியாதையும் மிகுந்த சிவனடியார் ஆறுமுகசாமியின் விடாமுயற்சியாலும் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் தொடர் போராட்டத்தாலும் 2008இல் பக்தர்கள் அனைவரும் திருச்சிற்றம்பல மேடையில் நின்று தேவாரம், திருவாசகம் பாடி இறைவனை வழிபடலாம் என்ற ஆணையைப் பெற்றார்கள். அப்போது தீட்சிதர்கள் நடத்திய காலித்தனங்களை தொலைக்காட்சியில் நீங்களும் பார்த்திருக்கலாம்.

தமிழர்களின் வெற்றி - 2:

தாய்மொழி தமிழை திருச்சிற்றம்பல மேடை ஏற்றியதோடல்லாமல் தொடர்ந்து தீட்சிதப் பார்ப்பனர்களின் ஆயிரமாண்டு ஆதிக்கத்தை வீழ்த்த போராடி வந்தனர் மனித உரிமை பாதுகாப்பு மையத்தினர். இதன் காரணமாக 2009இல்  தீட்சிதர்களிடமிருந்து கோயிலின் நிர்வாகத்தை இந்து அறநிலைய ஆட்சித் துறைக்கு மாற்றும் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்ற வழங்கியது. இப்படி தமிழ் மற்றும் தமிழர் விரோதிகளான தீட்சிதர்களையும், மொழி தீண்டாமையையும் எதிர்த்து, போராடி வெற்றி பெற்றனர் நம் தோழர்கள். இந்த இரு தீர்ப்புகளும் தமிழர்களை தலை நிமிர வைத்தது என்றால் மிகையல்ல.

பார்ப்பனர்களின் சதி வென்றது!

ஆனால் நயவஞ்சக தீட்சிதர்ளும் சும்மா இருக்கவில்லை. உச்ச நீதிமன்றத்தில் ஜெயா அரசின் பாராமுகம் மற்றும் கோழி முட்டை புகழ் சுப்ரமணிய சாமியின் துணை கொண்டு தமிழர்களின் வெற்றியை முறியடித்துள்ளனர் தீட்சிதர்கள். தமிழ்மக்கள் சொத்தான தில்லைக்கோயில் இனி தீட்சிதன் சொத்து என சென்ற மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதன் மூலம் 40 ஏக்கர் பரப்பளவுள்ள தில்லை கோயிலும், சுமார் 2,700 ஏக்கர் நிலமும், பல கோடி மதிப்புள்ள நகைகளும் திருட்டு தீட்சிதர்கள் வசம் சென்று விட்டது. இது நமக்கு இடைக்கால பின்னடைவே.


"கெடல் எங்கே தமிழர் நலன், அங்கெல்லாம் தலையிட்டு கிளர்ச்சி செய்க" என்றார் புரட்சிகவிஞர் பாராதிதாசன். சுயமரியாதை உள்ள ஒவ்வொரு தமிழனும் மொழி தீண்டாமைக்கெதிராக கிளர்ந்தெழ வேண்டும். தன்னால் இயன்றளவில் முன்மயற்சியுடன் வினையாற்ற வேண்டும். இறுதி வெற்றி தமிழர்களுக்கே!

தமிழ் மற்றும் தமிழர்களுக்கு ஊறு விளைவிக்கும் இந்த இழிநிலையை எதிர்த்து தில்லைக்கோவில் மீட்பு மாநாடு நடக்கிறது. அதன் விவரங்கள் கீழே.

கெடல் எங்கே தமிழர் நலன், அங்கெல்லாம் தலையிட்டு கிளர்ச்சி செய்வோம்!

நூற்றாண்டு கால தில்லைக் கோவில்
வழக்கில்...பார்ப்பன தீட்சிதர்களின்
சூழ்ச்சியால் கிடைத்த 'உச்சிகுடுமி' தீர்ப்பை
ஏற்க முடியுமா?

முப்பாட்டன் நந்தனாரையும், பெத்தான்
சாம்பானையும், வள்ளலாரையும் தீர்த்துக்
கட்டிய தீட்சிதர்களை - அந்தணர்கள்
என அழைப்பது சரியானதா?

அரசியல் சட்டத்தின் பொந்துகளில் புகுந்து
மத உரிமை என்ற போர்வையில்
இறைப்பணி என்ற பெயரில் சொத்துக்களை
குவிப்பதை அனுமதிக்கலாமா?

வழக்கொழிந்த சமஸ்கிருதமே தேவ பாசை!
செம்மொழியான தமிழ் நீச பாசை என
மொழித் தீண்டாமையை கக்கும், சிற்றம்பலத்தில்
தமிழ் ஏறுவதையும், தில்லை கோவிலை அரசு
ஏற்பதையும், எதிர்ப்பவர்களை கண்டு
வேடிக்கை பார்க்கலாமா?

ஆலயத் தீண்டாமையை கடைபிடிக்க
ஆகமம், சாத்திரம் என ஏய்க்கும்
ஆரியப் பார்ப்பன கும்பலின்
ஆதிக்க வெறியாட்டத்தை
பெரியார் மண்ணில் அனுமதிக்க முடியுமா?

விடை காணவும், வினை ஆற்றவும் வாருங்கள்...!


உங்களை,
தமிழ் பற்றாளர்களை,
பக்தர்களை
அழைக்கிறது,

தில்லைக் கோவில் மீட்பு ஆலயத் தீண்டாமை ஒழிப்பு மாநாடு!




தொடர்புடைய பதிவுகள்:

Sunday, January 26, 2014

நடுத்தர வர்க்கம் என்ற மாயையும் – விடிவிற்கான பாதையும்!

அமெரிக்காவில் வால்மார்ட் மற்றும் துரித உணவக தொழிலாளர்கள் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த கோரி போராடி வருவதை அறிவீர்கள். பெரிய நிறுவனங்களில் மாத ஊதியம் கிடைக்கும் ஊழியர்களால் தங்களது அன்றாட செலவீனங்களுக்கு செய்வதறியாது தவிக்கிறார்கள். மாதம் 2500 முதல் 3000 டாலர் வீட்டு வாடகை செலுத்த வேண்டிய நகரங்களில், மாதம் $1200 பெறும்  (மணி நேரத்திற்கு $7.25) ஊழியர்களால் என்ன செய்ய முடியும்? யோசிக்கவே மலைப்பாக இருக்கிறதல்லவா? இதன் வலியை மாத சம்பளம் பெறும் பட்ஜெட் பத்மனாபன்களால் நிச்சயம் உணர முடியும். ஆனால் அறிவு ஜீவிகள் அதை ஒத்துக் கொள்வதில்லை.

அமெரிக்காவின் சந்தை பொருளாதாரம் ஏன் தோல்வியடைகிறது? ஒழுங்கான ஊதியம் பெறுவதற்கு தேவையானவை எவை? என்பதை உண்மையான ஆதாரங்கள் மூலம் எட்வர்ட் மெக்கிளெலேண்டு சலோன் பத்திரிக்கையில் எழுதியுள்ளார். அவரது கட்டுரையை தமிழில் பார்ப்போம்.

அமெரிக்காவில் இன்றைய கல்லூரி பட்டதாரிகளை விட கல்லூரி கல்வி பெறாத அன்றைய தொழிலாளர்கள் எவ்வாறு நன்றாக வாழ்ந்தனர் என்பதை பற்றி பார்ப்போம். 1965இல் இராப் ஸ்டான்லி சிகாகோ ‘வகேசனல்’ (தொழில் சார்ந்த)  உயர்நிலை பள்ளியில் தேர்ச்சி பெற்றார். பள்ளி படிப்பை முடித்தவுடன்  அவரது தந்தை ஸ்டான்லியை வீட்டு வாடகை செலுத்த சொன்னார். இல்லாவிட்டால் வீட்டை விட்டு வெளியேற சொன்னார் . வீட்டை விட்டு வெளியேறிய ஸ்டான்லி "இன்டர்லேக் ஸ்டீல்" என்ற உருக்காலைக்கு சென்றார். அவருக்கு இரும்பு உலோக கற்களை (taconite) உலைகளத்தில் அள்ளிப் போடும் வேலை உடனடியாக கிடைத்தது.  இந்த கடினமான உடலுழைப்பு மிகுந்த வேலைக்கு  ஒரு மணி நேரத்திற்கு $2.32 கூலியாக கொடுத்தார்கள். இந்த பணம்  ஒரு அபார்ட்மெண்ட் மற்றும் ஒரு கார்  செலவுக்கு போதுமானது. அமெரிக்க கால்பந்து விளையாடும் உள்ளூர் போனிவிர்ஸ் அணியில் விளையாடுவதே ஸ்டான்லியின் கனவாக இருந்தது. ஸ்டான்லியின் கனவை நிறைவேற்ற அவரது ஊதியம் போதுமானதாக இருந்தது.

இன்றைய அமெரிக்காவில் துரித உணவு தொழிலாளர்கள் கோரி வரும் "$15க்கான போராட்டம்" வலுப்பெற்று வருகிறது. ஆனால் ஸ்டான்லி பெற்ற ஊதியம் இப்போது $ 17.17க்கு சமமானதாக இருக்கும். ஸ்டான்லியின் வேலை கேஎஃப்சிஇல் இறைச்சியை வறுக்கும் வேலையை விட மிகவும் கடினமானது. உருக்காலையின் உலைகள வெப்பம் 2,000 டிகிரி வரை இருக்கும். அது உயிருக்கு ஆபத்தானது. எனினும் சந்தை பொருளாதார விதிகளின்படி இவையெல்லாம் ஒரு பொருட்டேயில்லை. உலோக கற்களை உலைகளத்தில் அள்ளிப் போடுவதற்கு திறனுள்ள இரண்டு கைகள் இருந்தாலே போதும். ஸ்டான்லியின் வேலைக்கு துரித உணவக வேலைக்கு தேவைப்படும் திறமைகள் தேவையில்லை. டஜன் கணக்கான உணவுகளை சமைப்பது அல்லது கடையில் காத்து கொண்டிருக்கும் பல வாடிக்கையாளர்களின் ஆர்டர்களை சமாளிப்பது போன்ற திறமைகள் தேவையில்லை. சரளமான ஆங்கிலம் பேச தேவை இல்லை. எஃகு உருக்காலை தொழிலின் ஆரம்ப நாட்களில், பெரும்பாலும் போலந்து அல்லது பொகீமியாவிலும் இருந்து படகு மூலம் குடியேறியவர்களுக்கு வேலை ஒதுக்கப்பட்டது.


"இரவு முழுவதும் உருக்காலையில் இரும்பு தாதுகற்களை அள்ளிப் போட்டுக் கொண்டே இருக்க வேண்டும்." என ஸ்டான்லி தன் கடினமான வேலையை பற்றி நினைவு கூர்கிறார். "இன்டர்லேக் ஸ்டீல்" ஆலையில் வேலை பார்த்த பின்னர் ஒரு வருடம் வியட்நாம் போருக்கு சென்று திரும்பினார். அடுத்தபடியாக  விஸ்கான்சின் உருக்காலையில் பைப்-பிட்டர் அப்ரன்டிஸாக சேர்ந்தார்.

இராப் ஸ்டான்லி வாழ்ந்த வாழ்க்கையை அவரை போன்ற இன்றைய கடைநிலை தொழிலாளிகளால் நினைத்து கூட பார்க்க முடியாது. ஏனென்றால் "இன்டர்லேக் ஸ்டீல்" தொழிலாளர்கள் "ஐக்கிய அமெரிக்க எஃகு தொழிலாளர்கள்" என்ற தொழிற்சங்கத்தில் இருந்தார்கள். தொழிற்சங்கம் அவர்களுக்கு நல்ல சம்பளம் கிடைக்குமாறு பார்த்து கொண்டது. ஆனால் இன்றோ கேஎஃப்சி தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்த யாரும் இல்லை. அதனால் ஆட்சிமன்றமான காங்கிரஸில் குறைந்தபட்சமாக என்ன முடிவு செய்கிறதோ அதையே ஊதியமாக ஏற்க வேண்டிய நிலை உள்ளது.

துரித உணவு கடைகளில் கொடுக்கும் குறைந்த ஊதியத்திற்கு ஆதரவாக பிற்போக்கான வாதங்கள் கூறப்படுகிறது. அதாவது தொழிலாளர்கள் தங்கள் திறமைக்கேற்ப தான் சம்பளம் பெறுகிறார்கள். அதிக பணம் வேண்டும் என்றால் அதிக கல்வி பெற வேண்டும் என வாதிடுகிறார்கள். அது தர்க்கப்பூர்வமாக அர்த்தமுள்ளதாக இல்லை. தொழிலாளிகளுக்கு வெறுமனே திறமைகளுக்கு  ஏற்ப சம்பளம் கிடைப்பது இல்லை. அவர்கள் தங்கள் முதலாளிகளுடன் எவ்வளவுக்கு எவ்வளவு பேச்சுவார்த்தை நடத்த முடியுமோ அவ்வளவு தான் பெற முடியும். இப்போது தனியார் துறை தொழிலாளர்கள் வெறும் 6 சதவீதம் பேர் மட்டுமே தொழிற்சங்கத்தில் இருக்கிறார்கள். இவர்கள் வேலைநிறுத்தம் செய்தால் வேலையை இழப்பது உறுதி. தொழிற்சங்கம் வலுவாக இல்லாததால் தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை திறனற்று இருக்கிறார்கள்.

இதுவரை அன்றைய எஃகு துறை தொழிலாளர்களையும், இன்றைய துரித உணவக தொழிலாளர்களையும் ஒப்பிட்டு பார்த்தோம். இனி ஒரே துறை தொழிலாளர்களின் நிலைமையில் அன்றும் இன்றும் என்ன வேறுபாடு என்று பார்ப்போம். உதாரணத்திற்கு கறி வெட்டுதல் மற்றும் பதப்படுத்துதல் துறையை எடுத்து கொள்வோம்.

கறி வெட்டும் வேலை அருவெருப்பாக இருப்பதால், அமெரிக்கர்களுக்கு  இது பிடிக்காது என கசாப்பு நிறுவனங்கள் கூறுகின்றன. அதனால் தான் வெளிநாட்டில் இருந்து குடியேறியவர்களை வேலைக்கு எடுப்பதாக  வலியுறுத்துகின்றனர். (இந்த துறையின் அவலங்களையும், குடியேறியவர்களின் அல்லல்களையும் பற்றி அப்டன் சின்கிளேர் என்ற எழுத்தாளர் "தி ஜங்கிள் "   என்ற புதினத்தை எழுதினார்.) அப்டன் சின்கிளேர் இப்புத்தகத்தை எழுதிய காலகட்டத்தில் ஐரோப்பிய குடியேற்றக்காரர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தனர். இன்று இலத்தீன் அமெரிக்க குடியேற்றக்காரர்களை அதே வேலைக்கு நியமிக்கிறார்கள். அமெரிக்கர்கள் பன்றிகள் , ஆடு, மாடுகளை இறைச்சிக்காக வெட்ட மாட்டார்கள் என்பது மாபெரும் அண்டபுளுகு. இது நமக்கு எப்படி தெரியும்? அமெரிக்காவில் 1925 முதல் 1965 வரை குடியேற்றம் வெகுவாக குறைக்கப்பட்டு ஏறக்குறைய குடியேற்றத்திற்கு தடை செய்யப்பட்டிருந்தது. அந்த காலக்கட்டத்தில் பன்றிகள், ஆடு, மாடுகளை மில்லியன் கணக்கில் வெட்டியவர்கள் யார்? அமெரிக்காவில் பிறந்த நடுத்தரவர்க்கத்தினர் தான் இறைச்சி கூடத்தில் வெட்டினார்கள்.   அவர்கள் அமெரிக்கர்களே.

"மதர் ஜோன்ஸ்" என்ற இதழ் இந்த இறைச்சி துறையில் நடந்த மாற்றங்களை தெளிவாக விளக்குகிறது : "1960களின் முற்பகுதியில் அயோவா மாட்டிறைச்சி ( IBP) நிறுவனம், தொழிற்சங்கங்கள் இல்லாத கிராம பகுதிகளில் தனது தொழிலை ஆரம்பித்தது. மெக்ஸிக்கோவில் இருந்து குடியேறிய தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டனர். 1970களின் பிற்பகுதியில் மாமிசம் பதனிடும் நிறுவனங்கள் அயோவா மாட்டிறைச்சி நிறுவனத்தின் வணிக முறைகளை பின்பற்ற வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர்.  அல்லது இறைச்சி துறையில் இருந்து வெளியேற வேண்டும் என்ற நிலை இருந்தது. மாமிச பதனிடும் தொழிலில் ஊதிய விகிதங்கள் வெகு விரைவில் சரசரவென  50 சதவீதம் சரிந்தது."

நிக் ரேடிங் என்ற எழுத்தாளர் தனது "மேத்லேன்டு" என்ற புத்தகத்தில் அயோவா  மற்றும் அதனை சுற்றியுள்ள சிறு நகரங்கள் நலிவடைந்த வரலாறை பதிவு செய்துள்ளார். அந்த புத்தகத்தில் ரோலண்ட் ஜார்விஸ் என்ற தொழிலாளியை பேட்டி எடுத்துள்ளார். ரோலண்ட் ஜார்விஸ் அயோவா ஹாம் என்ற இறைச்சி நிறுவனத்தில் மணிநேரத்திற்கு $18 என்ற சம்பளத்துடன் 1992 வரை பணிபுரிந்து வந்தார். பின்னர் ஒரு மெகா நிறுவனம் அயோவா ஹாம் நிறுவனத்தை வாங்கிய பின் அங்குள்ள தொழிற்சங்கத்தை உடைத்தது. அதன் பின்னர் சம்பளம் $6.20 என குறைத்தது அந்த மெகா நிறுவனம். ரோலண்ட் ஜார்விஸ் தனது வருமான இழப்பை ஈடு செய்ய கூடுதல் நேரம் வேலை செய்தார்.

அமெரிக்கர்கள் மணி நேரத்திற்கு $18 சம்பாதிக்க பன்றிகளை கொல்வார்களா? என்ற கேள்விக்கே இடமில்லை. கண்டிப்பாக கொல்வார்கள். இந்த வேலைகளுக்காக நீண்ட வரிசையில் காத்து கிடந்தார்கள். இறைச்சி கூடத்தின் தொழிற்சங்கங்கள் வலுவிழந்ததால் எவ்வளவுக்கெவ்வளவு குறைவான ஊதியம் கொடுக்க முடியுமோ அவ்வளவு குறைவாக கொடுத்தார்கள். ஆபத்தான பணிச்சூழல் இருந்தாலும் மெக்சிகோவிலிருந்து புலம்பெயர்ந்தவர்களுக்கு இங்கு கிடைக்கும் சொற்ப பணமும் அவர்களது நாட்டில் பெரிய குவியலாக கருதப்பட்டது. குறைவான ஊதியத்திற்கு ஒத்துக்கொள்வதால் இறைச்சி நிறுவனங்களும் குடியேறியவர்களையே வேலைக்கு அமர்த்தியது.

அமெரிக்க ஜனாதிபதி கிளவ்லேண்ட் 1894 இல், புல்மேன் இரயில் தொழிற்சாலையில் வேலைநிறுத்தத்தை முறியடிக்க 2,500 படைகளை அனுப்பி 30 பேரை கொன்றார். சிகாகோ போலீசார்  1937 இல், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த எஃகு ஆலை தொழிலாளர்கள் 10 பேரை கொன்றனர். இறந்த தொழிலாளர்களின் பெயர்கள் அவர்களின் நினைவாக எஃகு தொழிற்சாலையின் வாசலில் இருக்கும் கொடிக்கம்பத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. அவர்களில் பலர் பல மொழிகள் தெரிந்து வைத்திருந்தார்கள். இந்த நினைவு சின்னம் ராப் ஸ்டான்லியின் சொந்த ஊருக்கு அருகே தான் உள்ளது.

நான் ஸட்லொவ்ஸ்கியுடன் சுற்றுப்பயணம் செய்த நாட்களில் மேலே சொன்ன இடங்களை பார்த்தேன்.(ஸட்லொவ்ஸ்கி எஃகு உருக்காலை தொழிற்சங்கத்தில் இருந்தவர்.) அவர் தொழிலாளர்களுக்கு தொழிற்சங்க வரலாறை விளக்குவதற்காக சுற்றுப்பயணம் செல்லும்போது என்னையும் அழைத்து சென்றிருந்தார். ஸட்லொவ்ஸ்கி தொழிலாளர் இயக்கத்திற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். கவிஞர்கள் தங்களை  தொழிலாளர்கள் போன்றும்,  தொழிலாளர்கள் தங்களை  கவிஞர்கள் போன்றும் நினைத்து கொள்ள வேண்டும் என்பார்.

புதிதாக சேரும் அப்ரண்டீசுகள் புதிய பிராண்டு கார்களை ஓட்டுவதை பார்த்திருக்கிறேன். அதுவும் தொழிற்சங்கத்தால் போராடி கிடைக்கப் பெற்ற முதல் மாத சம்பளத்தில் "டாட்ஜ் ராம்ஸ்" எனப்படும் பெரிய வகை கார்களை வாங்குவதையும் பார்த்திருக்கிறேன். அதே சமயம் பட்டதாரிகள் பத்திரிக்கை உதவியாளராகவோ அல்லது புத்தக கடையில் பணியாற்றி வெறும் $9.50 சம்பாதிப்பவர்களையும் பார்த்திருக்கிறேன். இவர்கள் தொழிற்சங்கம் ஆரம்பிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை.

ஸட்லொவ்ஸ்கியிடம் இதை பற்றி கேட்டுள்ளேன். அதற்கு அவர் கூறியதாவது - வெள்ளை காலர் தொழிலாளர்கள் சார்லஸ் டிக்கன்சின் கதாபாத்திரம் "பாப் கிராட்சிட்" போல இருப்பார்கள் (மாடசாமியின் "மெய்கண்டன்’ போல சின்சியராக இருப்பார்கள்). முதலாளிக்கு அடுத்த படியில் இருப்பதாக எண்ணம் அவர்களுக்கு உண்டு. முதலாளி தன்னை பெயரை சொல்லி அழைக்க சொல்வதால் பெருமிதம் கொள்கிறார்கள். சாதாரண ஷூ கடைக்கு சென்று பாருங்கள். அங்கு 6 மேலாளர்கள் இருப்பார்கள். ஆனால் ஒருவருக்கும் உருப்படியான சம்பளம் இருக்காது.

முதலாளிகளின் மிகப்பெரிய வெற்றி தொழிற்சங்கங்களை உடைப்பதில் இல்லை. அது தேவையற்றது தான். அமெரிக்க  எஃகு தொழிலாளர்கள் 1974இல் 521,000 இருந்து இன்று 150,000ஆக குறைந்துள்ளனர். இலட்சக்கணக்கான வேலைகள் ஆட்டோமேஷன் மற்றம் வெளிநாடுகளுக்கு அவுட்சோர்சிங் செய்வதன் விளைவாக காணாமல் போயுள்ளது .

"நான் இந்த நிறுவனத்தில் சேர்ந்த போது 28,000 தொழிலாளர்கள் இருந்தனர் " என்கிறார் ஜார்ஜ் ரான்னே என்று ஒரு முன்னாள் நிர்வாகி கூறினார். இன்டியானாவில் இருக்கும் "இன்லாண்டு ஸ்டீல்" என்ற ஆலை 1998இல் ஆர்சலர்  மிட்டலால் வாங்கப்பட்டது. "நான் வேலையை விட்ட போது  தொழிலாளர்கள் எண்ணிக்கை 6000 தான் இருந்தது. அன்று உற்பத்தி செய்த 5 மில்லியன்  டன் ஸ்டீல் இன்றும் உற்பத்தி செய்யப்படுகிறது.  அதே தரத்தில் ஆனால் குறைந்த விலைக்கு இன்று உற்பத்தி செய்யப்படுகிறது." என்கிறார் ஜார்ஜ் ரான்னே.

முதலாளிகளின் மிக பெரிய வெற்றி தொழிற்சங்கத்தை வலுவிலக்க செய்வது தான். அதனால் அதிக சம்பளம் கொடுக்கப்பட்ட வேலைகள் நீக்கப்பட்டன. ஸ்டான்லிக்கு அதிர்ஷ்டம் இருந்தது. விஸ்கான்சின் ஸ்டீல் 1980 ல் மூடப்பட்ட பின்னர், அவர் சில காலம் சில உதிரி வேலைகள் செய்தார்.  இறுதியாக மத்திய அரசில் பிளம்பர் வேலையில் சேர்ந்தார். அரசு துறையில் தான் அதிகபட்சமாக தொழிற்சங்கங்க பங்கேற்பு 35.9 விகிதத்துடன் இருக்கிறது . வேலையில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் தொழிலாளர்கள் இன்று சோடா பானங்கள் விற்பவர்களாக அல்லது பாதுகாப்பு காவலர்களாக (செக்யூரிட்டியாக) பணியாற்றுகிறார்கள்.


உயர் பள்ளி படிப்பை முடித்த இன்றைய மாணவனை "வீட்டு வாடகை கொடு அல்லது வீட்டை விட்டு வெளியே போ" என கூறினால் என்ன செய்வார்கள்? எங்கு செல்வார்கள்? இன்று அவர்கள் கேஎஃப்சி-க்கு செல்லலாம். அங்கு ஸ்டான்லி பெற்றதை விட 57 சதவீதம் குறைவான சம்பளம் அதாவது  மணி நேரத்திற்கு $7.62 தான் கிடைக்கும். கேஎஃப்சி குறைந்த ஊதியம் கொடுத்து கொள்ளை லாபம் சம்பாதிக்கிறது. ஸ்டான்லி சம்பாதித்தது போல் இன்று எந்த கேஎஃப்சி தொழிலாளியும் சம்பாதிக்கவில்லை. ஏனெனில் அங்கு தொழிற்சங்கம் அமைக்கும் சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவு. சிதறி கிடக்கும் டஜன் கணக்கான கடைகளிலுள்ள தொழிலாளர்களை திரட்ட முடிவதில்லை. ஒரு எஃகு ஆலை தொழிலாளர்களை அமைப்பாக்க முடிவதை விட கேஎஃப்சி தொழிலாளர்களை அமைப்பாக்குவது கடினமாக உள்ளது.

அடுத்து அலுவலக தொழிலாளர்களை பார்ப்போம். ஸட்லொவ்ஸ்கி சரியாகவே சுட்டிக்காட்டினார். தொழிலாளி வர்க்க உணர்வு இல்லாததே அலுவலக தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தில் இணையாமல் இருப்பதன் காரணம். சிகாகோ குரூப்பான் என்ற புகழ் பெற்ற நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்து  பட்டதாரிகளும் வருடத்திற்கு $ 37,800 தான் சம்பாதிக்கின்றனர். இதே சம்பளம் தான் அன்று கல்லூரி படிப்பில்லாத ஸ்டான்லியின் ஆரம்ப சம்பளமாக இருந்தது. இன்றைய பட்டதாரிகள் படித்திருப்பதாலும் மேசைகளில் உட்கார்ந்து வேலை செய்வதாலும் நீல காலர் தொழிலாளர்களை போல வேலை நிறுத்தம் செய்து அதிக ஊதியம், நல்ல பணி நிலைமைகள் பெற வேண்டும் என்று நினைப்பதில்லை .

இன்றைய கல்லூரி பட்டதாரிகளின் வாழ்க்கை தரமும் 1960 களின் குறைந்த திறமையுள்ள தொழிலாளர்களின் வாழ்க்கை தரமும் ஒரே மாதிரி தான் இருக்கிறது. இந்த உண்மை நமக்கு உணர்த்துவது என்னவெனில் அடிப்படையில் இவர்களின் அணுகுமுறை  தவறு என்று ஆணித்தரமாக நிரூபிக்கிறது . நாம் நடுத்தர வர்க்கம் என நினைப்பது தவறு. எவ்வளவு சம்பாதித்தாலும் எந்த வேலை செய்தாலும் நாம் தொழிலாளி வர்க்கம் என்பதை உணர வேண்டும். உடல் உழைப்பு செய்கிறோமா என்பது முக்கியமில்லை. முதலாளிக்கும் நமக்கும் உள்ள உறவு தான் நாம் யார் என தீர்மானிக்கிறது. நிறுவனம் உங்களுக்கு சொந்தமில்லை என்றால் நீங்கள் தொழிலாளி வர்க்கம் தான்.

"நான் பார்த்ததிலேயே புத்திசாலியான மக்கள் ஆலையை இயக்கிய தொழிலாளர்கள் தான்" என ஸட்லொவ்ஸ்கி கூறுவார் .

ஆமாம் அவர்கள் தான் திறமையானவர்கள். ஏனெனில் அந்த தொழிலாளர்கள் தான் நிறுவனத்தின் இலாபத்தில் இருந்து நியாயமான பங்கையும், அவர்களின் உரிமைகளையும் போராடி பெற்றனர்.




குறிப்பு:

எட்வர்ட் மெக்கிளெலேண்டு எழுதிய புத்தகங்கள்,
1. இளம் ஒபாமா : சிகாகோ மற்றும் ஒரு கறுப்பு ஜனாதிபதி உருவாகிய கதை
(Young Mr. Obama: Chicago and the Making of a Black President)
2. வானம் தவிர வேறொன்றுமில்லை:  அமெரிக்காவின் தொழில்துறையின் செல்வாக்கும், துயரங்களும், நம்பிக்கைகளும்
(Nothing But Blue Skies: The Heyday, Hard Times and Hopes of America's Industrial Heartland.)

தொடர்புடைய பதிவுகள்:

Saturday, November 30, 2013

காஞ்சி சங்கராச்சாரிக்கு அனுப்பிய இறுதி எச்சரிக்கை கடிதம்

சங்கரராமனை கொலை செய்தது காஞ்சி சங்கராச்சாரி என்பது ஊரறிந்த விசயம் தான். இருந்தாலும் பண பலமும், அதிகார பலமும் உள்ள பார்ப்பனிய மடாதிபதிக்கு விடுதலை கிடைத்துள்ளது. இது வெட்க கேடான நிலைமை.

ஜெயந்திரனுக்கு சங்கரராமன் 2004 ஆகஸ்ட் 30ம் தேதி 'இறுதி அறிவிப்பு' என்ற தலைப்பில் கடிதம் அனுப்பினார். கடிதம் அனுப்பிய நான்காம் நாள்  செம்டம்பர் 3ம் தேதி சங்கராச்சாரி அனுப்பிய கூலிப்படையால் சங்கரராமன் கொலை செய்யப்பட்டார். சங்கரராமனின் கடிதம் பின்வருமாறு;

சங்கரராமனின் 'இறுதி அறிவிப்பு' கடிதம்:

சன்யாஸ தர்மத்திற்கு இலக்கணமாக வாழ்ந்த மகான் காஞ்சி மடத்து 68வது பீடாதிபதி மகா பெரியவாள் ஈடு இணையற்றவர். அவரளவு இல்லாவிட்டாலும் தசாம்சம்மாவது பின்னவர்கள் இருக்க வேண்டாமா?

தங்களுடையவும் தங்கள் அந்தேவாஸியினுடையவும் (விஜயேந்திரர்) செயல்பாடுகள் சன்யாஸ தர்மத்திற்கு விரோதமாகஉள்ளது. ஆசார ப்ரபவோ தர்மோ பாரம்பரியமிக்க மடத்தின் ஆசார அனுஷ்டானங்களை தாங்கள் ககன மார்க்கத்தில்செல்லும்போதே காற்றில் பறக்க விட்டீர்கள்.

தங்கள் அந்தேவாசியோ சூர்யோதயத்தை பார்த்தது கிடையாது. அர்த்த ராத்திரி வரை ஸ்திரீகளுடன் அந்தரங்க சம்பாஷணை. தாங்கள் இருவருக்கும் ஆசார அனுஷ்டானம் நாஸ்தி, அனாசாரம்- படாடோபம் ஜாஸ்தி. மூலாம்னாய பீடாதிபதிகள் தவறுசெய்யும்போது அதனால் தேசத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது.

  1. தாங்கள் தலைக்காவிரிக்கு தலைதெறிக்க ஓடினீர்கள். காவிரி தமிழ்நாட்டில் மட்டுமல்ல கர்நாடகத்திலும் வறண்டது.
  2. ஒரே இந்து சாம்ராஜ்யம் நேபாளத்திற்கு சென்றீர்கள். இராஜ வம்சமே பூண்டற்றுப் போனது.
  3. எல்லா நதிகளும் மகாமகத்து கும்பகோணம் வருவதாக ஐதீகம். தங்கள் இருவரின் திருப்பாதம் பட்ட விசேஷம் கும்பகோணத்தில் கோர தீ விபத்தில் ஒரு பாவமும் செய்யாத குழந்தைகள் மரணம்.
  4. கொலைப்பாதகம், குரு துரோகம் புரிந்த சைவ மட இளவரசுகளுக்கு ஆதரவு தந்து அடைக்கலம் கொடுத்தீர்கள். இன்றைக்கு ஒருவர் சிறையில் ஒருவர் நடுத்தெருவில்.
  5. தங்களுடன் கைலாச யாத்திரை செய்த ராஜகோபால் காரக்ஹத்தில்,
  6. தற்போது துந்த கிணற்றில் தூர்வாரும் வேலையாக நஷ்டத்தில் இயங்கும் தமிழ்நாடு ஆஸ்பத்திரி ஸ்வீகாரம் செய்துள்ளீர்கள். ஏற்கனவே குழந்தைகள் ஆஸ்பத்திரியில் நல்ல (அவ) பெயர். நிர்வாகிகளுக்குள் கருத்து வேறுபாடு.
  7. வைஷ்ணவத் தல திருப்பதியில் தலையிட்டு குளறுபடி செய்து அவப் பெயர்.
  8. சைவத்திலோ யாரும் தங்களை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை.
  9. கெளமாரத்தில் பழனியில் நூதன பிரதிஷ்டை செய்த விக்ரஹம் தற்போது கேட்பாரற்று கிடக்கிறது.
  10. தங்கள் முயற்சியால் கொண்டு வரப்பட்ட மதமாற்றத் தடைச் சட்டம் வாபஸ் பெறப்பட்டது.

இதற்கெல்லாம் என்ன காரணம் தங்களிடம் ஆன்ம பலம் அறவே இல்லை. ராவணன், அர்ச்சுனன் போல் தங்களுக்கு காஷாயம் ஓர்வேடம். தங்களின் தவறான செயல்பாடுகள் ஸ்தாபனத்தை பாதிக்கிறது. ஸ்தாபனத்தில் நன்மைக்காக தனி மனிதர்களைப்பலியிடுவதில் தவறில்லை.

சோமசேகர கனபாடிகள் கூறிய குற்றச்சாட்டுகள் உண்மையே. எனவே, இந்த ஸ்தாபனத்தைக் காக்க நான்முடிவெடுத்து விட்டேன்.

இளையாற்றாங்குடி, விஜயவாடா, பம்பாய், திருப்பதி மற்றும் காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் தாங்கள் நடத்திய ஆஸ்ரம தர்மவிரோத செயல்பாடுகள் மற்றும் தங்கள் அந்தேவாஸியின் (இளையவர்) அக்ரம தர்மத்திற்கு விரோதமான செயல்பாடுகள், அவர்நடத்திவரும் மகளிர் விடுதியில் நடைபெற்ற துர்மரணம் போன்ற அசம்பாவிதங்கள், அவர் தம்பி ரகுவும் ஸ்தானீகரின் குடும்பத்தினரும் இணைந்து செய்து வரும் அட்டூழியங்கள் ஆகியவற்றை வெளிக் கொண்டுவந்து தேவைப்பட்டால், நீதிமன்றம் மூலம் தங்களையும் தங்கள் வாரிசுகளையும் தகுதியை இழக்கச் செய்யத் தேவையானநடவடிக்கையை விரைவில் மேற்கொள்வேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படிக்கு,
அ.சங்கரராமன்

பின்குறிப்பு:
விஷ வித்தான வாரிசை தாங்கள் தேர்ந்தெடுத்துள்ளீர். அந்த விஷச் செடியை தாங்களே வெட்டினால் எனக்கு தங்கள் மீதுள்ள கோபம் சற்று குறையும்.


தொடர்புடைய பதிவுகள்:

Wednesday, September 25, 2013

அதிமுக-வினரே குறித்து கொள்ளுங்கள் – மோடியின் பித்தலாட்டம்!



சமீப காலமாக மோடிமேனியா என்ற கொடிய நோய் பரவி வருகிறது. கோயபல்ஸ் பாணியில் குஜராத் முன்னேற்றம் என பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். அவை சரியா என சற்றே உரசி பார்ப்போம். இந்திய திட்ட குழு புள்ளிவிவரங்களின் படி குஜராத்தையும் தமிழ்நாட்டையும் ஒப்பிட்டு பார்ப்போம்.

1. வறுமை கோட்டிற்கு கீழே குறைவாக வாழும் மக்கள் விகிதத்தில் தமிழ்நாட்டிற்கு 5வது இடம். குஜராத்திற்கு 9வது இடம் தான். குஜராத்தில் கால்வாசி பேர் வறுமை கோட்டிற்கு கீழே இருக்கின்றனர்


No.
States
%  Below
Poverty Line
Population
1
Jammu & Kashmir
9.4
12548926
2
Kerala
12
33387677
3
Delhi
14.2
16753235
4
Punjab
15.9
27704236
5
Tamil Nadu
17.1
72138958
6
Uttarakhand
18
10116752
7
Haryana
20.1
25353081
8
Andhra Pradesh
21.1
84665533
9
Gujarat
23
60383628
10
Karnataka
23.6
61130704
(குறிப்பு - மக்கள் தொகை ஒரு கோடிக்கு கீழ் இருக்கும் மாநிலங்களை சேர்க்கவில்லை. அப்படி சேர்த்தால் குஜராத்தின் இடம் இன்னும் கீழே செல்லும்.)

2. சமூகத்தின் நாகரிகத்தை அளக்கும் ஆண்கள் பெண்கள் விகிதத்தில் தமிழ்நாட்டிற்கு 2வது இடம். குஜராத்திற்கு 14வது இடம் தான். அதாவது 1000 ஆண்களில் 995 பெண்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். ஆனால் குஜராத்தில் 918 பெண்கள் மட்டுமே உள்ளனர். இது தேசிய சராசரியை விட (940) வெகு குறைவு.  


No.
State
No of Females Per 1000 Males
1
Kerala
1084
2
Tamil Nadu
995
3
Andhra Pradesh
992
4
Chhatisgarh
991
5
Orissa
978
6
Karnataka
968
7
Uttarakhand
963
8
Assam
954
9
Jharkhand
947
10
West Bengal
947
11
Madhya Pradesh
930
12
Rajasthan
926
13
Maharashtra
925
14
Gujarat
918


3. குழந்தை பிறந்தவுடன் குறைவாக இறக்கும் விகிதத்தில் தமிழ்நாட்டிற்கு 2வது இடம். குஜராத்திற்கு 10வது இடம் தான். அதாவது 1000 குழந்தை பிறப்புகளில் தமிழ்நாட்டில் 22 குழந்தைகள் இறக்கின்றனர். ஆனால் குஜராத்தில் 41 குழந்தைகள் இறக்கின்றனர். இது ஒரு நாட்டின் மருத்துவம், ஆரோக்கியம், மனிதவளம் ஆகி யவற்றை குறிக்கும் இந்த விகிதத்தில் குஜராத் மிகவும் பின் தங்கியுள்ளது.


No.
State
Infant Deaths per 1000 birth
1
Kerala
12
2
Tamil Nadu
22
3
Maharashtra
25
4
Delhi
28
5
Punjab
30
6
West Bengal
32
7
Karnataka
35
8
Uttarakhand
36
9
Jharkhand
39
10
Gujarat
41


4. எழுத்தறிவு விகிதத்திலும் குஜராத் தமிழ்நாட்டை விட பின்தங்கி உள்ளது.


No.
State
Literacy Rate (2011)
1
Kerala
93.91
2
Delhi
86.34
3
Maharashtra
82.91
4
Tamil Nadu
80.33
5
Uttarakhand
79.63
6
Gujarat
79.31


இப்படி சமூக வாழ்க்கை தரத்தை அளக்கும் குறியீடுகளில் குஜராத் தமிழ்நாட்டை விட பின்தங்கி உள்ளது. வளர்ச்சி, முன்னேற்றம் தான் சிறந்த ஆட்சியின் அறிகுறி என்றால், அதை கோரும் தகுதி மோடியின் குஜராத்திற்கு கிடையாது. குஜராத்தை விட முன்னனியில் இருக்கும் கேரளம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கே அந்த தகுதி உண்டு. அதிமுக-வினர் இதை குறித்து கொள்ளலாம்.

குஜராத் முன்னேறிவிட்டது என்பது மாபெரும் பொய். புள்ளிராஜாக்கள் சொல்லும் குஜராத் முன்னேற்றம், வளர்ச்சி என்பது அண்டபுளுகு. புள்ளி விவர மோசடி செய்யும் மோடி வித்தைகளை கண்டு ஏமாற வேண்டாம். பொய், பித்தலாட்டங்கள் மூலம் தமிழகத்தில் கால் பதிக்க நினைக்கும் நச்சு கிருமிகளை புறந்தள்ளுவோம்!

(தோழர் மருதையன் 2013, செப்டம்பர் 22 அன்று திருச்சியில் மோடியின் முகமூடியை கிழிக்கும் பொதுக்கூட்டத்தில் நடத்திய உரையை தழுவி எழுதியது.)

தொடர்புடைய பதிவுகள்: