Sunday, February 16, 2014

தமிழை வழிபாட்டு மொழியாக்க வேண்டும் - தில்லை மாநாடு (பத்திரிக்கை செய்தி)

தில்லை கோவில் மீட்பு மற்றும் ஆலயத் தீண்டாமை ஒழிப்பு மாநாடு 2014, பிப்ரவரி 16இல் சிதம்பரத்தில் நடந்தது. அதைப் பற்றிய தினமணி பத்திரிக்கை செய்தி.

அனைத்து கோயில்களிலும் தமிழை வழிபாட்டு மொழியாக்க வேண்டும்: தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் தீர்மானம்:

தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் சமஸ்கிருதம் முற்றிலும் தடை செய்யப்பட்டு தமிழ் மட்டுமே வழிபாட்டு மொழியாக்கப்பட வேண்டும் என தமிழகஅரசை வலியுறுத்தி சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆலயத் தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

சிதம்பரம் ஜி.எம்.வாண்டையார் மண்டபத்தில் மனித உரிமை பாதுகாப்பு மையம், விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகள் சார்பில் தில்லைக் கோவில் மீட்பு மற்றும் ஆலயத் தீண்டாமை ஒழிப்பு மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மனித உரிமை பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சி.ராஜூ தலைமை வகித்தார். மாநாட்டில் முன்னாள் அமைச்சர் வி.வி.சுவாமிநாதன் பங்கேற்று வாழ்த்துரையாற்றினார். அவர் பேசியது: தமிழ்நாட்டில் ஆதிகாலத்தில் இருந்தே தமிழில்தான் வழிபாடு இருந்து உள்ளது. பானபட்டருக்கு இறைவன் தமிழில்தான் கடிதம் எழுதியுள்ளார். மாணிக்கவாசகர் காலத்தில் இலங்கை மன்னன் மக்களை அடிமைத்தனமாக வைத்திருந்தான். தில்லைக்கு வந்து அந்த இலங்கை மன்னன் மகளின் ஊமையை திருவாசகம் பாடலை பாடி பேச செய்துள்ளார்.

குமரகுருபரர், அருணகிரி, மாணிக்கவாசகர், அப்பர், சுந்தரர் ஆகியோர் தமிழில்தான் பாடியுள்ளனர்.  கிபி 400-ம் ஆண்டுக்கு முன்பு சிங்கவர்மன் மன்னனால் கோயிலில் பூஜைகள் செய்யவே வரவழைக்கப்பட்டவர்கள் தீட்சிதர்கள் என கல்வெட்டு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னன் கட்டிய கோயில் எப்படி தீட்சிதர்களுக்கு சொந்தமாகும். பல ஆயிரம் கோடிக்கான நகைகள் மற்றும் நிலங்களை யார் பாதுகாப்பது. எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பு மாற்றப்பட வேண்டியதாகும் என வி.வி.சுவாமிநாதன் தெரிவித்தார்.

மாநாட்டில் குமுடிமூலை சிவனடியார் இ.ஆறுமுகசாமி, அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவர் சி.மதியழகன், சைவ சமய அர்ச்சகர் பயிற்சி நிலைய தலைமை ஆசிரியர் மு.சொக்கப்பன், மார்க்சிய பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி மாவட்டச் செயலாளர் வாலாசா வல்லவன், உயர்நீதிமன்ற வழக்குரைஞர் ரா.சகாதேவன், வழக்குரைஞர் வாஞ்சிநாதன், மக்கள் கலை இலக்கியக்கழக மாநில பொதுச்செயலாளர் மருதையன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். வழக்குரைஞர் சி.செந்தில் நன்றி கூறினார்.

தீர்மானங்கள்: 
தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில் வருமானங்களையும், கோயில் பராமரிப்பு பணிக்கு போக மீதிஉள்ள தொகையை, அந்தந்த ஊர்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தும் வகையில் சட்டதிருத்தம் கொண்டு வர வேண்டும், நடராஜர் கோயில் நிர்வாகத்தை அறநிலையத்துறை மேற்கொள்ள தமிழக சட்டப்பேரவையில் தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என தமிழகஅரசை கோருவது, நடராஜர் கோயிலில் அடைத்து வைக்கப்பட்டுள்ள நந்தன் நுழைந்த தீண்டாமை சுவரை அகற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடர்புடைய பதிவுகள்:

No comments: