நம் வீடுகளை அலங்கரிக்கும்
மின் விளக்குகளை கண்டுபிடித்தது தாமஸ் ஆல்வா எடிசன் என எல்லோருக்கும் தெரியும். மின்சார
சக்தியில்லாமல் இருண்ட வீடுகளை பிரகாசிக்க செய்யும் விளக்குகளை அல்பிரெடோ மோசர் கண்டுபிடித்துள்ளார்.
பிலிப்பைன்ஸ், பிரேசில், வங்காளதேசம் உட்பட 15 நாடுகளில் மோசர் விளக்குகள் பொருத்தி
பல இலட்சக்கணக்கான ஏழை மக்கள் பயனடைந்துள்ளனர். இந்தியாவிலும் சில இடங்களில் மோசர்
விளக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதை தயார் செய்வது
மிக எளிமையானது. தண்ணீர் நிறைக்கப்பட்ட போத்தல்களில் 'ப்ளீச்சிங் பவுடர்' எனப்படும்
வெளுப்புக் காரத்தினை இரண்டு தேக்கரண்டி சேர்த்து கொள்ள வேண்டும். பின்னர் வீட்டின் கூரை யில்
துளையிட்டு பாலியஸ்டர் பிசினை பூசி பொருத்த வேண்டும். அவ்வளவு தான், மோசர் விளக்குகள் தயார். மோசர் விளக்குகளை
செய்வதற்கு தேவையான பொருட்கள் மிக எளிமையானவை. அதனால் இதை செய்வதற்கு குறைந்த செலவே
ஆகிறது. வெளுப்புக் காரத்தினை கலப்பதால் தண்ணீர் பாசி
பிடிக்காமல் இருக்கும். மேலும் பாலியஸ்டர் பிசினை பூசுவதால் மழை பெய்தாலும் ஒழுகாமல்
இருக்கும்.
மோசர் விளக்கு - அறிவியல் விளக்கம்:
- ஒளிக்கதிர் செல்லும் ஊடகத்தின் அடர்த்தி மாறும்போது ஒளியின் வேகம் மாற்றமடைந்து, ஒளியின் திசை விலகுகிறது. இது ஒளிவிலகல் எனப்படும்.
- மோசர் விளக்குகளில், தண்ணீர் நிறைக்கப்பட்ட போத்தல்கள் சூரிய ஒளியை உள்வாங்கி அறை முழுதும் பிரகாசிக்க செய்கிறது.
இந்த எளிமையான
விளக்கினை கண்டுபிடித்தவர் ஒரு தொழிலாளி. அல்பிரெடோ மோசர் பிரேசில் நாட்டில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். 2002ஆம் ஆண்டில் பிரேசிலில் ஏற்பட்ட கடுமையான மின்வெட்டின் காரணமாக
பகற்பொழுதிலும் வீடுகள் இருண்டிருந்தன. பெரிய பன்னாட்டு தொழிற்சாலைகளுக்கு மட்டும்
மின்சாரம் கொடுக்கப்பட்டது. ஏழைகளுக்கு எப்போதும் மின்தடை தான். (இப்போது நம் நாட்டிலும்
இதே நிலைமை தான்.) அப்போது ஏற்பட்ட உந்துதலினால் இந்த தண்ணீர் போத்தல் விளக்கினை கண்டுபிடித்தார்
அல்பிரெடோ மோசர். சோதனை முயற்சியாக தனது வீட்டில் பொருத்திப் பார்த்தார். நன்றாக வெளிச்சம்
தந்தது. பின்னர் சுற்றுவட்டாரங்களிலுள்ள வீடுகளுக்கும் பொருத்தினார். விளக்கினை பொருத்தும்
கூலி யை மட்டுமே பெற்றுக் கொண்டார்.
இதை வடிவமைக்க
வரைபடங்களை தயாரிக்கவில்லை. முன்னர் வேலை செய்யும் போது நண்பர்களுடன் விவாதிக்கையில்
தண்ணீர் போத்தல்கள் மூலம் சூரிய ஒளிகதிர்களை குவித்து நெருப்பு உண்டாக்க முடியும் எனத்
தெரிந்து கொண்டார். பின்னர் பிரேசில் நாட்டில் ஏற்பட்ட மின்தடையின் போது பரிசோதனை செய்து
தண்ணீர் போத்தல் விளக்கினை கண்டுபிடித்தார். இதன் மூலம் 40 முதல் 60 வாட்ஸ் வரை வெளிச்சம்
கிடைக்கும். இதைப் பற்றி அவரிடம் கேட்டால், ‘இறைவன் கொடுத்த சூரியன் அனைவருக்கும் பொதுவானது.
யாருக்கு தேவையானாலும் பணத்தை மிச்சப் படுத்தலாம். குறைவாகவே செலவாகும்.’
இவரது கண்டுபிடிப்பை
கேள்விப்பட்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் ‘மைஷெல்டர்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம்
2011ஆம் ஆண்டு முதல் பிலிப்பைன்ஸ் வீடுகளில் மோசர் விளக்குகளை பொருத்தி வருகிறது. பிலிப்பைன்ஸில்
மட்டும் ஏறத்தாழ 1,40,000 வீடுகள் பயனடைந்துள்ளன.
ஒருவேளை, இந்த
விளக்கினை பெரும் நிறுவனங்கள் கண்டுபிடித்திருந்தால் காப்புரிமை என்ற பெயரில் இலாபமீட்டியிருப்பார்கள்.
ஆனால் தொழிலாளியான மோசர் இந்த கண்டுபிடிப்பின் மூலம் பெரும்பணமீட்டவோ, புகழடையவோ விரும்பவில்லை.
மாறாக இன்றும் எளிமையாகவே உழைத்து வாழ்கிறார். ஏழைகளின் குடிசைகளில் ஒளி விளக்காக மிளிர்கிறார்.
No comments:
Post a Comment