Sunday, September 8, 2013

இந்திய அரசு உங்களை வேவு பார்க்கிறது!

நமது நாட்டில் இணைய சேவையை பயன்படுத்தும் 16 கோடி மக்களையும் இந்திய அரசு உளவு பார்க்கிறது. உலகிற்கு ‘ஜனநாயகத்தை’ ஏற்றுமதி செய்யும் அமெரிக்காவின் யோக்கியதை சில மாதங்களுக்கு முன்னர் தான் அம்பலமானது. தனிநபர் சுதந்திரத்தை பேணுவதாக சொல்லும் அமெரிக்கா தனது சொந்த மக்களை வேவு பார்த்து வந்ததை எட்வர்டு ஸ்னோடென் என்ற இளைஞர் ஆதாரங்களுடன் உலகிற்கு தெரியப்படுத்தினார். பயங்கரவாத அச்சுறுத்தல் என்ற பெயரில் தனக்கு விசுவாசமான நாடுகள் உட்பட அனைத்து நாட்டு அரசுகளையும் ஒட்டு கேட்டு அமெரிக்கா உளவு பார்த்து  வந்துள்ளது.
ஏற்கனவே இந்தியாவிலும் நமக்கு தெரியாமல் சி-டாட்(C-DoT) என்ற தொலைதொடர்பு மேம்பாட்டு மையம் ‘லிம்’ (LIM - Lawful Intercept and Monitoring systems) அதாவது சட்டப்பூர்வ இடைமறிப்பு மற்றும் கண்காணிப்பு திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் பொது மக்களின் வலை உலாவல், ஸ்கைப், மின்னஞ்சல்கள் உட்பட அனைத்து இணைய நடவடிக்கைகளும் உளவு பார்க்கப்பட்டு வருகிறது.

மொபைல் ஆபரேட்டர்களும் இந்திய டெலிகிராப் சட்டம் பிரிவு 5(2) 419(A) விதிகளின்படி 'லிம்' போன்ற கண்காணிப்பகங்களை நிறுவியுள்ளன. இதன் மூலம் அரசு தொலைபேசி அழைப்புகளை சட்டப்படி ஒட்டுகேட்க அனுமதிக்கின்றன. மேலும் இணைய சேவை வழங்கிகளின் இணைய நுழைவாயில்களில் (Internet Gateways) ‘லிம்’ கண்காணிப்பகங்களை நிறுவி அனைத்து இணைய நடவடிக்கைகளையும் அரசு இரகசியமாக உளவு பார்க்கிறது.

அரசு நிர்ணயித்துள்ள கண்காணிப்பு விதிகள்:
  • இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் ஒவ்வொன்றும் கண்காணிப்பு அலுவலர்களை நியமிக்க வேண்டும்.
  • இந்த அலுவலர்கள் 24 மணிநேரமும் அணுகும் வகையில் இருக்க வேண்டும்.
  • மாதம் இருமுறை அலுவலர்கள் அரசுடன் இணைந்து மீளாய்வு கூட்டங்களை நடத்த வேண்டும்.
  • அரசின் கண்காணிப்பு நடவடிக்கைகளை ஒவ்வொன்றும் நம்பத்தகுந்தவையா என ஆராய வேண்டும்.

எனினும் நடைமுறையில் இந்த விதிகள் பின்பற்றப்படுவதில்லை. அரசு இந்த விதிகளை மீறுகிறது. இணைய சேவை வழங்கிகளின் முதற்கட்ட சரிபார்ப்புகள் நடைபெறுவதில்லை. பயனர்களின் இணைய நடவடிக்கைகள் அனைத்தும் அரசுக்கு தங்குதடை இல்லாமல் கிடைக்கிறது.

இந்திய அரசு ‘லிம்’ போன்ற மென்பொருட்கள் மூலம் நேரடியாக கட்டளைகளை அனுப்புகிறது. யாருக்கும் எந்த அறிவிப்பு செய்யாமல் இணைய போக்குவரத்து தகவல்களை எடுத்து கொள்கிறது. ஐ.பி முகவரிகள், இணைய முகவரிகள், மின்னஞ்சல்கள் கண்காணிக்கப்படுகின்றன. அது மட்டுமல்லாமல் முக்கிய சொற்றொடர்களை பயன்படுத்தி இணைய போக்குவரத்து முழுவதையும் கண்காணிக்கிறது. நீதிமன்றங்கள், இணைய சேவை வழங்கிகள் உட்பட யாருடைய அனுமதியும் இல்லாமல் இணைய போக்குவரத்துகளை கண்காணிக்கிறது. உள்துறை அமைச்சகம், ரா, ஐபி போன்ற அமைப்புகளுக்கு இந்த கண்காணிப்பு வசதிகள் உள்ளன.

இப்படி மக்களின் தொலைபேசி மற்றும் இணைய பயன்பாட்டை உளவு பார்க்கும் அரசின் நடவடிக்கையானது மக்களின் சுதந்திரம், கருத்துரிமை ஆகியவற்றை நசுக்குகிறது என 'மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு' (Human Rights Watch) கூறுகிறது.

தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாகவே மக்களை கண்காணிப்பதாக அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் சொல்கின்றன. தீவிரவாத அச்சுறுத்தல் தான் காரணம் என்றால் 16 கோடி மக்களின் இணைய போக்குவரத்துகளையும், 86 கோடி மக்களின் தொலைபேசி அழைப்புகளையும் கண்காணிக்கும் நோக்கம் இந்தியாவிற்கு ஏன் வந்தது?

உலகமெங்கும் உள்ள மக்கள் தங்களின் வாழ்வாதாரங்களை அழித்து, மக்களை நசுக்கும் அரசுகளை எதிர்த்து தன்னெழுச்சியாக போராடி வருகிறார்கள். அரபு நாடுகளில், 'அரபு வசந்தம்' என்றழைக்கப்படும் தொடர்ச்சியான போராட்டங்கள் நடந்து வருகிறது. 'வால் வீதி' ஆக்ரமிப்பு போராட்டங்களுக்கு பின்னர் அதே பாணியில் அமெரிக்கா, ஐரோப்பா நகரங்களில் போராட்டங்கள் பரவின. தீவிரவாத அச்சுறுத்தல்களை விட மக்கள் போராட்டங்களை கண்டே மக்கள் விரோத அரசுகள் அஞ்சுகின்றன. எனவே தனது சொந்த நாட்டின் மக்கள் ஒவ்வொருவரையும் கண்காணிக்கிறது.

சிறு தீயை அணைக்கலாம். ஆனால் எரிமலையை அடக்க முடியுமா என்ன?

தொடர்புடைய பதிவுகள்:

Monday, August 26, 2013

மோசர் விளக்கு - தொழிலாளியின் கண்டுபிடிப்பு



நம் வீடுகளை அலங்கரிக்கும் மின் விளக்குகளை கண்டுபிடித்தது தாமஸ் ஆல்வா எடிசன் என எல்லோருக்கும் தெரியும். மின்சார சக்தியில்லாமல் இருண்ட வீடுகளை பிரகாசிக்க செய்யும் விளக்குகளை அல்பிரெடோ மோசர் கண்டுபிடித்துள்ளார். பிலிப்பைன்ஸ், பிரேசில், வங்காளதே­சம் உட்பட 15 நாடுகளில் மோசர் விளக்குகள் பொருத்தி பல இலட்சக்கணக்கான ஏழை மக்கள் பயனடைந்துள்ளனர். இந்தியாவிலும் சில இடங்களில் மோசர் விளக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதை தயார் செய்வது மிக எளிமையானது. தண்ணீர் நிறைக்கப்பட்ட போத்தல்களில் 'ப்ளீச்சிங் பவுடர்' எனப்படும் வெளுப்புக் காரத்தினை இரண்டு தேக்கரண்டி சேர்த்து கொள்ள வேண்டும். பின்னர் வீட்டின் கூரை யில் துளையிட்டு பாலியஸ்டர் பிசினை பூசி பொருத்த வேண்டும். அவ்வளவு தான், மோசர் விளக்குகள் தயார். மோசர் விளக்குகளை செய்வதற்கு தேவையான பொருட்கள் மிக எளிமையானவை. அதனால் இதை செய்வதற்கு குறைந்த செலவே ஆகிறது. வெளுப்புக் காரத்தினை கலப்பதால் தண்ணீர் பாசி பிடிக்காமல் இருக்கும். மேலும் பாலியஸ்டர் பிசினை பூசுவதால் மழை பெய்தாலும் ஒழுகாமல் இருக்கும்.

மோசர் விளக்கு - அறிவியல் விளக்கம்:

  • ஒளிக்கதிர் செல்லும் ஊடகத்தின் அடர்த்தி மாறும்போது ஒளியின் வேகம் மாற்றமடைந்து, ஒளியின் திசை விலகுகிறது.  இது ஒளிவிலகல் எனப்படும்.
  • மோசர் விளக்குகளில், தண்ணீர் நிறைக்கப்பட்ட போத்தல்கள் சூரிய ஒளியை உள்வாங்கி அறை முழுதும் பிரகாசிக்க செய்கிறது. 


இந்த எளிமையான விளக்கினை கண்டுபிடித்தவர் ஒரு தொழிலாளி. அல்பிரெடோ மோசர் பிரேசில் நாட்டில் மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார். 2002ஆம் ஆண்டில் பிரேசிலில் ஏற்பட்ட கடுமையான மின்வெட்டின் காரணமாக பகற்பொழுதிலும் வீடுகள் இருண்டிருந்தன. பெரிய பன்னாட்டு தொழிற்சாலைகளுக்கு மட்டும் மின்சாரம் கொடுக்கப்பட்டது. ஏழைகளுக்கு எப்போதும் மின்தடை தான். (இப்போது நம் நாட்டிலும் இதே நிலைமை தான்.) அப்போது ஏற்பட்ட உந்துதலினால் இந்த தண்ணீர் போத்தல் விளக்கினை கண்டுபிடித்தார் அல்பிரெடோ மோசர். சோதனை முயற்சியாக தனது வீட்டில் பொருத்திப் பார்த்தார். நன்றாக வெளிச்சம் தந்தது. பின்னர் சுற்றுவட்டாரங்களிலுள்ள வீடுகளுக்கும் பொருத்தினார். விளக்கினை பொருத்தும் கூலி யை மட்டுமே பெற்றுக் கொண்டார்.

இதை வடிவமைக்க வரைபடங்களை தயாரிக்கவில்லை. முன்னர் வேலை செய்யும் போது நண்பர்களுடன் விவாதிக்கையில் தண்ணீர் போத்தல்கள் மூலம் சூரிய ஒளிகதிர்களை குவித்து நெருப்பு உண்டாக்க முடியும் எனத் தெரிந்து கொண்டார். பின்னர் பிரேசில் நாட்டில் ஏற்பட்ட மின்தடையின் போது பரிசோதனை செய்து தண்ணீர் போத்தல் விளக்கினை கண்டுபிடித்தார். இதன் மூலம் 40 முதல் 60 வாட்ஸ் வரை வெளிச்சம் கிடைக்கும். இதைப் பற்றி அவரிடம் கேட்டால், ‘இறைவன் கொடுத்த சூரியன் அனைவருக்கும் பொதுவானது. யாருக்கு தேவையானாலும் பணத்தை மிச்சப் படுத்தலாம். குறைவாகவே செலவாகும்.’

இவரது கண்டுபிடிப்பை கேள்விப்பட்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் ‘மைஷெல்டர்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் 2011ஆம் ஆண்டு முதல் பிலிப்பைன்ஸ் வீடுகளில் மோசர் விளக்குகளை பொருத்தி வருகிறது. பிலிப்பைன்ஸில் மட்டும் ஏறத்தாழ 1,40,000 வீடுகள் பயனடைந்துள்ளன.

ஒருவேளை, இந்த விளக்கினை பெரும் நிறுவனங்கள் கண்டுபிடித்திருந்தால் காப்புரிமை என்ற பெயரில் இலாபமீட்டியிருப்பார்கள். ஆனால் தொழிலாளியான மோசர் இந்த கண்டுபிடிப்பின் மூலம் பெரும்பணமீட்டவோ, புகழடையவோ விரும்பவில்லை. மாறாக இன்றும் எளிமையாகவே உழைத்து வாழ்கிறார். ஏழைகளின் குடிசைகளில் ஒளி விளக்காக மிளிர்கிறார்.

தொடர்புடைய பதிவுகள்:

Monday, July 29, 2013

இறுதி தீர்வு - படமும் பாடமும்

ராகேஷ் சர்மாவின் "இறுதி தீர்வு" என்ற படத்தை பார்த்தேன். இது குஜராத் படுகொலை பற்றிய படம் என ஏற்கனவே அறிந்திருந்தேன். இதில் என்ன தான் தீர்வு சொல்லப்பட்டிருக்கும் என படத்தை பார்த்தேன். ஆரம்பத்தில் இந்த படத்தை திரையிட தடை இருந்தது. குஜராத் படுகொலை பற்றிய படம் மற்றும் படத்திற்கு தடை என்றவுடன் படத்தில் வன்முறை காட்சிகள் இருக்குமோ என்றே நினைத்திருந்தேன். ஆனால் அதற்கு மாறாக படத்தில் ஒரு இடத்தில் கூட வன்முறை காட்சிகள் இடம் பெறவில்லை. குஜராத் படுகொலை நடந்த இடங்களுக்கு நேரில் சென்று பதிவு செய்திருக்கிறார் ராகேஷ் சர்மா.

வன்முறை காட்சிகள் இல்லாவிட்டாலும் படத்தில் எடுத்துரைக்கப்பட்ட அனுபவங்கள் நெஞ்சை உலுக்குவதாக இருக்கிறது. படத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்லாமல் இந்து மதவெறியர்களின் பேட்டிகள் அவர்களின் துவேஷ பிரச்சாரங்களையும் பதிவு செய்கிறார். அவர்களின் பேட்டிகளினூடாக குஜராத் படுகொலை நடந்த இடங்களினூடாக நம்மையும் பயணிக்க செய்கிறார்.

குறிப்பாக அந்த படத்தின் ஆரம்பத்திலும், முடிவிலும் யுகேஜி படிக்கும் சிறுவனின் பேட்டி இருக்கும். படத்தின் முடிவில் வரும் பேட்டியின் சுருக்கத்தை பார்ப்போம்.

கேள்வி: பெரியவனான பிறகு என்ன ஆவாய்?

இஜாஸ்: சோல்ஜராவேன்! பிறகு அவர்களைச் சுடுவேன்!

கே: யாரை?

இ: இந்துக்களை!

கே: ஏன்?

இ: ஏன்னா, அவர்களும் இதைத்தான் செய்தார்கள்!

கே: நான் ஒரு இந்து. நான் மோசமானவன்னு நெனக்கிறியா?

இ: (யோசித்து) இல்லை.

கே: நீ ஒரு சோல்ஜர். என்னைக் கொல்லணுமல்லவா?

இ: (தலையசைத்து) ஆமா, நா வேற யாரையும் தாக்க மாட்டேன். இந்துக்களை மட்டும்தான் கொல்வேன்.

கே: சரி! நா ஒரு இந்து.

இ: இல்லை. நீங்கள் அவர்களில்லை.

கே: நான் அவர்களைப் போல இல்லையா?

கேள்வி: அப்புறம்?

இஜாஸ்: நீங்கள் ஒரு முசுலீம்.

அந்த குழந்தையைப் பொருத்த வரையில் இந்துக்கள் என்றால் கெட்டவர்கள் அதனாலேயே ராகேஷ் சர்மாவை நல்லவர் என்கிறான். தன் குடும்பத்தினரை கொலை செய்த மதவெறியர்களை தண்டிக்க வேண்டும் என நினைக்கிறான். சோல்ஜராகி இந்து மதவெறியர்களை கொல்லும் நோக்கம் எப்படி உருவானது என்பது படத்தின் துவக்கத்தில் இஜாஸின் பேட்டியில் வருகிறது.

இஜாஸ்: நான் இஜாஸ். யுகேஜியில் படிக்கிறேன். சமன்பூரை எரித்தார்கள். அதற்கு பின்னர் நான் இங்கு வந்து விட்டேன். அங்கு எல்லோரையும் வெட்டி கொன்றார்கள்.

கேள்வி: நீ அதை பார்த்தாயா?

இ: ஆம். எல்லோரையும் வெட்டினார்கள். அவர்கள் வாள் கொண்டு தாக்கினார்கள். என் தாத்தா வையும், சித்தியையும் வெட்டி கொன்றார்கள். தாத்தாவை காப்பாற்ற முயன்ற போது என் அப்பாவின் இரண்டு விரல்கள் துண்டாகி போனது. பெண்களை நிர்வாணப்படுத்தி பின்னர் வெட்டி கொன்றார்கள்.

கே: உனக்கு முன்பாக செய்தார்களா?

இ: ஆமாம். என் சித்தியையும் அப்படிதான் கொன்றார்கள்.

கே: யார் இதை செய்தது

இ: இந்துக்கள்

இவ்வாறு தன் கண் முன்னர் தனது குடும்பத்தினரையும் ஊர்க்காரர்களையும் வெட்டி கொன்றதால் தான் இஜாஸுக்கு இத்தனை கோபம். இந்து மதவெறியர்களை கொல்ல வேண்டும் என்கிறான். இதைப்போல் பாதிக்கப்பட்டது இஜாஸ் மட்டுமல்ல. இஜாஸை போன்று ஆயிரமாயிரம் சிறார்கள். வரலாற்றை மறந்தால் மீண்டும் மீண்டும் நாம் மதக்கலவர பூமியாக்கப்படுவோம்.

(Those who forget history are condemned to relive it! - George Santayana)
வரலாற்றை மறப்பவர்கள் மீண்டும் அதையே அனுபவிப்பார்கள்
- ஜார்ஜ் சந்தாயனா

குஜராத் படுகொலை நடந்து பதினொரு ஆண்டுகள் முடிந்து விட்டன. மறுபடியும் விஷப்பாம்புகள் தலை தூக்க ஆரம்பித்துள்ளன. ஆட்சியை பிடிக்க ஆங்காங்கே கலவரங்களை தூண்டவும் மத மோதலை உருவாக்க இந்து மதவெறியர்கள் விதவிதமாக வதந்திகளை பரப்பி வருகிறார்கள். உண்மைகளை அறிந்து கொள்ள இவர்களால் ஏற்பட்ட கடந்த கால சோதனைகளை நாம் தெரிந்து கொள்வது அவசியம்.

ஆயிரக்கணக்கானோரை கொன்று, பெண்களை வல்லுறவு செய்து, இலட்சக்கணக்கான முசுலீம்களின் வாழ்வாதாரங்களை அழித்த மதவெறியர்களை தனிமைப்படுத்துவோம். அரசியலில் ஆதாயம் பெறுவதற்கு மக்களை மத அடிப்படையில் பிரித்திட நினைக்கும் மதவெறியர்களை புறக்கணிப்போம்.

ஆயிரக்கணக்கில் நடந்த குஜராத் படுகொலையில் சொற்பமானவையே நீதிமன்றங்களில் வழக்குகளாக எடுத்து செல்லப்பட்டன. அவற்றிலும் பல வழக்குகளில் குற்றவாளிகளை விடுவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய நீதித்துறையினால் நியாயம் கிடைக்கவில்லை. குஜராத் படுகொலை செய்த இந்து மதவெறியர்களை அம்பலபடுத்தி அவர்களின் துவேஷ பிரச்சாரங்களை முளையிலே கிள்ளி எறிவோம். இனியொரு மதக்கலவரம் வராமல் தடுப்போம்.

ராகேஷ் சர்மாவிடம், அந்த குழந்தை இஜாஸ் கூறியது போல் நீங்கள் நல்லவர்களா? அல்லது மதவெறியர்களின் கொடூரங்களை வேடிக்கை பார்ப்பவர்களா? நீங்களே முடிவு செய்யுங்கள்.


தொடர்புடைய பதிவுகள்:

Monday, February 18, 2013

ஆரன் ஸ்வார்ட்ஸ் அறிக்கை: அறிவுசார் களஞ்சியங்களை மீட்டெடுப்போம்!

ஆரன் ஸ்வார்ட்ஸ் சிறு வயது முதலே கணினி மற்றும் இணையத்தில் ஆர்வமிக்கவராக இருந்தார். பதின் வயதுகளிலேயே ஆர்.எஸ்.எஸ் தொழில்நுட்பம் உட்பட பல சாதனைகளை செய்து காட்டினார். ரெட்டிட் என்ற வலைதளத்திற்கு பெரும்பங்காற்றினார். இளம்வயதிலேயே கணினி மற்றும் இணைய நிபுணராக திகழ்ந்தார். அவர் இணைய போராளியாகவும் இருந்தார். குறிப்பாக அமெரிக்காவின் "சோப்பா" எனப்படும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பயன்படும், இணைய கட்டுப்பாட்டு சட்டத்தை எதிர்த்து போராடி வெற்றி பெற்றதில் சிறப்பான பங்காற்றினார்.

அரசின் கொடூர சட்டங்களை எதிர்த்து போராடிய ஆரன் ஸ்வார்ட்ஸ், 2013 ஜனவரி 11ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். மசாசூசட்ஸ் பல்கலைகழகம் மற்றும் கார்ப்பரேட் கம்பெனிகளின் நிர்பந்தங்களும், அமெரிக்காவின் கருப்பு சட்டங்களின் அச்சுறுத்தல்களுமே அவரது தற்கொலைக்கு காரணம்.

அறிவுசார் பொக்கிசங்களை கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து மீட்டெடுக்க 2008ஆம் ஆண்டு கொரில்லா அறிக்கை என்ற தலைப்பில் ஒரு அறிக்கை எழுதினார். அவ்வறிக்கையுன் மொழியாக்கம்:

மனித அறிவு செல்வத்தின் ஆற்றல் மகத்தானது. அனைத்து செல்வங்களையும் போன்று மனித குலத்தின் அறிவு செல்வங்களையும், கார்ப்பரேட் நிறுவனங்கள் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். பன்னெடுங்காலங்களாக பல நாட்டு விஞ்ஞானிகள், அறிஞர்களின் உழைப்பால் கிடைத்த கலாச்சார மற்றும் அறிவியல் தகவல்களை இந்நிறுவனங்கள் ஆவணப்படுத்துகிறார்கள். ஆனால் அவற்றை பிறருக்கு கிடைக்காத வண்ணம் தடுத்து வருகிறார்கள். நீங்கள் அறிவியல் ஆய்வு கட்டுரைகளையும், சிறப்பான ஆவணங்களையும் படிக்க விரும்புகிறீர்களா? அப்படியானால், ரீட் எல்சேவியர் போன்ற நிறுவனங்களுக்கு பெருமளவிலான பணம் கட்ட வேண்டும்.

இந்த இழிநிலையை மாற்ற சிலர் போராடி வருகின்றனர். காப்புரிமை என்ற பெயரில் இதுவரை திரட்டிய அறிவு செல்வத்தை ஏற்கனவே நாம் இழந்து விட்டோம். இனிமேலாவது, விஞ்ஞானிகள் தனது ஆராய்ச்சி முடிவுகளை காப்புரிமை என்ற பெயரில் அடகு வைக்காமல், இணையத்தில் பிரசுரிக்க வேண்டும். யார் வேண்டுமானாலும் படிக்கலாம் என்ற வகையில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இப்படி செய்தால் வருங்காலத்திலாவது நமது அறிவுசார் தகவல்களை அனைவருக்கும் கிடைக்கும்படி செய்யலாம்.

கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பல்கலைகழகங்கள் நூலகங்களில் உள்ள அனைத்து புத்தகங்களையும் ஸ்கேன் செய்து ஆவணப்படுத்தி உள்ளார்கள். ஆனால் அவற்றை அனைவருக்கும் கிடைக்கும்படி செய்வதில்லை. ஆராய்ச்சியாளர்கள் தங்களது சக ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுகளை வாசிக்கவே பெரும்பணம் செலுத்த நிர்பந்திக்கப்படுகிறார்கள். வல்லரசு நாடுகளில் உள்ள அதிசிறந்த பல்கலைகழகங்களில் உள்ள அறிவுஜீவிகளுக்கு மட்டும் இந்த அறிவுசார் தகவல்களை பெற அனுமதி கிடைக்கிறது. மற்றவர்களுக்கு குறிப்பாக, மூன்றாம் உலக நாடுகளில் உள்ளோர்க்கு இவற்றை பெற அனுமதிக்காதது ஏன்? இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்த அறிவுசார் களஞ்சியங்களுக்கு காப்புரிமை பெற்றிருக்கிறார்கள். அதனால் அந்த அறிவுசார் தகவல்களை பெறுவதற்கு அதிக விலை நிர்ணயிக்கிறார்கள். “இது சட்டபூர்வமானது. இதை தடுக்க நாம் என்ன செய்ய முடியும்?” என பலர் சொல்கிறார்கள். நம்மால் இயன்றதை செய்யமுடியும். இந்த அநீதியை எதிர்த்து போராட முடியும்.

மாணவர்கள், நூலகர்கள் மற்றும் விஞ்ஞானிகள் போன்றோர்க்கு இந்த அறிவுசார் பொக்கிசங்களை அணுகுவதற்கு சலுகை இருக்கிறது. ஆனால் உலகில் உள்ள ஏனையோர்க்கு இந்த வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த அறிவுசார் பொக்கிசங்களை உலகுக்கு பகிர்வது உங்களது கடமை. அது தான் சரியானதாக இருக்க முடியும்.

சில சமயங்களில் நண்பர்களுக்காக அல்லது சில நல்ல நோக்கங்களுக்காக அறிவுசார் தகவல்களை பதிவிறக்கி உலகுக்கு பகிர்ந்து கொள்கிறீர்கள்.  ஆனால் இந்த நடவடிக்கைகளை “பைரசி”, அதாவது காப்புரிமை பெற்றவற்றை திருடுதல் என்கிறார்கள். தான் பெறமுடிந்த அறிவு செல்வத்தை மற்றவர்களுடன் பகிர்வதை கொலை குற்றத்திற்கும் மேலானதாக சொல்கிறார்கள். ஒரு சுயநலக்காரன் வேண்டுமானால், தனக்கு கிடைத்த அறிவுசார் தகவல்களை தன் நண்பர்களுக்கு கொடுக்காமல் இருக்கலாம். ஆனால் தான் பெற்ற இன்பத்தை பிறர்க்கு அளிப்பதே சிறந்த அறமாகும். அறிவு செல்வத்தை பகிர்வது தார்மீக ரீதியில் ஒருபோதும் குற்றமாகாது.

பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் பேராசைக்காரர்கள். அவர்களுக்கு தேவையான சட்டங்களை இயற்ற அரசியல்வாதிகளை வாங்குகிறார்கள். அறிவுசார் தகவல்களை யார் எப்படி கையாளலாம் என, பெரும் நிறுவனங்களுக்கு பயனளிக்க கூடிய வகையில் சட்டங்களை இயற்றுகிறார்கள். அநீதியான சட்டங்களை பின்பற்றுவது சரியானது அல்ல. இந்த அநீதியான சட்டங்களை எதிர்க்க வேண்டும். அதுவே நமது போராட்ட பாரம்பரியம் ஆகும்.

எங்கெங்கெல்லாம் அறிவுசார் தகவல்கள் சேமிக்கப்பட்டுள்ளனவோ அவற்றை நாம் நகல் எடுத்து உலகுக்கு பகிர வேண்டும். அந்த ஆவணங்களை பாதுகாக்க வேண்டும். இவற்றை சேமிக்க நாம் இரகசிய தரவுத்தளங்களை வாங்க வேண்டும். பின் அவற்றை இணையத்தில் வலையேற்றம் செய்ய வேண்டும். விஞ்ஞான பத்திரிக்கைகளை தரவிறக்கம் செய்து பகிர்வு நெட்வொர்க்குகளில் ஏற்ற வேண்டும். நாம் கொரில்லா முறையில் அறிவுசெல்வத்தை மீட்டெடுக்க போராட வேண்டும்.

உலகெங்கும் வியாபித்திருக்கும் நாம் ஒன்று சேர்ந்து, அறிவு செல்வத்தை தனியார்மயப்படுத்துவதை எதிர்ப்போம். இந்த இழிசெயலை ஒழித்து கட்டுவோம். அறிவுசார் செல்வத்தில் தனியுடைமை என்பதை பழங்கதை ஆக்குவோம். மனித குலத்தின் அறிவுசெல்வத்தை பொதுவுடைமை ஆக்குவோம். நீங்களும் எங்களுடன் சேர்ந்து போராட தயாரா?

-    ஆரன் ஸ்வார்ட்ஸ்
      ஜூலை 2008, எரேமொ, இத்தாலி


தொடர்புடைய பதிவுகள்:

Monday, January 14, 2013

சென்னை புத்தகக் கண்காட்சி 2013 - சில கடைகள், சில புத்தகங்கள்

சென்ற ஆண்டு 8 இலட்சம் பேர் புத்தகக் காட்சியினை பார்வையிட்டனர். இந்த ஆண்டு 12 இலட்சம் பேர் வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இலட்சக்கணக்கில் பார்வையாளார்களை கொண்ட சென்னை புத்தகக் கண்காட்சி வருடாவருடம் திருவிழா போல களை கட்டுகிறது. இந்த வருடம் சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ உடற்பயிற்சி கல்லூரி மைதானத்தில்,  ஜனவரி11 முதல் ஜனவரி23 வரை நடைபெறுகிறது.

பொதுவாக‌ புத்தகக் கண்காட்சியில் சிறுவர்களுக்கான புத்தகங்கள், சுயமுன்னேற்ற புத்தகங்கள், துறை சார்ந்த புத்தகங்கள் மட்டுமே வாங்குகிறோம். சமூகத்தைப் பற்றியும் அதன் இயக்கத்தை பற்றியுமான புத்தகங்களை பெருமளவில் வாங்குவதில்லை. இதன் காரணமாக நமக்கு தினசரி நடக்கும் நமது பிரச்சனைகளுக்கான காரணம் தெரிவதில்லை. பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்தும் ஊடகங்களின் கருத்தையே சரியென நம்புகிறோம்.

சிறுவயது முதல் மதிப்பெண்களுக்காக, வேலை பெறுவதற்காக பெரும்பாலும் படிக்கிறோம். அதற்கப்பால் படிக்கும் பழக்கம் நின்று போய்விடுகிறது. அப்படியே படித்தாலும் தினசரி பத்திரிக்கை மற்றும் ஜனரஞ்சக பத்திரிக்கைகள், சில நாவல்கள் மட்டும் தான். இந்த புத்தகக் கண்காட்சியில் இருந்து, சமூக அக்கறையுள்ள புத்தகங்களை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்வோம். சமூக முன்னேற்றத்திற்கு துணை நிற்போம்.


சில புத்தக கடைகள்:

ஐநூறுக்கும் மேற்பட்ட கடைகள் சென்னை புத்தகக் கண்காட்சியில் இடம் பெற உள்ளன. அவற்றுள் சமூக அக்கறையுள்ள நூல்கள் கிடைக்கும் கடைகளின் எண்கள்;

தமிழ்மண் - 10, 11
தோழமை வெளியீடு - 87
பொன்னி – 149
பெரியார் சுயமரியாதை வெளியீடு – 227
காலச்சுவடு - 242
தமிழ்ப் புத்தகாலயம் – 336
அடையாளம் - 355, 356
நியூ செஞ்சுரி புத்தக நிலையம் - 367
பாரதி புத்தகாலயம் – 460, 461
விடியல் – 516, 517
அலைகள் - 550
கீழைக்காற்று – 551, 552
அம்பேத்கர் ஃபவுண்டேஷன்ஸ் - 571
கருப்புப் பிரதிகள் - 572

 சில புத்தகங்களின் பட்டியல்;
சினிமா: திரை விலகும்போது… – சினிமா விமர்சனங்கள்
“பாரதி”ய ஜனதா பார்ட்டி – வே.மதிமாறன்
பாரதி பக்தர்களின் கள்ள மெளனம் – தோழர். மருதையன்

வால்காவிலிருந்து கங்கை வரை – ராகுல் சாங்கிருத்தியாயன்
பொதுவுடமை என்றால் என்ன? – ராகுல் சாங்கிருத்தியாயன்
ஆப்பிரிக்கர்கள் கண்டு பிடித்த இருண்ட ஐரோப்பா – கலையரசன்

விடுதலைப் போரின் வீரமரபு  - புதிய கலாச்சாரம்
பண்பாட்டு அசைவுகள் – தொ.பரமசிவன்
நான் ஏன் இந்து அல்ல – காஞ்சா அய்லய்யா
இந்து இந்தியா – எஸ்.வி.ராஜதுரை

நான் நாத்திகன் ஏன்? – பகத்சிங்
கம்யூனிசக் கொடியின் கீழ் – ஜூலியஸ் ஃபூசிக்
தூக்கு மேடைக் குறிப்பு – ஜூலிஸ் பூசிக்
போராடும் தருணங்கள் – தோழர் மருதையன்
உலகை குலுக்கிய பத்து நாட்கள் – ஜான் ரீடு
மாவோவின் நெடும்பயணம்  (THE LONG MARCH) – DICK WILSON

புதினங்கள்:
வீரம் விளைந்தது - நிக்கலாய் ஒஸ்திரோஸ்கி
கன்னி நிலம் - மிக்கேல் ஷோலகவ்
ஏழு தலைமுறை - அலெக்ஸ் ஹேலி
ஸ்பார்ட்டகஸ்
சூறாவளி (சீன நாவல்)

வினவு நூல்கள்:
ஜீன்ஸ் பேண்டும் பாலியல் வன்முறையும் – வினவு
ஐ.டி.துறை நண்பா… – வினவு
கடவுள் கைது பக்தன் விடுதலை – வினவு
மும்பை 26/11 விளக்கமும் விவாதமும் – வினவு
சாதியம் ஒழிப்போம் ! தமிழகம் காப்போம் ! – வினவு
இலக்கிய மொக்கைகள் – வினவு



தொடர்புடைய பதிவுகள்:

Monday, January 7, 2013

வல்லுறவு தேசம் இந்தியா!

டெல்லி பாலியல் வல்லுறவு, நடுத்தர வர்க்கத்தின் மனதை உலுக்கியுள்ளது. இப்போது ஊடகங்களும் கணிசமான நேரத்தை வல்லுறவு செய்திகளுக்கும், பாலியல் வன்முறைக்கு எதிரான போராட்டங்களுக்கும் ஒதுக்குகின்றன.

பாலியல் வல்லுறவு - சில காரணங்கள்:

பாலியல் வல்லுறவு பற்றி மனோதத்துவ ரீதியாக எட்வர்ட் ஹேகன் சொல்வதாவது,

1. மேட்டுக்குடி ஆண்கள் (“மைனர்”) திருப்பி அடிக்க முடியாத அல்லது பழிவாங்க முடியாத பெண்களை நிர்ப்பந்திக்கின்றனர்.
2. சமூகத்தில் கேட்பாரற்ற பெண்கள் (எ.கா., அனாதைகள்) அதிகம் பாதிப்படைகிறார்கள். தட்டி கேட்க பெண்ணின் குடும்பத்தினர் இல்லாதிருப்பது வசதியாக போய்விடுகிறது.
3. யுத்தத்தின் போது, எதிரி பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள்.
4. பாலியல் வல்லுறவில் பேரின்பம் காணும் பேர்வழிகள் மற்றும் சைக்கோ செய்யும் வல்லுறவுகள்.

திடுக்கிடும் சில புள்ளி விவரங்கள்:

தேசிய குற்ற ஆவண ஆணையம் 2011 அறிக்கையின்படி இந்தியாவில் ஒவ்வொரு 21 நிமிடங்களுக்கும் பாலியல் வல்லுறவு நடக்கிறது. பதிவாகாத பாலியல் குற்றங்களையும் சேர்த்தால், உண்மை நிலவரம் பேரதிர்ச்சியாகவே இருக்கும்.

2011ஆம் ஆண்டு புள்ளி விவர கணக்குபடி பாதிக்கப்பட்ட பெண்கள் பெரும்பாலானாருக்கு (93%) தெரிந்தவர்களே வன்புணர்ச்சி செய்துள்ளார்கள். (நெருங்கிய உறவினர்கள் 7.5%, அண்டை வீட்டார்கள் 32.4%, தெரிந்தவர்கள் 53.2%, பாலியல் வன்முறையில் ஈடுபடுவோர்களில் தெரியாதவர்கள் 7%).

பாலியல் வல்லுறவு தில்லி, மும்பை போன்ற பெரு நகரங்களில் தான் அதிகம் நடக்கிறது. பாலியல் தொல்லை, ஆள்கடத்தல், வரதட்சணை, சித்திரவதை, ஈவ் டீசிங் என பெண்களுக்கு எதிரான குற்றங்களையும் கணக்கில் எடுத்து கொண்டால், படிப்பறிவில் முன் நிற்கும் கேரளம், ஊடகங்களால் போற்றப்படும் குஜராத், அமைதி பூங்கா என வருணிக்கப்படும் தமிழகம் கூட இதில் விதிவிலக்கில்லை.

கடந்த 40 ஆண்டுகளில் பாலியல் வல்லுறவு கொடுமைகள் பத்து மடங்காக பெருகியுள்ளது. அதாவது 1971 கணக்கின்படி, பாலியல் வல்லுறவின் எண்ணிக்கை 2487இல் இருந்து 24206ஆக உயர்ந்துள்ளது. இவை தான் பதிவான குற்றங்களின் அடிப்படையிலான புள்ளி விவரங்கள் நமக்கு அளிக்கும் செய்தி.

நுகர்வு கலாச்சார வெறி அதிகரிக்க அதிகரிக்க, பெண்களை பண்டமாக சித்தரிக்கும் போக்கும் அதிகரித்தே வருகிறது. பெண்களை பண்டமாக சித்தரிப்பதில் ஜனரஞ்சகம் என்ற பெயரில் மஞ்சள் பத்திரிக்கைகள், டி.வி மற்றும் சினிமாக்கள் பெரும்பங்காற்றுகின்றன. பெண்களை கேவலமாக இழிவுபடுத்தும் ஊடகங்களே இன்று பாலியல் வன்முறைக்கு எதிராக குரல் கொடுப்பது நகைமுரணாக உள்ளது.

ஊடகங்கள் சொல்லாத சோகங்கள் மற்றும் புள்ளி விவரங்களில் பதிவாகாத துயரங்கள்:

1. வடகிழக்கு மாநிலங்களின் துயரநிலை:
மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த மனோரமா என்ற இளம் பெண்ணை ஜூலை 2004, 11 ஆம் தேதி, துணை இராணுவ படை அதிகாரிகள் வல்லுறவுபடுத்தி கொடூரமாக சித்திரவதை செய்து கொன்றனர். இராணுவத்திற்கு வரைமுறையற்ற அதிகாரத்தை கொடுத்தது ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் (1958). பல பத்தாண்டுகளாக காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இராணுவம் அட்டூழியம் செய்து வருகிறது. இந்த கொடூர சட்டத்தை திரும்பப் பெறக் கோரி அம் மாநிலங்களில் மக்கள் போராடி வருகின்றனர். மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ஐரோம் ஷர்மிளா என்ற பெண் 12 ஆண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார்.

2. காசுமீரில் இராணுவத்தின் காட்டாட்சி:
மே 2009இல் காசுமீர் சோபியான் நகரத்து இளம் பெண்கள் இருவரை இராணுவத்தினர் பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்தனர். இதனை எதிர்த்து காசுமீர் மக்கள் பல மாதங்களாக போராடினர். இன்னும் நீதி கிடைக்கவில்லை. நாட்டை காப்பாற்றுவார்கள் என நம்பப்படும் இராணுவத்தினர் இந்திய காசுமீர் பெண்களை மானபங்கப்படுத்தி வருகின்றனர். காசுமீரில் 5,00,000 சிப்பாய்கள் குவிக்கப்பட்டுள்ளனர். 30 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு இராணுவ அட்சியே நடக்கிறது. இத்தனை ஆண்டுகாலம் இராணுவத்திற்கு அங்கு என்ன வேலை?

3. பச்சைவேட்டை என்ற பெயரில் பாலியல் வன்முறைகள்:
சட்டீஸ்கரில், சோனிசோரி என்ற பள்ளி ஆசிரியரை, போலீசு எஸ்.பி அன்கித் கார்க் தலைமையில் போலீசார்கள் பாலியல் வல்லுறவு செய்தனர். பின்பு போலீசார் சொல்லொண்ணாத கொடுமைகளை செய்தனர். அந்த போலீசு எஸ்.பி அன்கித் கார்குக்கு துணிகர போலீசு பதக்கம் வழங்கி கௌரவப்படுத்தியது அரசு. அதிரடிபடையினரும், போலீசாரும் தீவிரவாதிகளை பிடிக்கிறோம் என்ற பெயரில் பழங்குடி மக்களை அச்சுறுத்தி வருகின்றனர். அப்படி அச்சுறுத்தும் போது பாலியல் வன்முறைகளில் ஈடுபடுகின்றனர்.

4. வாச்சாத்தி பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை:
1992 சூன் 20 ஆம் தேதி, வாச்சாத்தியில் சோதனை என்ற பெயரில் 155 வனத்துறையினர், 108 காவல் துறையினர், 6 வருவாய்த்துறையினர் கொண்ட பெரும் படை ஊருக்குள் புகுந்து, வீடு வீடாக சோதனை செய்தனர். வீட்டில் இருந்த பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என அனைவரையும் இழுத்து வந்து ஊரின் மையத்தில் இருந்த பெரிய ஆலமரத்தின் கீழே நிறுத்தி சரமாரியாக அடித்தனர். பின்னர் 18 பெண்கள் மீது பாலியல் வன்முறையில் ஈடுபட்டனர். 19 ஆண்டுகளுக்கு பிறகு தான் 269 பேரின் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 54 பேர் இயற்கையாகவே இறந்து விட்டனர். 17 பேர் மட்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மீதிப்பேர் பிணையில் தப்பித்து வெளியே வந்துவிட்டார்கள். கிடைத்ததும் பாரபட்சமான நீதி தான். தாமதமான நீதி அநீதி தானே.

5. விழுப்புரம் இருளர் பெண்கள்:
2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், விழுப்புரம் மாவட்ட த்தில், திருக்கோவிலூர் காவல் நிலைய போலீசார் 4 இருளர் பெண்களை பாலியல் வல்லுறவு செய்தனர். அப்போது முதல்வர் ஜெயலலிதா 5 போலீசாரை பணி இடை நீக்கம் செய்து தலா 5 லட்சம் கொடுக்க உத்தரவிட்டார். சமீபத்தில் முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பெண்களுக்கு தொல்லை கொடுப்பவர்கள் நடமாட்டத்தை மப்டி போலீசார் கண்காணிக்கும்படி உத்தரவிட்டுள்ளார். உண்மையில், பெண்களுக்கு தொல்லை கொடுக்கும் நிலையம் தான் காவல் நிலையம் என்பது அவருக்கு தெரியாதா என்ன? போலீசாரை யார் கண்காணிப்பது?

மக்களை அடக்கி ஆட்சி செய்ய போலீசு மற்றும் இராணுவத்திற்கு சிறப்பு சலுகைகள் கொடுத்து, வரம்பற்ற அதிகாரங்களை வழங்கி வருகிறது அரசு. போலீசு, இராணுவம் செய்யும் பாலியல் வன்முறைகளை விசாரிப்பதுமில்லை, குற்றவாளிகளை தண்டிப்பதுமில்லை. அருந்ததி ராய் கூறுகையில், "சட்டீஸ்கர், காஷ்மீர் மற்றும் மணிப்பூர் போன்ற இடங்களில், இராணுவம் மற்றும் போலீசு பாலியல் வன்முறையை மக்களுக்கு எதிரான ஆயுதமாக  பயன்படுத்துகிறது. பாலியல் வன்முறை செய்யும் இராணுவத்தினர் மற்றும் போலீசாரை பாதுகாக்க சட்டங்கள் அமலில் உள்ளன." என தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

6. இந்துத்வத்தின் சோதனைசாலை குஜராத்:
குஜராத் 2002 முசுலீம் மக்களை இனப்படுகொலை செய்தபோது, ஆயிரக்கணக்கான பெண்களை இந்து மதவெறியர்கள் பாலியல் வல்லுறவு செய்தனர். குஜராத் இனப்படுகொலை உண்மைகளை, முசுலீம் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை தெகல்கா பத்திரிக்கை ஆதாரங்களுடன் ஆவணப்படுத்தியுள்ளது. இந்து மதவெறியர்களை அம்பலப்படுத்தி, பல சமூக ஆர்வலர்கள் நீதி கேட்டு போராடி வருகின்றனர். இருப்பினும் பெருமளவிலான குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை, வெகுசிலரே தண்டிக்கப்பட்டுள்ளனர்.

7. ஒரிசாவில் விசுவ இந்து பரிசத்தின் வெறியாட்டம்:
2008ஆம் ஆண்டு ஒரிசாவின் காந்தமால் மாவட்டத்தில் விசுவ இந்து பரிசத் (வி.ஹெச்.பி) தலைமையில் கிறித்துவ பழங்குடியினரின் ஊர்களை எரித்தனர். இந்த கொலைவெறியாட்டம் மாதக்கணக்கில் தொடர்ந்தன. அவர்களின் தாக்குதலுக்கு, பாலியல் வன்முறைகளுக்கு கிறித்துவ கன்னியாஸ்த்திரிகளும், பழங்குடி பெண்களும் தப்பவில்லை.

செத்துப்போன இந்து மனசாட்சி:

சட்டீஸ்கர் மாநில மகளிர் ஆணைய தலைவர் மற்றும் பாரதீய ஜனதா தலைவர் விபா ராவ் கூறுகையில் "பெண்களுக்கெதிரான குற்றங்களுக்கு அவர்கள் அணியும் ஆபாச ஆடையே காரணம்" என்கிறார். சமூகத்தின் இந்த ஆணாதிக்க சிந்தனையை தான் மெத்த "படித்த" இளைஞர்களும் பிரதிபலிக்கிறார்கள். பதிவான புள்ளிவிவரங்களின்படி பாலியல் வன்முறைக்கு பலியானவர்களில் 10% சிறுகுழந்தைகளும் அடக்கம். ஆடை தான் காரணமென்றால் சிறுகுழந்தைகளை வல்லுறவு செய்ய காரணமென்ன? மேலும் குஜராத்தில் காவிப்படைகளுக்கு பர்தாக்கள், சிறுகுழந்தைகள், தாய்மார்கள் கண்ணுக்கு தெரியவில்லை. அவர்களை மிருகமாக்கியது இந்து மதவெறி தான்.

ஆர்.எஸ்.எஸ் சர்சங்சலாக்  மோகன் பகவத் "பாலியல் வல்லுறவு இந்தியாவில் தான் நடக்கிறது, பாரதத்தில் இல்லை" என்று பெருமையுடன் கூறியுள்ளார். குஜராத்தில் வெறியாட்டம் போட்ட காவிப்படைகளை அவ்வளவு சீக்கிரத்தில்  மறக்க முடியுமா என்ன? குஜராத் கொடூரத்தையே தாங்க முடியவில்லை, அகண்ட பாரதத்தில் பெண்களின் நிலையை பற்றி கேட்கவா வேண்டும்! சுஸ்மா சுவராஜ், ஜெயலலிதா கோருவது போல் குஜராத்தில் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட காவிப்படைகளுக்கும், அதற்கு பின் நின்ற மோடிகளுக்கும், கேடிகளுக்கும் மரண தண்டனை நிறைவேற்ற வேண்டாமா? சுஸ்மா மற்றும் ஜெயலலிதா குஜராத் முசுலீம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை பற்றி வாய் திறக்கவில்லை என்பது தான் உண்மை.

தமிழகத்தின் மௌனம்:

ஈழத்தில் குழந்தைகள், இளம்பெண்கள், தாய்மார்கள் என வயது வித்தியாசமின்றி ஆயிரக்கணக்கான பெண்களை வல்லுறவு செய்து கொன்றனர். தமிழ் இனப்படுகொலையை கண்டு தமிழகம் மௌனமாகவே இருந்தது. இந்த அவல நிலையை உடைக்கவே முத்துக்குமார் தன்னுயிரை ஈகம் செய்தார். தமிழ் ஊடகங்களும் மௌனமாக இருந்தன. தமிழக ஊடகங்கள் ஈழத்தமிழ் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை கண்டிக்கவுமில்லை, கண்ணீர் சிந்தவுமில்லை.

டெல்லி பாலியல் வன்முறைக்காக நடுத்தரவர்க்கம் இப்போது போராடுகிறது. நீதி கேட்கிறது. நல்ல விசயம். ஆனால் ஊடகங்கள் சொல்லாத சோகங்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன என்பதை நாம் உணரவேண்டும். வர்க்கபேதமின்றி அனைத்து பாலியல் வன்முறை கொடுமைகளுக்கும் எதிராக கிளர்ந்தெழுந்தால் அந்த கோபத்திற்கு உண்மையான அர்த்தம் இருக்கும். அதுவரைக்கும் இந்தியா வல்லுறவு தேசமே!

தொடர்புடைய பதிவுகள்:

Tuesday, March 1, 2011

பச்சையப்பன் கல்லூரி ஏன் அடித்து நொறுக்கப்பட்டது? உண்மை என்ன?


"ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொன்னால் உண்மை ஆகிவிடும்" என்பது மார்க்கட்டிங் விதிகளில் ஒன்று. அதே போன்று தான் அரசும், ஊடகத் துறையை பயன்படுத்தி பச்சையப்பன் கல்லூரி மற்றும் மாணவர்களுக்கு எதிராக தொலைக்காட்சி, பத்திரிகை மூலமாக விசம பிரச்சாரம் செய்து வருகிறது. பொது மக்களும் அதையே உண்மை என நம்ப வைக்கப்பட்டுள்ளனர்.

பச்சையப்பன் கல்லூரி தாக்கப்பட்ட 23ஆம் தேதியில் இருந்து இரண்டு வாரங்கள் பின்னோக்கி சென்று பார்த்தால் உண்மை விளங்கும். பச்சைப்பன் கல்லூரியை கையகப்படுத்தி மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க அரசு முடிவு செய்தது. இதை எதிர்த்து பச்சையப்பன் கல்லூரி ஆசிரியர்கள் உண்ணாவிரதமிருந்தனர். பச்சையப்பன் கல்லூரியை கையகப்படுத்தும் திட்டத்தை கைவிடும் வரை போராட்டம் தொடரும் என பேராசிரியர்கள் அறிவித்தனர். பேராசிரியர்கள் போராட்டத்திற்கு மாணவர்களும், துணை நிற்பதை பார்த்து, அதனை ஒடுக்குவதற்கு சதி திட்டம் தீட்டியது. அதன் ஒரு அங்கமாக பஸ்டே பிரச்சனையை தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் ஊதி பெருக்கியது. பஸ்டே நடந்ததை சாக்காக வைத்து, மாணவர்களையும், பேராசிரியர்களையும் கல்லூரி வளாகத்துக்குள் நுழைந்து அடித்து நொறுக்கியது போலிசு.



ஒரு கல்லூரிக்குள் முதல்வரின் அனுமதி இன்றி நுழைந்து வெறியாட்டம் போட்ட போலீசின் நடவடிக்கை பலரின் பார்வையின் படி சரியென்றாகிறது. ஊடகங்கள் மற்றும் போலீசு என்றைக்காவது உண்மையைச் சொல்லி இருக்கிறதா? லஞ்சம் வாங்குவதையும் மக்களை கொடுமைப்படுத்துவதையும் மட்டுமே வேலையாகக் கொண்ட காவல்துறை மக்கட் நலனுக்காகத்தான் பச்சையப்பன் கல்லூரிக்குள் புகுந்து மாணவர்களை தாக்கியது என்பதில் இம்மியளவாவது உண்மையிருக்குமா? சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

மெட்ரோ ரயில் திட்டத்திற்காக பச்சையப்பன் கல்லூரியை கையகப்படுத்துவதை எதிர்த்து பேராசிரியர்கள் உண்ணாவிரதம் இருந்ததைப் பற்றி அறிய பிப்-9 தேதி தினகரன் செய்தியை பாருங்கள். உண்மை நிலவரம் இப்படி இருக்கும் போது பச்சையப்பன் கல்லூரியை காக்கும் போராட்டத்திற்கு ஆதரவு கரமும், கருத்தும் தருவதே சரியானது.

பச்சையப்பன் கல்லூரியைக் காப்போம் !
போராடும் மாணவர்களுக்கு தோள் கொடுப்போம்!
கருணாநிதி போலீசின் அராஜகத்தை முறியடிப்போம்!!