Sunday, September 8, 2013

இந்திய அரசு உங்களை வேவு பார்க்கிறது!

நமது நாட்டில் இணைய சேவையை பயன்படுத்தும் 16 கோடி மக்களையும் இந்திய அரசு உளவு பார்க்கிறது. உலகிற்கு ‘ஜனநாயகத்தை’ ஏற்றுமதி செய்யும் அமெரிக்காவின் யோக்கியதை சில மாதங்களுக்கு முன்னர் தான் அம்பலமானது. தனிநபர் சுதந்திரத்தை பேணுவதாக சொல்லும் அமெரிக்கா தனது சொந்த மக்களை வேவு பார்த்து வந்ததை எட்வர்டு ஸ்னோடென் என்ற இளைஞர் ஆதாரங்களுடன் உலகிற்கு தெரியப்படுத்தினார். பயங்கரவாத அச்சுறுத்தல் என்ற பெயரில் தனக்கு விசுவாசமான நாடுகள் உட்பட அனைத்து நாட்டு அரசுகளையும் ஒட்டு கேட்டு அமெரிக்கா உளவு பார்த்து  வந்துள்ளது.
ஏற்கனவே இந்தியாவிலும் நமக்கு தெரியாமல் சி-டாட்(C-DoT) என்ற தொலைதொடர்பு மேம்பாட்டு மையம் ‘லிம்’ (LIM - Lawful Intercept and Monitoring systems) அதாவது சட்டப்பூர்வ இடைமறிப்பு மற்றும் கண்காணிப்பு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் பொது மக்களின் வலை உலாவல், ஸ்கைப், மின்னஞ்சல்கள் உட்பட அனைத்து இணைய நடவடிக்கைகளும் உளவு பார்க்கப்பட்டு வருகிறது.

மொபைல் ஆபரேட்டர்களும் இந்திய டெலிகிராப் சட்டம் பிரிவு 5(2) 419(A) விதிகளின்படி 'லிம்' போன்ற கண்காணிப்பகங்களை நிறுவியுள்ளன. இதன் மூலம் அரசு தொலைபேசி அழைப்புகளை சட்டப்படி ஒட்டுகேட்க அனுமதிக்கின்றன. மேலும் இணைய சேவை வழங்கிகளின் இணைய நுழைவாயில்களில் (Internet Gateways) ‘லிம்’ கண்காணிப்பகங்களை நிறுவி அனைத்து இணைய நடவடிக்கைகளையும் அரசு இரகசியமாக உளவு பார்க்கிறது.

அரசு நிர்ணயித்துள்ள கண்காணிப்பு விதிகள்:
  • இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் ஒவ்வொன்றும் கண்காணிப்பு அலுவலர்களை நியமிக்க வேண்டும்.
  • இந்த அலுவலர்கள் 24 மணிநேரமும் அணுகும் வகையில் இருக்க வேண்டும்.
  • மாதம் இருமுறை அலுவலர்கள் அரசுடன் இணைந்து மீளாய்வு கூட்டங்களை நடத்த வேண்டும்.
  • அரசின் கண்காணிப்பு நடவடிக்கைகளை ஒவ்வொன்றும் நம்பத்தகுந்தவையா என ஆராய வேண்டும்.

எனினும் நடைமுறையில் இந்த விதிகள் பின்பற்றப்படுவதில்லை. அரசு இந்த விதிகளை மீறுகிறது. இணைய சேவை வழங்கிகளின் முதற்கட்ட சரிபார்ப்புகள் நடைபெறுவதில்லை. பயனர்களின் இணைய நடவடிக்கைகள் அனைத்தும் அரசுக்கு தங்குதடை இல்லாமல் கிடைக்கிறது.

இந்திய அரசு ‘லிம்’ போன்ற மென்பொருட்கள் மூலம் நேரடியாக கட்டளைகளை அனுப்புகிறது. யாருக்கும் எந்த அறிவிப்பு செய்யாமல் இணைய போக்குவரத்து தகவல்களை எடுத்து கொள்கிறது. ஐ.பி முகவரிகள், இணைய முகவரிகள், மின்னஞ்சல்கள் கண்காணிக்கப்படுகின்றன. அது மட்டுமல்லாமல் முக்கிய சொற்றொடர்களை பயன்படுத்தி இணைய போக்குவரத்து முழுவதையும் கண்காணிக்கிறது. நீதிமன்றங்கள், இணைய சேவை வழங்கிகள் உட்பட யாருடைய அனுமதியும் இல்லாமல் இணைய போக்குவரத்துகளை கண்காணிக்கிறது. உள்துறை அமைச்சகம், ரா, ஐபி போன்ற அமைப்புகளுக்கு இந்த கண்காணிப்பு வசதிகள் உள்ளன.

இப்படி மக்களின் தொலைபேசி மற்றும் இணைய பயன்பாட்டை உளவு பார்க்கும் அரசின் நடவடிக்கையானது மக்களின் சுதந்திரம், கருத்துரிமை ஆகியவற்றை நசுக்குகிறது என 'மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு' (Human Rights Watch) கூறுகிறது.

தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாகவே மக்களை கண்காணிப்பதாக அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் சொல்கின்றன. தீவிரவாத அச்சுறுத்தல் தான் காரணம் என்றால் 16 கோடி மக்களின் இணைய போக்குவரத்துகளையும், 86 கோடி மக்களின் தொலைபேசி அழைப்புகளையும் கண்காணிக்கும் நோக்கம் இந்தியாவிற்கு ஏன் வந்தது?

உலகமெங்கும் உள்ள மக்கள் தங்களின் வாழ்வாதாரங்களை அழித்து, மக்களை நசுக்கும் அரசுகளை எதிர்த்து தன்னெழுச்சியாக போராடி வருகிறார்கள். அரபு நாடுகளில், 'அரபு வசந்தம்' என்றழைக்கப்படும் தொடர்ச்சியான போராட்டங்கள் நடந்து வருகிறது. 'வால் வீதி' ஆக்ரமிப்பு போராட்டங்களுக்கு பின்னர் அதே பாணியில் அமெரிக்கா, ஐரோப்பா நகரங்களில் போராட்டங்கள் பரவின. தீவிரவாத அச்சுறுத்தல்களை விட மக்கள் போராட்டங்களை கண்டே மக்கள் விரோத அரசுகள் அஞ்சுகின்றன. எனவே தனது சொந்த நாட்டின் மக்கள் ஒவ்வொருவரையும் கண்காணிக்கிறது.

சிறு தீயை அணைக்கலாம். ஆனால் எரிமலையை அடக்க முடியுமா என்ன?

தொடர்புடைய பதிவுகள்:

No comments: