பாலியல் வல்லுறவு - சில காரணங்கள்:
பாலியல் வல்லுறவு பற்றி மனோதத்துவ ரீதியாக எட்வர்ட் ஹேகன் சொல்வதாவது,
1. மேட்டுக்குடி ஆண்கள் (“மைனர்”) திருப்பி அடிக்க முடியாத அல்லது பழிவாங்க முடியாத பெண்களை நிர்ப்பந்திக்கின்றனர்.
2. சமூகத்தில் கேட்பாரற்ற பெண்கள் (எ.கா., அனாதைகள்) அதிகம் பாதிப்படைகிறார்கள். தட்டி கேட்க பெண்ணின் குடும்பத்தினர் இல்லாதிருப்பது வசதியாக போய்விடுகிறது.
3. யுத்தத்தின் போது, எதிரி பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள்.
4. பாலியல் வல்லுறவில் பேரின்பம் காணும் பேர்வழிகள் மற்றும் சைக்கோ செய்யும் வல்லுறவுகள்.
திடுக்கிடும் சில புள்ளி விவரங்கள்:
தேசிய குற்ற ஆவண ஆணையம் 2011 அறிக்கையின்படி இந்தியாவில் ஒவ்வொரு 21 நிமிடங்களுக்கும் பாலியல் வல்லுறவு நடக்கிறது. பதிவாகாத பாலியல் குற்றங்களையும் சேர்த்தால், உண்மை நிலவரம் பேரதிர்ச்சியாகவே இருக்கும்.
2011ஆம் ஆண்டு புள்ளி விவர கணக்குபடி பாதிக்கப்பட்ட பெண்கள் பெரும்பாலானாருக்கு (93%) தெரிந்தவர்களே வன்புணர்ச்சி செய்துள்ளார்கள். (நெருங்கிய உறவினர்கள் 7.5%, அண்டை வீட்டார்கள் 32.4%, தெரிந்தவர்கள் 53.2%, பாலியல் வன்முறையில் ஈடுபடுவோர்களில் தெரியாதவர்கள் 7%).
பாலியல் வல்லுறவு தில்லி, மும்பை போன்ற பெரு நகரங்களில் தான் அதிகம் நடக்கிறது. பாலியல் தொல்லை, ஆள்கடத்தல், வரதட்சணை, சித்திரவதை, ஈவ் டீசிங் என பெண்களுக்கு எதிரான குற்றங்களையும் கணக்கில் எடுத்து கொண்டால், படிப்பறிவில் முன் நிற்கும் கேரளம், ஊடகங்களால் போற்றப்படும் குஜராத், அமைதி பூங்கா என வருணிக்கப்படும் தமிழகம் கூட இதில் விதிவிலக்கில்லை.
கடந்த 40 ஆண்டுகளில் பாலியல் வல்லுறவு கொடுமைகள் பத்து மடங்காக பெருகியுள்ளது. அதாவது 1971 கணக்கின்படி, பாலியல் வல்லுறவின் எண்ணிக்கை 2487இல் இருந்து 24206ஆக உயர்ந்துள்ளது. இவை தான் பதிவான குற்றங்களின் அடிப்படையிலான புள்ளி விவரங்கள் நமக்கு அளிக்கும் செய்தி.
நுகர்வு கலாச்சார வெறி அதிகரிக்க அதிகரிக்க, பெண்களை பண்டமாக சித்தரிக்கும் போக்கும் அதிகரித்தே வருகிறது. பெண்களை பண்டமாக சித்தரிப்பதில் ஜனரஞ்சகம் என்ற பெயரில் மஞ்சள் பத்திரிக்கைகள், டி.வி மற்றும் சினிமாக்கள் பெரும்பங்காற்றுகின்றன. பெண்களை கேவலமாக இழிவுபடுத்தும் ஊடகங்களே இன்று பாலியல் வன்முறைக்கு எதிராக குரல் கொடுப்பது நகைமுரணாக உள்ளது.
ஊடகங்கள் சொல்லாத சோகங்கள் மற்றும் புள்ளி விவரங்களில் பதிவாகாத துயரங்கள்:
1. வடகிழக்கு மாநிலங்களின் துயரநிலை:
மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த மனோரமா என்ற இளம் பெண்ணை ஜூலை 2004, 11 ஆம் தேதி, துணை இராணுவ படை அதிகாரிகள் வல்லுறவுபடுத்தி கொடூரமாக சித்திரவதை செய்து கொன்றனர். இராணுவத்திற்கு வரைமுறையற்ற அதிகாரத்தை கொடுத்தது ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் (1958). பல பத்தாண்டுகளாக காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இராணுவம் அட்டூழியம் செய்து வருகிறது. இந்த கொடூர சட்டத்தை திரும்பப் பெறக் கோரி அம் மாநிலங்களில் மக்கள் போராடி வருகின்றனர். மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ஐரோம் ஷர்மிளா என்ற பெண் 12 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார்.
2. காசுமீரில் இராணுவத்தின் காட்டாட்சி:
மே 2009இல் காசுமீர் சோபியான் நகரத்து இளம் பெண்கள் இருவரை இராணுவத்தினர் பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்தனர். இதனை எதிர்த்து காசுமீர் மக்கள் பல மாதங்களாக போராடினர். இன்னும் நீதி கிடைக்கவில்லை. நாட்டை காப்பாற்றுவார்கள் என நம்பப்படும் இராணுவத்தினர் இந்திய காசுமீர் பெண்களை மானபங்கப்படுத்தி வருகின்றனர். காசுமீரில் 5,00,000 சிப்பாய்கள் குவிக்கப்பட்டுள்ளனர். 30 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு இராணுவ அட்சியே நடக்கிறது. இத்தனை ஆண்டுகாலம் இராணுவத்திற்கு அங்கு என்ன வேலை?
3. பச்சைவேட்டை என்ற பெயரில் பாலியல் வன்முறைகள்:
சட்டீஸ்கரில், சோனிசோரி என்ற பள்ளி ஆசிரியரை, போலீசு எஸ்.பி அன்கித் கார்க் தலைமையில் போலீசார்கள் பாலியல் வல்லுறவு செய்தனர். பின்பு போலீசார் சொல்லொண்ணாத கொடுமைகளை செய்தனர். அந்த போலீசு எஸ்.பி அன்கித் கார்குக்கு துணிகர போலீசு பதக்கம் வழங்கி கௌரவப்படுத்தியது அரசு. அதிரடிபடையினரும், போலீசாரும் தீவிரவாதிகளை பிடிக்கிறோம் என்ற பெயரில் பழங்குடி மக்களை அச்சுறுத்தி வருகின்றனர். அப்படி அச்சுறுத்தும் போது பாலியல் வன்முறைகளில் ஈடுபடுகின்றனர்.
4. வாச்சாத்தி பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை:
1992 சூன் 20 ஆம் தேதி, வாச்சாத்தியில் சோதனை என்ற பெயரில் 155 வனத்துறையினர், 108 காவல் துறையினர், 6 வருவாய்த்துறையினர் கொண்ட பெரும் படை ஊருக்குள் புகுந்து, வீடு வீடாக சோதனை செய்தனர். வீட்டில் இருந்த பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என அனைவரையும் இழுத்து வந்து ஊரின் மையத்தில் இருந்த பெரிய ஆலமரத்தின் கீழே நிறுத்தி சரமாரியாக அடித்தனர். பின்னர் 18 பெண்கள் மீது பாலியல் வன்முறையில் ஈடுபட்டனர். 19 ஆண்டுகளுக்கு பிறகு தான் 269 பேரின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 54 பேர் இயற்கையாகவே இறந்து விட்டனர். 17 பேர் மட்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மீதிப்பேர் பிணையில் தப்பித்து வெளியே வந்துவிட்டார்கள். கிடைத்ததும் பாரபட்சமான நீதி தான். தாமதமான நீதி அநீதி தானே.
5. விழுப்புரம் இருளர் பெண்கள்:
2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், விழுப்புரம் மாவட்ட த்தில், திருக்கோவிலூர் காவல் நிலைய போலீசார் 4 இருளர் பெண்களை பாலியல் வல்லுறவு செய்தனர். அப்போது முதல்வர் ஜெயலலிதா 5 போலீசாரை பணி இடை நீக்கம் செய்து தலா 5 லட்சம் கொடுக்க உத்தரவிட்டார். சமீபத்தில் முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பெண்களுக்கு தொல்லை கொடுப்பவர்கள் நடமாட்டத்தை மப்டி போலீசார் கண்காணிக்கும்படி உத்தரவிட்டுள்ளார். உண்மையில், பெண்களுக்கு தொல்லை கொடுக்கும் நிலையம் தான் காவல் நிலையம் என்பது அவருக்கு தெரியாதா என்ன? போலீசாரை யார் கண்காணிப்பது?
மக்களை அடக்கி ஆட்சி செய்ய போலீசு மற்றும் இராணுவத்திற்கு சிறப்பு சலுகைகள் கொடுத்து, வரம்பற்ற அதிகாரங்களை வழங்கி வருகிறது அரசு. போலீசு, இராணுவம் செய்யும் பாலியல் வன்முறைகளை விசாரிப்பதுமில்லை, குற்றவாளிகளை தண்டிப்பதுமில்லை. அருந்ததி ராய் கூறுகையில், "சட்டீஸ்கர், காஷ்மீர் மற்றும் மணிப்பூர் போன்ற இடங்களில், இராணுவம் மற்றும் போலீசு பாலியல் வன்முறையை மக்களுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்துகிறது. பாலியல் வன்முறை செய்யும் இராணுவத்தினர் மற்றும் போலீசாரை பாதுகாக்க சட்டங்கள் அமலில் உள்ளன." என தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
6. இந்துத்வத்தின் சோதனைசாலை குஜராத்:
குஜராத் 2002 முசுலீம் மக்களை இனப்படுகொலை செய்தபோது, ஆயிரக்கணக்கான பெண்களை இந்து மதவெறியர்கள் பாலியல் வல்லுறவு செய்தனர். குஜராத் இனப்படுகொலை உண்மைகளை, முசுலீம் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தெகல்கா பத்திரிக்கை ஆதாரங்களுடன் ஆவணப்படுத்தியுள்ளது. இந்து மதவெறியர்களை அம்பலப்படுத்தி, பல சமூக ஆர்வலர்கள் நீதி கேட்டு போராடி வருகின்றனர். இருப்பினும் பெருமளவிலான குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை, வெகுசிலரே தண்டிக்கப்பட்டுள்ளனர்.
7. ஒரிசாவில் விசுவ இந்து பரிசத்தின் வெறியாட்டம்:
2008ஆம் ஆண்டு ஒரிசாவின் காந்தமால் மாவட்டத்தில் விசுவ இந்து பரிசத் (வி.ஹெச்.பி) தலைமையில் கிறித்துவ பழங்குடியினரின் ஊர்களை எரித்தனர். இந்த கொலைவெறியாட்டம் மாதக்கணக்கில் தொடர்ந்தன. அவர்களின் தாக்குதலுக்கு, பாலியல் வன்முறைகளுக்கு கிறித்துவ கன்னியாஸ்த்திரிகளும், பழங்குடி பெண்களும் தப்பவில்லை.
செத்துப்போன இந்து மனசாட்சி:
சட்டீஸ்கர் மாநில மகளிர் ஆணைய தலைவர் மற்றும் பாரதீய ஜனதா தலைவர் விபா ராவ் கூறுகையில் "பெண்களுக்கெதிரான குற்றங்களுக்கு அவர்கள் அணியும் ஆபாச ஆடையே காரணம்" என்கிறார். சமூகத்தின் இந்த ஆணாதிக்க சிந்தனையை தான் மெத்த "படித்த" இளைஞர்களும் பிரதிபலிக்கிறார்கள். பதிவான புள்ளிவிவரங்களின்படி பாலியல் வன்முறைக்கு பலியானவர்களில் 10% சிறுகுழந்தைகளும் அடக்கம். ஆடை தான் காரணமென்றால் சிறுகுழந்தைகளை வல்லுறவு செய்ய காரணமென்ன? மேலும் குஜராத்தில் காவிப்படைகளுக்கு பர்தாக்கள், சிறுகுழந்தைகள், தாய்மார்கள் கண்ணுக்கு தெரியவில்லை. அவர்களை மிருகமாக்கியது இந்து மதவெறி தான்.
ஆர்.எஸ்.எஸ் சர்சங்சலாக் மோகன் பகவத் "பாலியல் வல்லுறவு இந்தியாவில் தான் நடக்கிறது, பாரதத்தில் இல்லை" என்று பெருமையுடன் கூறியுள்ளார். குஜராத்தில் வெறியாட்டம் போட்ட காவிப்படைகளை அவ்வளவு சீக்கிரத்தில் மறக்க முடியுமா என்ன? குஜராத் கொடூரத்தையே தாங்க முடியவில்லை, அகண்ட பாரதத்தில் பெண்களின் நிலையை பற்றி கேட்கவா வேண்டும்! சுஸ்மா சுவராஜ், ஜெயலலிதா கோருவது போல் குஜராத்தில் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட காவிப்படைகளுக்கும், அதற்கு பின் நின்ற மோடிகளுக்கும், கேடிகளுக்கும் மரண தண்டனை நிறைவேற்ற வேண்டாமா? சுஸ்மா மற்றும் ஜெயலலிதா குஜராத் முசுலீம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை பற்றி வாய் திறக்கவில்லை என்பது தான் உண்மை.
தமிழகத்தின் மௌனம்:
ஈழத்தில் குழந்தைகள், இளம்பெண்கள், தாய்மார்கள் என வயது வித்தியாசமின்றி ஆயிரக்கணக்கான பெண்களை வல்லுறவு செய்து கொன்றனர். தமிழ் இனப்படுகொலையை கண்டு தமிழகம் மௌனமாகவே இருந்தது. இந்த அவல நிலையை உடைக்கவே முத்துக்குமார் தன்னுயிரை ஈகம் செய்தார். தமிழ் ஊடகங்களும் மௌனமாக இருந்தன. தமிழக ஊடகங்கள் ஈழத்தமிழ் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை கண்டிக்கவுமில்லை, கண்ணீர் சிந்தவுமில்லை.
டெல்லி பாலியல் வன்முறைக்காக நடுத்தரவர்க்கம் இப்போது போராடுகிறது. நீதி கேட்கிறது. நல்ல விசயம். ஆனால் ஊடகங்கள் சொல்லாத சோகங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன என்பதை நாம் உணரவேண்டும். வர்க்கபேதமின்றி அனைத்து பாலியல் வன்முறை கொடுமைகளுக்கும் எதிராக கிளர்ந்தெழுந்தால் அந்த கோபத்திற்கு உண்மையான அர்த்தம் இருக்கும். அதுவரைக்கும் இந்தியா வல்லுறவு தேசமே!
தொடர்புடைய பதிவுகள்:
- The rapes that India forgot - BBC
- The Hindu - What they said!
- ‘Muslims, They Don’t Deserve To Live’ - Ashish Khetan (Tehelka)
- Channel4 Interview - Arundhati roy on Delhi rape protests
- NCRB crime data - Crime Against Women 2011
- NCRB crime data - Snapshots from 1953-2011
- NCRB crime data - Victims of Rape 2011
- Wikipedia : Sociobiological theories of rape
- Wikipedia : Thangjam Manorama
- Wikipedia : Armed Forces Special Powers Act, 1958
- Wikipedia : Religious violence in Orissa
No comments:
Post a Comment